இறந்து போன தாய் யானையை முட்டி எழுப்ப முயற்சிக்கும் குட்டி யானை...! - நெஞ்சை உருக்கும் வீடியோ!

கோவை: கோவையில் தாய் யானை இறந்தது தெரியாமல், அதை குட்டி யானை பல மணி நேரம் எழுப்ப முயன்ற பாசப்போராட்டம் காண்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
 

கோவையில் அடுத்தடுத்து யானைகள் பலியாகி வரும் நிலையில், இன்று காலை மற்றொரு பெண் யானை இறந்தது. 30 வயது மதிக்கத்தக்க அந்த பெண் யானை,  உடல் நலக்குறைவால் இறந்ததாக கூறப்படுகிறது.

குட்டி யானையுடன் வந்தபோது, திடீரென பள்ளத்தில் மயங்கி விழுந்த பெண் யானை, அங்கேயே இறந்தது. இந்த சம்பவத்தின் போது உடனிருந்த குட்டி யானை,  தாய் யானை இறந்தது தெரியாமல் அதனை  முட்டி முட்டி எழுப்ப முயன்றது. பல மணி நேரம் யானையை தட்டியும், முட்டியும் எழுப்ப முயன்ற குட்டி யானை, யானை எழுந்திரிக்காததால் ஓலமிட்டது.

 


மேலும் யானைக்கு அருகில் யாரும் வர விடாமல், வர முயன்றவர்களை துரத்தியது. குட்டி யானையின் இந்த பாசப்போராட்டம் காண்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. குட்டி யானை அங்கிருந்து சென்ற பின்னர் யானையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனை செய்யப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

ச.ஜெ.ரவி
வீடியோ: தி.விஜய்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!