சங்கரன்கோவில் திமுக வேட்பாளர் ஜவஹர் சூரியகுமார்

சென்னை: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக ஜவகர் சூரியகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.

மார்ச் 18-ம் தேதி நடைபெறவுள்ள சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவதற்கு விருப்பமுள்ளவர்களிடம் விண்ணப்ப மனுக்கள் பெறப்பட்டது. இதில், போட்டியிட விருப்பம் தெரிவித்து 8 பெண்கள் உள்பட 41 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 5 மணி முதல் அவர்களிடம் நேர்காணல் நடத்தினார்.

சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த நேர்காணலுக்குப் பின்னர், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன், கருணாநிதி ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிவிப்பு:

திமுக தேர்தல் ஆட்சி மன்றக்குழு கூடி, நெல்லை மாவட்ட கழக செயலாளர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர செயலாளர்கள், சங்கரன்கோவில் இடைத்தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல் செய்துள்ள கழக வேட்பாளர்கள் சார்பில் பரிந்துரைத்து வந்த கழக அமைப்புகளின் செயலாளர்கள், நிர்வாகிகள் அனைவரிடமும் கலந்துபேசப்பட்டது.

இறுதியாக எடுக்கப்பட்ட முடிவின்படி, சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் திமுக சார்பாக வழக்கறிஞர் ஜெ.ஜவகர் சூரியகுமாரை வேட்பாளராக நிறுத்துவது என்று முடிவு செய்து அறிவிக்கப்படுகிறது.

கழக தொண்டர்கள், தோழமை கட்சி தலைவர்கள் மற்றும் அதனை சார்ந்த செயல்வீரர்கள் அனைவரும் கழக வேட்பாளரான ஜவகர் சூரியகுமாரை இந்த இடைத்தேர்தலில் வெற்றிபெற செய்யவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அந்த அறிவிப்பில் கருணாநிதி கூறியிருந்தார்.

எம்.ஏ.பி.எல். பட்டம் பெற்ற ஜவகர் சூரியகுமார் (வயது 41), வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். சங்கரன்கோவில் நகர திமுக வழக்கறிஞர் அணி துணை செயலாளராக உள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!