வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (05/07/2016)

கடைசி தொடர்பு:11:44 (05/07/2016)

மீண்டும் முட்டைக் கொள்முதலில் ஊழல்? -டெண்டர் விதிகளை மாற்றிய அதிகாரிகள்

த்துணவுத் திட்டத்தின் மூலம் பள்ளிக் குழந்தைகளுக்கு முட்டை வழங்குவதற்கான டெண்டரை அரசு அறிவித்துவிட்டது. கடந்த ஆண்டுகளைப் போலவே, ' இந்த ஆண்டும் முட்டை கொள்முதலில் ஊழல் நடக்க இருக்கிறது. கடந்தமுறை கோலோச்சிய கம்பெனிக்கே ஒட்டுமொத்த ஆர்டரும் செல்லும் வகையில் டெண்டர் விதிகளை மாற்றிவிட்டனர்' என குமுறுகின்றனர் முட்டை உற்பத்தியாளர்கள்.

தமிழக அரசின் சமூக நலத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்(ICDS) மூலம் முட்டை கொள்முதலுக்கு டெண்டர் விடப்படுகிறது. இதன்மூலம் மதிய உணவு சாப்பிடும் 55 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைகின்றனர். தற்போது சமூக நலத்துறையின் சார்பில் முட்டை கொள்முதலுக்கான டெண்டர் அறிவிக்கப்பட்டுவிட்டது. கடந்த அ.தி.மு.க ஆட்சியில் முட்டை கொள்முதலில் ஊழல் நடப்பதாகக் குற்றம் சாட்டினார் தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின். இதுபற்றிப் பேசிய அவர், " தி.மு.க. ஆட்சியில் சத்துணவு மையங்களில் சாப்பிடும் குழந்தைகளுக்கு வாரத்தில் 5 நாட்கள் முட்டை போடும் திட்டம் தொடங்கப்பட்டது. அரசு நிர்ணயித்த விலை ரூ.4.36. இப்போது முட்டை விலை 3.15 ரூபாய் மட்டுமே. மீதமுள்ள ரூ.1.21 எங்கே போகிறது என்பது உங்களுக்குத் தெரியும். அ.தி.மு.க ஆட்சியில் முட்டை கொள்முதலில் மட்டும் ரூ.500 கோடி ஊழல் நடந்துள்ளது என பகிரங்கமாகத் தெரிவிக்கிறேன்"  எனக் கொந்தளித்தார். எதிர்க் கட்சிகளும் இந்த விவகாரத்தை சட்டசபையில் கிளறின. எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டை மறுத்து அப்போதைய அமைச்சர் வளர்மதி நீண்ட விளக்கமே கொடுத்தார்.

 

இந்நிலையில், தற்போது முட்டை கொள் முதலுக்கான டெண்டரை(Tender Ref. No :Roc.5352/NMP/2016 Dated.24.06.2016) அறிவித்துள்ளது சமூக நலத்துறை. டெண்டர் விண்ணப்பத்தைப்  பூர்த்தி செய்து அனுப்புவதற்கு வருகிற 25-ம் தேதி, கடைசி நாளாக அறிவித்துள்ளனர். அன்றைய தினமே, டெண்டர் பிரிக்கும் வேலைகளும் நடக்க இருக்கின்றன. இதற்காக வகுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகளைப் பார்த்துக் குமுறிக் கொந்தளிக்கின்றனர் ஒப்பந்ததாரர்கள். அவர்கள் நம்மிடம், " தி.மு.க ஆட்சியில் மாவட்டம்தோறும் முட்டை கொள்முதலுக்கு என தனித்தனியாக டெண்டர் விடப்பட்டது. இதனால் அந்தந்த மாவட்டங்களில் உள்ள சிறிய அளவில் முட்டை வணிகம் செய்பவர்கள் ஓரளவு பலனடைந்தனர்.

சத்துணவு மையங்களுக்கு தடையில்லாமல் சப்ளை செய்யப்பட்டு வந்தது. அன்றைய தினத்திற்கான முட்டையை முதல்நாளே பள்ளிகளுக்குக் கொண்டு செல்லவும் முடிந்தது. இப்போதெல்லாம் ஒரு வாரத்திற்கான முட்டையை முன்பே சப்ளை செய்துவிடுகின்றனர். சத்துணவு ஒருங்கிணைப்பாளரிடம், அன்றே சப்ளை செய்யப்பட்டது போல எழுதி வாங்கிக் கொள்கின்றனர். எங்களுக்கு வருகிற வாய்ப்பைக் கெடுக்க வேண்டும் என்பதற்காக, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மாநிலம் முழுவதும் ஒரே டெண்டர் என்ற நடைமுறையைக் கொண்டு வந்தனர். இதனால் குறிப்பிட்ட ஒரே ஒரு கம்பெனி மட்டுமே அதிக லாபத்தை சம்பாதித்தது. இந்தக் கம்பெனி அதற்கு முந்தைய தி.மு.க ஆட்சியில் சிறிய அளவில் சத்துணவு வேலைகளை எடுத்துச் செய்து வந்தது.

கடந்த ஆட்சியில் இதன் வளர்ச்சி எங்கேயோ போய்விட்டது. இந்தமுறை முட்டை கொள்முதலில் பல விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதில், அதிர்ச்சிகரமான சில விஷயங்கள் உள்ளன. அரசுத்துறையில் ஒரே ஒரு சிங்கிள் காண்ட்ராக்ட் மூலம் 90 கோடிக்குப் பணிகள் எடுத்துச் செய்திருக்க வேண்டும்; 200 டெலிவரி பாயிண்டுகளில் முட்டைகளை விநியோகித்திருக்க வேண்டும்; ஆண்டு விற்பனை 75 கோடி ரூபாய் அளவுக்கு இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். இந்தத் தகுதிகள் எல்லாம் குறிப்பிட்ட 'அந்த'க் கம்பெனிக்கு மட்டுமே உள்ளது.

தேசிய அளவில் டெண்டர் விடுவதன் நோக்கமே, அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும் என்பதற்காகத்தான். அதிலும், முன்வைப்புத் தொகையாக 5 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்கின்றனர். இவ்வளவு பெரிய தொகையைச் செலுத்தி, டெண்டரில் பங்கேற்க உள்ளூர் வியாபாரிகளால் முடியாது. டெண்டரில் குறிப்பிடப்பட்டுள்ள பல விதிமுறைகளைப் பார்த்தால், வேறு யாருமே பங்கேற்க முடியாமல் போவதற்கான வாய்ப்புகள் மட்டுமே அதிகம். இதன் பின்னணியில் தலைமைச் செயலகத்தின் உயர் அதிகாரிகள் பலர் இருக்கிறார்கள்" என ஆதங்கப்பட்டார் அவர்.

இதுபற்றி நம்மிடம் பேசிய சமூகநலத்துறை அதிகாரி ஒருவர், " முட்டை கொள்முதலில் தரமான கம்பெனிகள் பங்கேற்க வேண்டும் என்பதற்காகத்தான் கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்படுகின்றன.தேசிய முட்டை வாரியம் அறிவிக்கும் விலையைவிடவும், நாங்கள் கொள்முதல் செய்யும் விலை மிகவும் குறைவாகத்தான் இருந்து வந்துள்ளது. அக்மார்க் தரம் வாய்ந்த, 45 கிராம் எடை கொண்ட முட்டைகள் மட்டுமே வாங்கப்படுகின்றன. எந்தவிதமான முறைகேட்டிற்கும் இடமளிக்காத வகையில்தான் கொள்முதல் செய்யப்படுகிறது" என்றார்.

' மீண்டும் முட்டைக் கொள்முதலில் ஊழல்' என சட்டசபையில் எதிர்க்கட்சிகள் புயலைக் கிளப்பாமல் இருந்தால் சரிதான்...!

ஆ.விஜயானந்த்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்