Published:Updated:

`சாகுற வரைக்கும் மழைத்தண்ணி மட்டும்தான்!' -ஈரோட்டில் ஒரு வைராக்கிய மனிதர்

கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கும் மேலாக சேமித்து வைத்திருக்கும் மழைநீரை மட்டுமே அருந்திவரும் அதிசய மனிதராக இருக்கிறார், ஈரோட்டைச் சேர்ந்த தேவராஜ்.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் ஆரம்பித்து கடைக்கோடியான கன்னியாகுமரி வரை ஒரே தொனியில் ஒலிக்கும் குரல், 'தண்ணீர் இல்லை’ என்பதுதான். மழைக் காலங்களில், பல கோடி லிட்டர் தண்ணீர் கடலில் கலப்பதும், கோடைக் காலங்களில் ஒரு குடம் தண்ணீருக்காக கால் கடுக்க நடப்பதும் நம்முடைய வழக்கமாக மாறிப்போயிருக்கிறது. முறையான நீர் நிர்வாகத்தை அரசு மேற்கொள்ளவில்லை என்பது தான் இந்தக் குடிநீர்ப் பிரச்னையின் அடிநாதம்.

அதேநேரத்தில், ஒரு தனிமனிதனாக நாம் தண்ணீரை எப்படி சிக்கனமாகப் பயன்படுத்துகிறோம், சேமிக்கிறோம் என்பதும் பெரும் கேள்வியாக இருக்கிறது. 'நிலத்தினடியில் மிச்சமிருக்கும் கடைசி சொட்டு நீரையும் எடுக்காமல் விடமாட்டேன்’ என 21-ம் நூற்றாண்டு மனிதர்கள் மனசாட்சி இன்றி செயல்பட்டு வருகிறார்கள். இப்படிப்பட்ட நாட்டில், கடந்த ஏழு வருடங்களாக வீட்டிலிருக்கும் பாத்திரங்களிலெல்லாம் பல நூறு லிட்டர் மழைநீரை சேமித்து, அதை மட்டுமே அருந்திவருகிறார், ஈரோட்டைச் சேர்ந்த தேவராஜ்.

ஈரோடு சூரம்பட்டி நேரு வீதியிலுள்ள தேவராஜ் வீட்டிற்குச் சென்றோம். சாதாரண ஓட்டு வீடுதான். வீட்டின் தாழ்வாரத்தில் தகரம் அமைத்து, மழைநீரை சேமிப்பதற்கான அமைப்பை அவ்வளவு நேர்த்தியாகச் செய்திருந்தார். வீட்டின் ஒரு பகுதியில், பெரிய பாத்திரங்கள் முதல் சிறிய பாத்திரங்கள் வரை கைக்குக் கிடைத்த பாத்திரங்களில் எல்லாம், மழைநீரைப் பிடித்து சேகரித்து வைத்திருக்கிறார். அந்தப் பாத்திரங்கள்மீது, அது எந்தத் தேதியில் பிடிக்கப்பட்டது என்பதையும் ஒரு சீட்டில் எழுதி ஒட்டியிருந்தார். அதோடு இல்லாமல், 'மழைநீர் உயிர்நீர்’ என்ற வாசகத்துடன் அவரது பெயரான தேவராஜ் என்பதையும் சேர்த்து நெற்றியில் பச்சைக் குத்தி, தண்ணீர் மீதான அவருடைய பக்தியைக் காட்டுகிறார்.

தேவராஜ்
தேவராஜ்

நம் கையில் ஒரு பாட்டில் நிறைய மழை நீரைக் கொடுத்தவர், ‘இது 2017 டிசம்பர்ல புடிச்சி வச்ச தண்ணி. இதுக்கு முன்னாடி இந்த மாதிரி தித்திப்பான, சுத்தமான தண்ணியை நீங்க உங்க வாழ்க்கையிலேயே குடிச்சிருக்க மாட்டீங்க. குடிச்சிப் பாருங்க’ என கொடுக்க, கொஞ்சம் பதற்றத்தோடு அந்தத் தண்ணீரை நாம் குடித்துப்பார்த்தோம். உண்மையிலேயே அந்தத் தண்ணீர் அவ்வளவு சுவையாக இருந்தது. தூய மழைநீரை அருந்திய புத்துணர்ச்சியில், தேவராஜிடம் பேச ஆரம்பித்தோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மழைத் தண்ணியைக் குடிச்சா ஏதாவது உடம்புக்கு பிரச்னை வந்திடும்னு மக்கள் பயப்படுறாங்க. நான் இந்த மழைத்தண்ணியை அதிகாரிகள்கிட்ட கொடுத்து டெஸ்ட் பண்ணி சர்டிஃபிகேட் வாங்கியிருக்கேன்.
தேவராஜ்

“என்னோட பேர் தேவராஜ். மனைவி மகேஸ்வரி. எனக்கு ரெண்டு பசங்க இருக்காங்க. ரெண்டு பேருக்குமே கல்யாணம் ஆச்சு. நான் 3-வது வரைக்கும்தான் படிச்சிருக்கேன். விவரம் தெரிஞ்ச காலத்துல இருந்து, தெரிஞ்ச வேலையெல்லாம் செஞ்சிருக்கேன். கிடைக்கிற காசை வெச்சிக்கிட்டு சந்தோஷமாக போய்க்கிட்டு இருந்த என்னோட வாழ்க்கையில, 2013 மே 31-ம் தேதியை மறக்க முடியாது. அன்னையில இருந்துதான் நான் மழைநீரை குடிக்க ஆரம்பிச்சேன். அப்போதிலிருந்து இப்ப வரைக்கும், நான் மழைத் தண்ணியை மட்டும்தான் குடிச்சிக்கிட்டு இருக்கேன். இன்னைக்கு தமிழ்நாட்டுல பல இடத்துல தண்ணீர் தட்டுப்பாடு இருக்கு. அதே நேரத்துல, பெய்ற மழைநீரை நாம சேமிச்சு வைக்காம வீணாக்கிட்டு இருக்கோம். சரி, குறைந்தபட்சம் நம்ம வீட்டுக் கூரையில விழுற மழைநீரையாவது வீணாக்காம, சேமிச்சுவச்சு பயன்படுத்தணும்னு எதார்த்தமா தோன்றிய எண்ணம்தான், இன்னைக்கு வரைக்கும் என்னைத் தொடர்ந்து அதைச் செய்ய வெச்சிக்கிட்டு இருக்கு.

மழைநீர் சேகரிப்பில் தேவராஜ்
மழைநீர் சேகரிப்பில் தேவராஜ்

வீட்டுக் கூரையின் மேல விழுற தண்ணியை ஒரு தகரத்தை வச்சி, வீட்டுக்குள்ள இருக்கிற பாத்திரத்தில் விழுற மாதிரி செஞ்சிருக்கேன். அப்படி மழை பெய்யும் நேரத்துல புடிக்கிற தண்ணி, ரெண்டு நாளையில தெளிஞ்சிடும். அதுக்கப்புறம் அதை துணியை வச்சி வடிகட்டி, பாத்திரத்துல போட்டு மூடி வச்சிட்டா, எத்தனை வருஷத்துக்கு வேணும்னாலும் வச்சிருந்து பயன்படுத்தலாம். இந்தத் தண்ணியை நான் குடிக்க மட்டும்தான் பயன்படுத்துவேன். இந்த மழைத் தண்ணியில தித்திப்பு, வாசம், ருசி, துவர்ப்பு எனப் பல விஷயங்கள் இருக்கு.

Vikatan

அதுமட்டுமல்லாம, இந்த மழைத் தண்ணியைக் குடிக்கிறதால, உடல் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கு. டீ, காபிகூட இந்த மழைத் தண்ணியிலதான் போட்டுக் குடிக்கிறேன். இப்போ, என்கிட்ட சுமார் 700 லிட்டர் மழைநீர் இருக்கு. இந்தத் தண்ணியை நான் கடவுளா நெனச்சு தொட்டு வணங்கி தினமும் குடிச்சிட்டு வர்றேன். சாகுற வரைக்கும் மழைத் தண்ணியைத் தவிர வேற எந்தத் தண்ணியையும் குடிக்க மாட்டேன்னு வைராக்கியத்தோட வாழ்ந்துக்கிட்டு இருக்கேன். இந்தத் தண்ணியைக் குடிக்கிறதால, உடம்புக்கு எந்தப் பிரச்னையும் வராது. இந்தத் தண்ணியைக் குடிச்சி, நான் எவ்வளவு ஜம்முனு இருக்கேன்னு நீங்களே பாருங்க” என உற்சாகமானார்.

மழைநீரை வடிகட்டும் தேவராஜ்
மழைநீரை வடிகட்டும் தேவராஜ்

தொடர்ந்து பேசியவர், “வீட்டை விட்டு நான் எங்கயாவது வெளிய போனா, வீட்ல இருந்தே தண்ணியை எடுத்துட்டுப் போயிடுவேன். மழைத் தண்ணியைக் குடிச்சா ஏதாவது உடம்புக்கு பிரச்னை வந்திடும்னு மக்கள் பயப்படுறாங்க. நான் இந்த மழைத்தண்ணியை அதிகாரிகள்கிட்ட கொடுத்து டெஸ்ட் பண்ணி சர்டிஃபிகேட் வாங்கியிருக்கேன். அந்த ரிசல்ட்டுல தண்ணி சுத்தமானதுன்னு சொன்னாங்க. என்னைப் பார்த்து ஒருசிலர், மழைநீரைக் குடிச்சிக்கிட்டு வர்றாங்க. ஆனா, அவங்க தொடர்ந்து செய்யுறதில்லை.

எல்லா மக்களும் மழைநீரைக் குடிக்க பழகிக்கணும். இப்படி எல்லாரும் செய்ய ஆரம்பிச்சா, நாட்டில் தண்ணீர்ப் பஞ்சம் என்கின்ற பேச்சுக்கே இடமில்லை. என்னோட வீட்டுல எப்பவும் குறைந்தபட்சம் 500 லிட்டருக்கும் குறையாம மழைத்தண்ணியை வச்சிருப்பேன். இதேமாதிரி, வீட்டுக்கு 500 லிட்டர் எனத் தமிழக மக்கள் மழை பேயும்போது தண்ணீரை சேமித்து வச்சு குடிக்கலாம். தூய்மையான மழைநீரைக் குடித்தால், உடலுக்குப் புத்துணர்ச்சி மட்டுமல்லாமல், மக்களிடம் மேன்மையான குணங்களும் உண்டாகும். குழந்தைகள்கிட்ட இருந்து இந்த விஷயத்தை ஆரம்பிச்சா, வருங்கால தலைமுறை ஆரோக்கியமாக வளரும். விரைவிலேயே ஸ்கூல், காலேஜ் எனப் பல இடங்களுக்குச் சென்று இளைய தலைமுறையினரிடம் விழிப்புணர்வு செய்யவிருக்கிறேன். வளரும் தலைமுறைகளாவது ஆரோக்கியமாக இயற்கையோடு இயைந்து வாழட்டும்” என்றார்.

தண்ணீர் மீது பக்தியும் மரியாதையும் வைத்துள்ள தேவராஜைப் போன்ற மனிதர்களுக்காகவே மழை பெய்கிறது போலும்!

மழை நீரை நேரடியாகக் குடிக்கலாமா? நிபுணர்கள்  சொல்வது என்ன?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு