அம்மா தியேட்டராகிறது சென்னை பிட்டி தியாகராயர் அரங்கம்!

சென்னை தியாகராய நகரில் உள்ள  பிட்டி தியாகராயர் அரங்கத்தை அம்மா தியேட்டராக மாற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

ஏழை எளிய மக்கள் குறைந்த செலவில் சினிமா பார்க்கும் வகையில் அம்மா தியேட்டர்கள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அம்மா தியேட்டரை  உருவாக்கும்  பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

முதல் கட்டமாக சென்னையில் இரு இடங்களில் அம்மா தியேட்டர் அமைய இருக்கிறது. இந்த தியேட்டர்களில் குறைந்தபட்ச டிக்கெட் 10 ரூபாய்க்கும் அதிகபட்ச டிக்கெட் 30 ரூபாய்க்கும் விற்கப்படும்.  தியேட்டர்களை உடனடியாக கட்டுவது சாத்தியமில்லாத காரியம் என்பதால், முதலில் மாநகராட்சிக்கு சொந்தமான அரங்கங்களை தியேட்டர்களாக மாற்ற முடிவெடுக்கப்பட்டு உள்ளது

அந்த வகையில், தியாகராய நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கம் அம்மா தியேட்டராக மாறுகிறது. அதுபோல் ஷெனாய் நகரில் உள்ள அரங்கமும் அம்மா தியேட்டராக மாற்றப்பட உள்ளது.  இந்த இரு அரங்கங்களும் முற்றிலும் குளிர்சாதன வசதி  செய்யப்பட்டவை.

ஷெனாய் நகர் அரங்கத்தில் 3 ஆயிரம் பேர் அமர்ந்து படம் பார்க்க முடியும். அப்படி பார்த்தால் தமிழகத்திலேயே மிகப் பெரிய தியேட்டராக இது உருவாகும். சுமார் 18 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஷெனாய் நகர் அரங்கத்தில் எலக்ட்ரிக்கல் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன.முதலில் இந்த இரு அரங்கங்களையும் திறந்த பின்னர் மற்ற இடங்களில் அம்மா தியேட்டர் அமைக்கப்படும்.

சென்னை முகப்பேரில் மின்வாரியத்துக்கு சொந்தமான 3.94 ஏக்கர் நிலத்தில் அம்மா தியேட்டர், நவீன மால்களுக்கு இணையாக கட்டப்படவுள்ளது. இதற்காக அந்த நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது.  அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா சிமென்ட் என்ற வரிசையில் அம்மா தியேட்டரும் இடம் பெறவுள்ளது. அம்மா தியேட்டர் அருகே அம்மா சந்தைகளை தொடங்கவும்  திட்டமிடப்பட்டு உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!