சாலையில் அன்னதானம்! - மதுரை அருகே விநோத திருவிழா


துரை, மேலூர் அருகே உள்ள உறங்கான்பட்டி கிராமத்தில் வினோதமுறையில் சாலையில் அமர்ந்து சாப்பிடும் அன்னதான திருவிழா நடைபெற்றது.  ஸ்ரீ மாயாதவுதாரர் சுவாமிக்காக வேண்டுதல் இருந்து உறங்கான்பட்டியை சேர்ந்த சோமி வகையறாக்களால் இந்த திருவிழா நடத்தப்படுகிறது.

இது குறித்து அந்த கிராமத்தைச் சார்ந்த கதிரேசன் என்பவரிடம் கேட்டபோது," 'மாயாவுதாரர்' என்பது, கள்ளழகர் மறு உருவம் என்பர். அவர் உறங்கான்பட்டியில் நிலைகொண்டு மக்களுக்கு பசி பஞ்சத்தை போக்கும் பொருட்டு அருள் வழங்குகிறார். முன்பெல்லாம்  நெற்கஞ்சியை கூட பார்க்காத ஏழை மக்கள் பலர் இருப்பார்களாம். அதனால் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இது போன்ற அன்னதானம் நடத்துவார்களாம். இங்கு எல்லோரும் சமம் என்ற நிலையை அனைவரும் உணர்வதற்காக இவ்வாறு சாலையிலேயே இலையிட்டு உணவு வழங்குவார்களாம்.

இது 500 ஆண்டுகள் தொன்று தொட்டு நடந்து வருகிறது. ஆனால் சுமார் 20 ஆண்டுகளாக சில பிரச்னைகளால் தடைபட்டுக் கிடந்தது. தற்போது, மீண்டும் இந்த அன்னதான விழா தொடங்கவுள்ளது. ஆடி பெளர்ணமிக்கு முன்னதாகவே, இந்த திருவிழா நடத்தப்படும். ஏனென்றால் பெளர்ணமி அன்று அழகர்கோயில் சென்று தீர்த்தமாடி வழிபடவேண்டும் என்பதற்காக. இந்த அன்னதான திருவிழா இனி தொடர்ந்து நடைபெற வேண்டும என்று ஊர் பெரியவர்களும் கிராம அம்பலக்காரர்களும் முடிவு செய்தனர். இந்த அன்னதான விழாவில் சாப்பிட்டு மட்டும் போகாமல், தங்களின் குடும்பத்திற்கும் உணவுகளை வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். அவ்வாறு வீட்டிற்கு எடுத்துச் செல்வதால் வீட்டில் எப்போதும் அன்னம் செழிப்பமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.'' என்றார்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில்,  உணவுகளை தள்ளுவண்டிகள் மூலம் சாலை வழியாகக் கொண்டு சென்று அனைத்து பக்தர்களுக்கும் பரிமாறினர். ஏழை, பணக்காரர், ஜாதி பாகுபாடு அனைத்தையும் ஒதுக்கி, அனைவரும் வெயிலை துச்சமாக மதித்து இந்த அன்னதானத்தில் கலந்து கொண்டனர்.

- சே.சின்னதுரை

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!