வெளியிடப்பட்ட நேரம்: 12:59 (19/06/2016)

கடைசி தொடர்பு:13:01 (19/06/2016)

கற்கள் வீசி தாக்குதல்... வலைகள் கிழிப்பு... தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்!

ராமேஸ்வரம்: மீன்பிடிக்க கடலுக்கு சென்ற தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் கற்களை வீசி தாக்கியதோடு, மீன்பிடி வலைகளையும் கிழித்துள்ளனர்.

ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நேற்று நள்ளிரவு பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதிகளில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதனால் பதட்டமடைந்த மீனவர்கள் அப்பகுதியில் இருந்து கரையை நோக்கி திரும்ப துவங்கினர்.

இதனால் ஆத்திரம் அடைந்த இலங்கை கடற்படையினர் தங்கள் கப்பலை கொண்டு மீன்பிடி படகுகளின் மீது மோதினர். இதில் பாம்பனை சேர்ந்த ஜஸ்டின் என்பவருக்கு சொந்தமான படகு சேதமடைந்தது. மேலும் இலங்கை கடற்படையினர் கல்வீசியதில் இந்த படகில் இருந்த மீனவர் சேசுராஜாவுக்கு காயம் ஏற்பட்டது. இதன் பின்னர் அங்கிருந்து கிளம்பிய இலங்கை கடற்படையினர் தங்கள் கண்ணில் பட்ட தமிழக படகுகளை எல்லாம் சுற்றி வளைத்து அவர்கள் கடலில் வீசியிருந்த மீன்பிடி வலைகளை அறுத்து எறிந்தனர்.

இதனால் உயிருக்கு பயந்த மீனவர்கள் கடலில் பாய்ச்சிய வலைகளை விட்டு விட்டு இன்று காலை கரை திரும்பினர். வலைகள் கடலில் போனதால் மீன்பிடிக்க முடியாமல் கரை திரும்பிய மீனவர்கள் ஒவ்வொருவருக்கும் பல ஆயிரம் ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தும் தாக்குதலையும், சிறைபிடிப்பையும் தடுத்து நிறுத்த கோரி தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதத்திற்கு மேல் கடிதம் எழுதியவாறு உள்ளார். கடந்த வாரம் டெல்லி சென்ற முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடியிடம் மீனவர் பிரச்னை தொடர்பாக நேரில் வலியுறுத்தி வந்துள்ளார்.

நேற்று சென்னையில் நடந்த அ.தி.மு.க செயற்குழு கூட்டத்திலும் மீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியிருப்பது மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

-இரா.மோகன்

படங்கள்: உ.பாண்டி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்