அரசுப் பேருந்து மோதி காயமடைந்த யானை உயிரிழப்பு!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே பேருந்து மோதி காயமடைந்த யானை, மருத்துவர்களின் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. சமீபத்தில், சூளகிரி அருகே 5 யானைகள் விளைநிலங்களை நாசமாக்கின. இதையடுத்து வனத்துறையினர், யானைகளை கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியை மேற்கொண்டனர். திடீரென அந்த யானைகள் மாயமாகின. அதனால், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தினர்.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு மேலுமலை காப்புக்காட்டில் இருந்து 2 யானைகள் வெளியேறின. இந்த யானைகள், ஒமேதேபள்ளி காப்புக்காட்டுக்கு செல்வதற்காக கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அடுத்த மருதாண்டபள்ளியில் அதிகாலை 4.45 மணிக்கு சாலையை கடக்க முயன்றன.

அப்போது, கும்பகோணத்தில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற அரசு விரைந்து பேருந்து, ஒரு யானை மீது மோதியது. இதில், 15  வயதுடைய அந்த யானையின் இடதுகால் முறிந்து. அதனால், நிற்க முடியாமல் சாலையில் அந்த யானை சுருண்டு விழுந்தது. உடனடியாக பேருந்து ஓட்டுநர் அன்புமணி, கண்டக்டர் சாமிநாதன் ஆகியோர் சூளகிரி போலீசாருக்கு இந்த விபத்து பற்றி தகவல் தெரிவித்தனர்.

தகவலறிந்து வனத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அப்பகுதியில் போக்குவரத்தை மாற்றி விட்டனர். யானையின் மீது மோதிய பேருந்தை சூளகிரி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பயணிகள் அனைவரும் மாற்று பேருந்தில் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சூளகிரியில் இருந்து வந்த கால்நடை மருத்துவர்கள், யானைக்கு சிகிச்சை அளிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து கிரேன் வரவழைக்கப்பட்டு, அந்த யானையை தூக்கி டிரெய்லர் லாரியில் ஏற்றி பேரண்டபள்ளி வனப்பகுதிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த யானை உயிரிழந்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 6 யானைகள் உயிரிழந்துள்ள சம்பவம், வன ஆர்வலர்களிடை அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!