Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'கருணாநிதி நம்மைக் கைவிட மாட்டார்!' -ஜி.கே.வாசனின் 'திடீர்' நம்பிக்கை

ட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சியை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருக்கிறார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன். ' அ.தி.மு.க நம்மை அழிக்க நினைக்கிறது. தி.மு.க எவ்வளவோ பரவாயில்லை' என ஆதங்கப்படுகிறார் ஜி.கே.வாசன்.

மக்கள் நலக் கூட்டணியோடு இணைந்து சட்டமன்றத் தேர்தலை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, ஒரு சதவீத ஓட்டைக்கூட வாங்கவில்லை
. கட்சிக்குக் கிடைத்த 0.5 சதவீத ஓட்டுக்களால் கலவரமடைந்தார் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன். தேர்தலுக்கு முன்பே பீட்டர் அல்போன்ஸ், விஸ்வநாதன் உள்ளிட்டவர்கள் காங்கிரஸ் கூடாரத்திற்கு இடம் பெயர்ந்தனர். த.மா.காவின் மூத்த துணைத் தலைவராக இருந்த எஸ்.ஆர்.பாலசுப்ரமணியமும் அ.தி.மு.கவில் ஐக்கியமானார். முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்த ஓரிரு வாரங்களிலேயே ராஜ்யசபா எம்.பி. பதவியைப் பெற்றார் எஸ்.ஆர்.பி. அ.தி.மு.கவின் இந்த அஸ்திரத்தை ஜி.கே.வாசன் எதிர்பார்க்கவில்லை. கடந்த வாரத்தில் த.மா.கா மாநில மகளிரணித் தலைவி மகேஸ்வரி, வேலூர் முன்னாள் எம்.எல்.ஏ ஞானசேகரன் உள்பட 70-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் முதல்வர் முன்னிலையில் அ.தி.மு.கவில் இணைந்தனர்.

இந்நிலையில், த.மா.காவின் அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி, நம்மிடம் பேசிய கட்சியின் சீனியர் நிர்வாகி ஒருவர், " பதவிக்காக அ.தி.மு.கவுக்குப் போனவர்களைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. இவர்கள் எல்லாம் சரியான முறையில் கட்சி வேலை பார்த்திருந்தால், எங்களுக்கு வர வேண்டிய ஓட்டுக்களாவது வந்திருக்கும். 'துரோகம் செய்துவிட்டுப் போனவர்கள் போகட்டும். இருக்கும் தொண்டர்களுக்குப் பதவியை பகிர்ந்து கொடுப்போம்' என்ற முடிவில் தலைவர் இருக்கிறார். வரக் கூடிய உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தனித்துப் போட்டியிட்டு பலத்தை நிரூபிக்கவே செய்யும். உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிகள் உருவாக வாய்ப்பில்லை." என்றார். 

இதனிடையே உள்ளாட்சி தேர்தல் மற்றும் கூட்டணி தொடர்பாக தமது தமது கட்சியினரிடம் பேசிய அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன்," உள்ளூரில் செல்வாக்குள்ளவர்களின் பட்டியலைத் தயாரிக்கும் வேலையைத் துரிதப்படுத்துவோம். உள்ளாட்சியில் கணிசமான அளவு ஓட்டு வாங்கிவிட்டால், நாடாளுமன்றத் தேர்தலில் நம்முடைய மதிப்பை பிற கட்சிகள் உணர்ந்து கொள்ளும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவனும், மதச்சார்பற்ற அணியைக் கட்டமைக்க இருக்கிறார். தி.மு.கவை நோக்கி அவர் பயணப்பட இருக்கிறார். இதுதான் நம்முடைய தேர்வும்.

த.மா.கா நிர்வாகிகளை வளைத்துக் கொண்டு, நம்முடைய கட்சியை அழிக்கும் முயற்சியில் இறங்கிவிட்டது அ.தி.மு.க. நம்மிடம் இருந்து அ.தி.மு.கவுக்குப் போன சேலம் ஆர்.ஆர்.சேகர், அரியலூர் அமரமூர்த்தி, திருக்கோவிலூர் சிவராஜ் போன்றோர் எல்லாம் அ.தி.மு.கவில் இருக்கும் இடம் தெரியவில்லை. ஒரே ஒரு எஸ்.ஆர்.பிக்குப் பதவி கொடுத்துவிட்டு, மற்றவர்களையும் அவர்கள் பக்கம் இழுக்க நினைக்கிறார்கள். இந்தளவுக்கு தி.மு.க தலைவர் செயல்பட மாட்டார். தி.மு.க அணியில் நாம் அங்கம் வகிப்பதைப் பற்றி காங்கிரஸ் நிர்வாகிகளும் கவலைப்பட மாட்டார்கள். தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் என காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்தவர்களுடன், பல நேரங்களில் தேர்தல் உடன்பாடு வைத்துக் கொண்டது காங்கிரஸ். அதைப் போலவே, தமிழ்நாட்டிலும் தி.மு.க உருவாக்கும் அணியில் த.மா.கா இடம்பெறுவதில் பெரிய சிக்கல்கள் இருக்காது. எனவே, உள்ளாட்சியில் அதிக இடங்களைப் பிடிக்கும் வகையில் தீவிரமாக செயல்படுங்கள்" என அறிவுறுத்தி உள்ளார்.

வருகிற ஆகஸ்ட் 7-ம் தேதி முதல், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடப் போகும் நிர்வாகிகளிடம் விருப்பமனு வாங்க இருக்கிறார் ஜி.கே.வாசன்.

இதையும் அவர்களிடம் குறிப்பிட்ட ஜி.கே. வாசன், " மக்களை நேரடியாக சந்தித்துப் பேசுங்கள். உள்ளூரில் உள்ள செல்வாக்கை வெற்றியாக மாற்ற முயற்சி செய்யுங்கள். உள்ளாட்சியின் வெற்றியே, நாடாளுமன்றத் தேர்தலில் கவுரவமான இடங்களைப் பெற உதவும். தி.மு.கவுடன் கூட்டணியில் இணைவதைப் பற்றி நான் பார்த்துக் கொள்கிறேன்' என கட்சிக்கார்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார்.

-ஆ.விஜயானந்த்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement