தேர்தல் வரவு செலவு கணக்கை முகநூலில் வெளியிட்ட வேட்பாளர்! தமிழ்நாட்டில் இப்படியும் ஓர் அதிசயம்

பெரம்பலூர்: கடந்த சட்டமன்ற தேர்தலில் குன்னம் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர், முதன்முதலாக தனது தேர்தல் கணக்கை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்ததோடு, அதை ஃபேஸ்புக்கிலும் பதிவு செய்துள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில், குன்னம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்டவர் ஆலுர் ஷா நவாஷ். இவர் அந்த தேர்தலில் சுமார் 20,000 வாக்குகள் பெற்றிருந்தார்.

இந்நிலையில், தனது தேர்தல் கணக்கை முதன்முதலாக தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்திருக்கிறார். அத்தோடு, தனது ஃபேஸ்புக் சமூக வலைதளத்திலும் பதிவு செய்திருக்கிறார்.

அந்த பதில், ''அன்பு நண்பர்களே..

தேர்தல் வரவு செலவு கணக்குகளை தேர்தல் ஆணையத்திடம் 17-06-2016 அன்று தாக்கல் செய்து, மாவட்ட தேர்தல் அதிகாரியின் ஒப்புகையை பெற்ற பிறகு, 18-06-2016 அன்று (நேற்று) தலைவரை நேரில் சந்தித்து கணக்குகளை ஒப்படைத்தேன்.

குன்னம் தொகுதி வேட்பாளராக நான் அறிவிக்கப்பட்டவுடன் 20-04-2016 அன்று, தேர்தல் நிதி வேண்டி மக்களிடம் கோரிக்கை வைத்தேன். எனது வேண்டுகோளை ஏற்று வந்த தொகை சுமார் 16 லட்சம் ரூபாய் ஆகும். தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்ட செலவுக் கணக்கு 14,66,555/- ரூபாய் ஆகும். இந்த செலவுகள் தேர்தல் ஆணையம் வரையறுத்த நாட்களுக்குள் செலவு செய்யப்பட்டவை மட்டுமே. அதற்கு முன்னரும் பின்னருமான செலவுகள், எஞ்சிய தொகையிலிருந்து செய்யப்பட்டுள்ளன. இதுபோக, தேர்தல் செலவுகளுக்காக நண்பர்களிடம் கடனாகப் பெற்ற சுமார் 2 லட்சம் ரூபாய் திருப்பி அளிக்கப்பட்டுள்ளது. ஓட்டுக்குப் பணம் கொடுப்பது போன்ற எவ்வித முறைகேட்டிலும் ஈடுபடாமல், தேர்தல் ஆணையம் வரையறுத்த அடிப்படையான தேவைகளுக்கே பணம் செலவிடப்பட்டுள்ளன. எனது வேண்டுகோளை ஏற்று உரிய நேரத்தில் உதவிய அனைவருக்கும் நன்றி.

தேர்தல் முடிந்தாலும் தேர்தல் தொடர்பான பணிகள் முடியவில்லை. வாக்களித்த மக்களுக்கு நன்றி அறிவித்தல், மக்கள் பிரச்னைகளுக்காக தொகுதிக்கு அடிக்கடி சென்று வருதல் என பயணம் தொடர்கிறது. உங்கள் அன்பும் ஆதரவும் ஒத்துழைப்பும் எப்போதும் வேண்டும்.

மிக்க அன்புடன்,
ஆளூர் ஷாநவாஸ்'' எனக் கூறியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!