வெளியிடப்பட்ட நேரம்: 11:32 (28/07/2016)

கடைசி தொடர்பு:15:48 (09/07/2018)

தமிழக மீனவர்களை அச்சுறுத்த சொறி மீன்களா? - சீன சதியா!

ராமேஸ்வரம்: தங்கள் கடல் பகுதிக்குள் வரும் தமிழக மீனவர்களை அச்சுறுத்துவதற்காக, சீனக் கடற்படையினரின் உதவியுடன் இலங்கை, விஷத் தன்மை கொண்ட சொறி மீன்களை அதிக அளவில் கடலில் விடுவதாக தமிழக மீனவர்களிடையே அச்சம் எழுந்துள்ளது.

கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினர் தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வருவதாக மீனவர்கள் பல ஆண்டுகளாக புகார் கூறிவருகின்றனர். ஆனால், கடலில் உள்ள சில கடல்வாழ் உயிரினங்களே மீனவர்களுக்கு தொல்லையாவது பலரும் அறியாத விஷயம்.

'கடல்வாழ் உயிரினங்களின் சொர்க்கம்' என அழைக்கப்படும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 3,600க்கும் மேற்பட்ட அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் உள்ளன. தமிழகத்தின் தென் கிழக்கு முனையில் 10,500 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ள மன்னார் வளைகுடா, உலக உயிர்க்கோள காப்பகம். இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே வடக்கில் ராமேஸ்வரம் முதல் தெற்கில் கன்னியாகுமரி வரை பரவியுள்ளது.

இந்த உயிர்க்கோள காப்பக பகுதியில் வழக்கமாக நாம் உணவாக உட்கொள்ளும் கடல் உயிரினங்களுடன் மருத்துவக் குணங்கள் கொண்ட கடல் ஆமை, கடல் குதிரை, சுறா போன்றவற்றுடன் விஷத் தன்மை கொண்ட சொறி மீன்கள், கடல் பாம்பு, திருக்கை உள்ளிட்ட உயிரினங்களும் உயிர் வாழ்கின்றன. இதில் மீனவர்களுக்கு சமீப காலமாக அதிகமாக தொல்லை கொடுத்துவருவது, சொறி மீன் எனப்படும் ஜெல்லி மீன்கள்தான்.

ஒளி ஊடுருவக் கூடிய பொருளில் செய்யப்பட்ட குடையை போலிருக்கும் சொறி மீன்கள், பெரும்பாலும் கடலின் கரைப் பகுதியிலேயே காணப்படுகிறது. இதன் உடல் 99% நீரால் ஆனது.  செஞ்சொறி, அழுக்கு சொறி, காக்கா சொறி, வெள்ளை சொறி, வால் சொறி, தேங்காய் சொறி என பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த சொறி மீன்கள், நம் உடலில் பட்டால் அரிப்பில் துவங்கி சமயங்களில் ஆளையே கொன்றுவிடும் அளவுககு அபாயகரமான தன்மை கொண்டவை.

இந்த சொறி மீன்கள், கடலின் மேல் பரப்பில் அதிக அளவு தென்படும். கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் வீசும் வலைகளில் இந்த சொறி மீன்கள் மாட்டி கொண்டால், அவற்றை தொடாமலே வலையில் இருந்து விடுவித்து விடுவதை மீனவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.  தவறி அது மீனவர்களது உடலில் பட்டுவிட்டால், முதலில் அரிப்பு எடுக்கத் தொடங்கும். பின்னர் அந்த இடத்தில் புண் உண்டாகி அதிலிருந்து வெள்ளை நுரைகள் வெளியேறியபடி இருக்கும். இதுதவிர, விஷத்தன்மை அதிகம் கொண்ட செஞ்சொறி மீன்கள் மீனவர்களது உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய அபாயகரமானவை.

மழைக் காலங்களில் குறைவாக காணப்படும் சொறி மீன்கள், மழை இல்லா காலமான தற்போது அதிகளவில் உருவாகி வருகின்றன. குறிப்பாக வடகடல் பகுதியில் அதிக அளவில் காணப்படும் இந்த சொறி மீன்களால் நாட்டுப்படகு மீனவர்கள் பெரிதும் பாதிப்படைவதாக மீனவர்கள் தரப்பில் கூறுகின்றனர்.

அதே நேரத்தில், விசைப்படகு மூலம் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவர்களது வலைகளிலும் தற்போது சொறி மீன்கள் அதிகளவில் சிக்குவதாக கூறப்படுகிறது. பொதுவாக கடற்கரை ஓரப் பகுதிகளிலேயே காணப்படும் சொறி மீன்கள், விசைப்படகுகள் மீன்பிடிப்பில் ஈடுபடும் ஆழ்கடல் பகுதியில் அதிக அளவில் தென்படுவது மீனவர்களிடையே குழப்பத்தையும், அச்சத்தையும், சந்தேகங்களையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த குழப்பத்திற்கு காரணம் சீனாவாக இருக்குமோ என்ற சந்தேகம் மீனவர்களிடையே எழுந்துள்ளது. குறைந்த கடல் பரப்பை எல்லையாக கொண்ட தமிழக மீனவர்கள், மீன்பிடிக்கச் செல்லும்போது  கரையிலிருந்து 3 கடல் மைல் முடிந்தவுடன், அடுத்த 6 கடல் மைல்களுக்கு பாறைகள் நிறைந்த பகுதியாக இருப்பதால் அங்கு மீன்பிடிக்க முடியாது. இதனால், தமிழக மீனவர்கள், இலங்கை கடல் பகுதிக்குள் செல்வதை தவிர்க்க முடியாமல் போகிறது. இவ்வாறு செல்லும் மீனவர்களையும் அவர்களது படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் சிறைப் பிடித்து சென்று விடுகின்றனர்.

இந்த ஆண்டு மீன்பிடி தடைக் காலம் முடிந்து 2 மாதங்களே ஆன நிலையில், 73 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 105 படகுகள் இலங்கை அரசின் பிடியில் உள்ளது. ஏற்கனவே சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும், அவர்களது வாழ்வாதாரமான படகுகள் விடுவிக்கப்படவில்லை. ஒவ்வொரு படகும் 20 முதல் 30 லட்சம் வரை மதிப்புடையவை. இவ்வளவு இழப்பு ஏற்பட்ட பின்னரும், இலங்கைக் கடல் பகுதிக்குள் செல்வதை தவிர்க்க முடியாத பூகோள நிலை இருப்பதால் தொடர்ந்து மீனவர்கள் இலங்கை பகுதிக்குள் சென்று வருகின்றனர்.

படகுகள் பறிமுதல் செய்த பின்னரும் திரும்பத் திரும்ப தங்கள் கடல் பகுதிக்குள் வரும் தமிழக மீனவர்களை அச்சுறுத்த, சீனக் கடற்படையினரின் உதவியுடன் இலங்கை செயல்படுவதாக ஒரு பேச்சு உள்ளது. உயிரி தொழில் நுட்பத்தில் வளர்ச்சி அடைந்த சீனக் கடற்படையினர், வங்கக் கடலில் மீனவர்களை அச்சுறுத்தும் வகையில் விஷத் தன்மை கொண்ட சொறி மீன்கள் போன்றவற்றை அதிக அளவில் கடலில் விடும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக மீனவர்களிடையே அச்சம் எழுந்துள்ளது.

மீனவர்கள் மத்தியில் எழுந்துள்ள சந்தேகம் குறித்து ராமேஸ்வரம் மீன் வளத்துறை உதவி இயக்குனர் கோபிநாத்திடம் கேட்டபோது ‘‘ ஜெல்லி மீன் என்கிற சொறி மீன், கடலில் இயற்கையாக உருவாகக் கூடிய ஒரு வகை மீன்தான். கடந்த ஏப்ரல் 15 முதல் மே 29 வரை மீன்பிடி தடைக் காலம் அமலில் இருந்தது. பொதுவாக இம்மாதிரி தடைக் காலங்களில் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாத காரணத்தினால் கடலில் மீன் வளம் அதிகரிக்கும். அதன்படியே ஜெல்லி மீனும் அதிகரித்து இருக்கிறது. மற்றபடி மீனவர்களை அச்சுறுத்துவதற்காக வெளிநாடுகள் இதில் ஈடுபட்டிருப்பதாக சொல்வது தவறு. மீனவர்கள் அதுகுறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை’’ என்றார்.

- இரா.மோகன்
படங்கள்: உ.பாண்டி

 


டிரெண்டிங் @ விகடன்