Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

' இது எலைட் வேர்ல்டு ரிகார்டு...!' -மெட்ரிக் பள்ளிகளில் நடக்கும் புது மோசடி

சேலம் குளுனி மெட்ரிக் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவரின் பெற்றோர் அனுப்பிய வாட்ஸ்அப் தகவல் அதிர வைக்கிறது. ' உலக சாதனை என்ற பெயரில் எலைட் நிறுவனம் மாணவர்களிடம் பணம் வசூலிக்கிறது. இது ஒரு மோசடியான நிறுவனம். பெற்றோர்களே நம்ப வேண்டாம்' என எச்சரிக்கை விடுக்கிறார் அவர்.

கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது எலைட் வேர்ல்டு ரிகார்டு நிறுவனம். கின்னஸ், லிம்கா போன்று உலக சாதனைகளை அங்கீகரிக்கும் நிறுவனம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. கடந்த ஐந்தாண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தைப் பற்றித்தான் எச்சரிக்கை விடுக்கிறார் மாணவியின் பெற்றோர். அவர் நம்மிடம், "  மண் பானை மீது நாட்டியமாடி குளுனி மாணவிகள் சாதனை புரிந்ததாக நாளிதழ்களில் செய்தி வெளியானது. என்னுடைய மகளும் அதில் ஒருவர். இதேபோல், பல்லாயிரம் மாணவர்கள் திரண்டு பலூன் ஊதி சாதனை, காந்தியடிகள், அன்னை தெரசா, அப்துல் கலாம் உருவத்தில் மாணவர்கள் நின்று சாதனை என அவ்வப்போது செய்திகள் வெளியானது. இப்படி சாதனை என்ற பெயரால் மாணவர்களிடம் பணம் பிடுங்கும் வேலையில் எலைட் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு ஊரிலும், வசதியான மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கு செல்லும் இவர்கள், ஆஸ்கர், நோபல், கின்னஸ், பிரிட்டானிகா, லிம்கா போலவே உலக சாதனைகளை செய்யும் நபர்களை சிறப்பித்து, கவுரவப்படுத்தும் எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட் என்ற நிறுவனத்திலிருந்து வருவதாக அறிமுகம் செய்துகொள்கிறார்கள்.

'லண்டனைத் தலையிடமாகக் கொண்டு செயல்படுகிறோம். உங்கள் மாணவர்களின் சாதனைகளை உலகமே வியக்கும் அளவுக்குக் கொண்டு போகிறோம். உங்கள் பள்ளிக்கு நல்ல விளம்பரம் கிடைக்கும்' எனக் கூறிவிட்டு, தங்கள் சாதனையாக சில புகைப்படங்களைக் காட்டுகிறார்கள். இதுதொடர்பாக, எலைட் நிறுவனம் தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான செய்திகளையும் காட்டுகிறார்கள். பிறகு, அந்தக் கம்பெனியே அதிக பலூன்களை ஊதுவது, தலைவர்கள் உருவங்களில் நிற்பது என ஒன்றுமில்லாத சில விஷயங்களைச் செய்ய வைக்கிறார்கள். இதில் பங்கேற்கும் மாணவர்களுக்கு உலக சாதனை செய்ததாக சான்றிதழும் வழங்குகிறார்கள்.

இந்தச் சான்றிதழுக்காக ஒவ்வொரு மாணவரும் ஆயிரம் ரூபாயில் இருந்து ஆறாயிரம் ரூபாய் வரையில், சாதனைக்கு ஏற்ப கொடுக்க வேண்டும். இந்தப் பணத்தில் பள்ளி நிர்வாகத்திற்கும் பங்கு போகிறது. பெற்றோர்களை வரவழைத்து, ' இது எலைட் ரிகார்டு, இந்த சான்றிதழ் இருந்தால் உலக நாடுகளில் தனி மரியாதை கிடைக்கும். பத்ம ஸ்ரீ விருதுக்கு இணையானது' என மல்டி லெவல் மார்க்கெட்டிங் வியாபாரிகள் போல பேசுகின்றனர். பெற்றோர்களும், குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ஆயிரங்களை வாரியிறைக்கின்றனர். இது அமெரிக்காவில் பதிவு பெற்ற நிறுவனம் இல்லை. உள்ளூரில் இயங்கி வரும் மோசடி நிறுவனம் இது. இதுபோன்ற நிறுவனங்களைப் பற்றிய புரிதல் பெற்றோருக்கு இருக்க வேண்டும். எலைட் நிறுவனத்தின் வலைக்கு தனியார் பள்ளிகளும் மாணவர்களும் இரையாகாமல் இருந்தால் சரி" என்றார் ஆதங்கத்தோடு.

இதுதொடர்பாக, குளுனி பள்ளி நிர்வாகத்திடம் பேசும்போது, ' அப்படியா? அது மோசடி கம்பெனியா...எங்கள் பள்ளியில் எலைட் வேர்ல்டு ரிகார்டு நடந்தது உண்மை. வேறு எதுவும் தெரியாது' என்றதோடு முடித்துக் கொண்டனர். இதையடுத்து, எலைட் வேர்ல்டு ரிகார்டு(?) நிறுவனத்தைத் தொடர்பு கொண்டோம். நம்மிடம் பேசிய பாலு என்பவர், " சார்...கின்னஸ், லிம்கா போலவே நாங்களும் உலக சாதனை அங்கீகரிக்கும் ஒரு நிறுவனம். மத்திய அரசின் அனுமதியோடு இயங்குகிறோம். உலக அளவில் எங்களுக்கு ஐந்து கிளைகள் செயல்படுகின்றன. சேலம் குளுனி பள்ளியில் ஆயிரம் மாணவிகள் எல்லாம் பங்கேற்கவில்லை. சில நூறு மாணவர்கள்தான் உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கெடுத்தார்கள். உலக சாதனைக்கு என பல்வேறு பிரிவுகளில் போட்டி நடத்துகிறோம். மலேசியா, சவூதி அரேபியா, கொரியா எனப் பல நாடுகளில் செயல்பட்டு வருகிறோம். சேவை மனப்பான்மையோடு நிறுவனத்தை நடத்துவது சிரமம். எனவே, குறைந்த அளவு கட்டணத்தை வசூலிக்கிறோம். குளுனி பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் எங்களைப் பற்றி அவதூறு பரப்புவதாகச் செய்தி கேள்விப்பட்டோம். அவர்களுக்கு விரைவில் விளக்கம் அளிப்போம்" என்றார்.

'இது உலக சாதனையா? உள்ளூர் வேதனையா' என்பதைப் பற்றி விளக்க வேண்டிய கட்டாயம் கோவை மாவட்ட காவல்துறைக்கு இருக்கிறது. எம்.எல்.எம் மார்க்கெட்டிங் வேறு வேறு வடிவங்களில் மக்களை வதைக்கிறது என்கின்றனர் மாணவர்களின் பெற்றோர்கள்.

-ஆ.விஜயானந்த்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement