காணாமல் போன கந்தர் சிலை! -அதிர்ச்சியில் காஞ்சி பக்தர்கள்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உற்சவர் சிலையை மாற்ற வேண்டும் என ஒருதரப்பினரும், அதை மாற்றக் கூடாது என மற்றொரு தரப்பினரும் கூறி வருகின்றனர். இந்த விவகாரம் சிலமாதங்களாகவே காஞ்சிபுரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.

தேர்தல் நேரத்திலும் இந்த சிலை விவகாரம் எதிரொலித்தது. இந்நிலையில், மாற்ற வேண்டும் என்று சொல்லப்பட்ட கந்தர் சிலை, 1993-ம் வருடமே காணாமல் போய்விட்டது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இது குறித்து காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த பாபு என்பவரிடம் பேசியபோது, ''சில மாதங்களுக்கு முன் உற்சவர் சிலையை மாற்ற வேண்டும் என்று கோவில் குருக்கள் தரப்பில் மனு அளித்திருந்தார்கள். கோவில் தரப்பில் பழைய சிலை சேதமடைந்துவிட்டது. நாங்கள் கொண்டு வந்த புதிய சிலையை வைக்க வேண்டும் என்று சொல்லி வந்தார்கள். ஆனால், பழைய கந்தரை சரி செய்ய என்ன செலவு ஆகுமோ அதை தருகின்றோம் என்று நாங்கள் சொன்னோம்.

ஆனால் இந்து சமய அறநிலைத்துறையும், கோவில் நிர்வாகத்தினரும் சேர்ந்து புதிய சிலைக்கு ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்கள். பழைய சிலையின் அளவை எடுத்து தஞ்சாவூரில் புதிய சிலை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள். சிலை சேதமாகியுள்ளது என்று சொல்லப்பட்டதால், மூத்த ஸ்தபதி முத்தையா அந்த சிலையை ஆய்வு செய்தார்.

அப்போது, இந்த சிலை உண்மையான சிலை கிடையாது. இது போலியான சிலை என்று சொல்லி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அதன் பின்னர்தான், உண்மையான கந்தர் சிலை காணாமல்போன விவகாரம் வெளியே தெரிய ஆரம்பித்தது. உடனே, பாரதி என்பவர் தகவல் உரிமை அறியும் சட்டத்தின் கீழ் கேட்ட தகவலின்படி, 1993-ல் உண்மையான கந்தர் சிலை காணாமல் போனதாகவும், சிவகாஞ்சி காவல் நிலையத்தில் வழக்கு இருப்பதாகவும் பதில் அனுப்பப்பட்டு இருக்கிறது.

ஆனால், சிலை காணாமல்போன விஷயம் பக்தர்களுக்கு தெரியாதபடி மறைக்கப்பட்டு, ஆண்டுதோறும் ராஜவீதியில் பிரமோற்சவம் நடந்து வருகிறது. ஒவ்வொரு பிரம்மோற்சவத்தின் போதும் காணாமல் போன தங்க சிலைக்கு பதிலாக வெண்கல சிலையை வைத்து அவர்கள் உற்சவம் நடத்தி பக்தர்களை ஏமாற்றி வருகின்றனர். காவல் நிலையத்திலும், சிலை காணாமல் போனதற்கான எப்.ஐ.ஆர். நகலை கொடுக்க மறுக்கிறார்கள். அனைத்து துறையிலும் இதுபற்றிய தகவலை தரமறுக்கின்றார்கள்.

இதேபோல், ஏற்கனவே இரண்டு பஞ்சலோக சிலைகள் காணாமல்போய் உள்ளது. சாமியின் வைரக்கற்களும் தற்போது காணாமல்போய் உள்ளது தெரிய வந்துள்ளது. கந்தர் சிலையை பற்றியோ, நகையை பற்றியோ தகவல் கேட்டால் உன் வாழ்க்கை பாதிக்கும் என இந்து அறநிலைத்துறையினரிடம் இருந்து எங்களுக்கு மிரட்டல் வருகிறது. மிகவும் பழமை வாய்ந்த அந்த கந்தர் சிலை, 75 சதவிகிதம் தங்கத்தால் ஆனது" என்றார்.

- பா.ஜெயவேல்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!