வெளியிடப்பட்ட நேரம்: 10:39 (04/07/2016)

கடைசி தொடர்பு:11:40 (04/07/2016)

570 கோடி கண்டெய்னர் பணம் யாருடையது? சி.பி.ஐ விசாரிக்க உத்தரவு

திருப்பூர் அருகே கன்டெய்னர் லாரியில் ரூ.570 கோடி பிடிபட்டது தொடர்பாக உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

2016 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நேரத்தில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தபோது, திருப்பூரில் மூன்று கன்டெய்னர் லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்ட 570 கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும்படை பறிமுதல் செய்தது. இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், ''தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடந்தபோது, கடந்த மே மாதம் 13-ம் தேதி திருப்பூரில் 3 கன்டெய்னர் லாரிகளில் ஏற்றிச் செல்லப்பட்ட பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த லாரிகளில் ரூ.570 கோடி இருந்தது. இந்தப் பணத்தைக் கொண்டு வந்தவர்களிடம் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை.

பணம் கொண்டு வந்த 3 கன்டெய்னர் லாரிகளின் பதிவு எண்களும் போலியானவை  என்று தெரிய வந்துள்ளது. இந்தப் பணம் யாருக்காக, எங்கிருந்து எடுத்துச் செல்லப்படுகிறது என்பது குறித்து விசாரித்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதன் பின்னர், சட்டத்துக்கு புறம்பாக எடுத்துச் செல்லப்பட்ட இந்தப் பணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று கடந்த மே 30ம் தேதி சி.பி.ஐ. இயக்குநர், இணை இயக்குநர் உள்ளிட்டோருக்கு புகார் மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, என் புகார் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்த சி.பி.ஐ. இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு, நீதிபதி ஆர்.சுப்பையா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ''பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடி யாருக்காக எடுத்துச் செல்லப்பட்டது என்பதில் மர்மம் நீடித்துக் கொண்டே வருகிறது. சி.பி.ஐ. விசாரணை நடத்தினால், இந்த மர்மம் விலகும்" என்று வாதிட்டார். இதைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ''மனுதாரர் கொடுத்த புகார் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?, அந்த புகாரின் நிலை என்ன என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அறிக்கையாக சி.பி.ஐ. தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை குறித்து 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்" என்றும் கூறியிருந்தார். உள்ளார்.

நீதிபதி சுப்பையா விசாரித்து வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குவதாக கூறப்பட்டிருந்தது. இந்நிலை யில் இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக்கோரி உத்தரவிட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்