Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'இப்படியொரு கொடூர சாவைப் பார்த்தது இல்லை!' -கலங்கடிக்கும் கலைச்செல்வி மரணம்

ஞ்சாவூர், சாலியமங்கலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார் தலித் பெண் ஒருவர். ' எங்க கிராமத்துல வருஷத்துக்கு 15  பொண்ணுகளை தூக்கிட்டுப் போய்க் கெடுக்கறாங்க. எங்களுக்கு ஒரு தீர்வைக் கொடுங்கய்யா' எனக் கதறுகிறார்கள் கிராமத்து மக்கள்.

தஞ்சாவூர், அம்மாப்பேட்டை காவல்நிலைய எல்லைக்கு உள்பட்ட சாலையோர கிராமம் சாலியமங்கலம். இந்தப் பகுதியில் தலித் சமூகத்து மக்கள் குறைந்த எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். சாதி இந்துக்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். கடந்த 31-ம் தேதி இரவு தலித் சமூகத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மகள் கலைச் செல்வி, தோட்டம் ஒன்றின் முள்புதரில் நிர்வாணமான நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்திருக்கிறார். படுகொலைக்கு முன்னதாகக் கொடூரமான சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். இதையடுத்துக் கொலைக்குக் காரணமான ராஜா மற்றும் குமார் ஆகியோரைக் கைது செய்திருக்கிறது போலீஸ். குற்றவாளிகளை ரிமாண்ட் செய்வதில் காவல்துறை கால தாமதம் செய்ய, மதுரை எவிடென்ஸ் அமைப்பு தலையிட்டு ரிமாண்ட் செய்ய வைத்திருக்கிறது.

கலைச்செல்வியின் உறவினர்கள் நம்மிடம், " ராஜேந்திரனோட முதல் மனைவி மாரியம்மாள் உடம்பு சரியில்லாமல் செத்துப் போயிட்டாங்க. அவங்க அக்கா பாப்பம்மாள் வீட்டிலதான் கலைச்செல்வி வளர்ந்து வந்தாள். வீட்டு வேலைகளைக் கவனிக்கறதுன்னு அந்தப் பொண்ணு இருக்கற இடமே தெரியாது. சம்பவம் நடந்த அன்னைக்கு நைட் புள்ளை எங்க போச்சுன்னு ஊர் முழுக்க தேடிக்கிட்டு இருந்தாங்க. விடிய விடிய தேடியும் கிடைக்கல. மறுநாள் காலையில முள்புதர்ல நிர்வாணமா கிடக்கறாள்னு செய்தி வந்துச்சு. கொடூரமா கொன்னு போட்டுட்டானுங்க. குமார், ராஜான்னு இந்த பேருக்கும் ஊருக்குள்ள எந்த வேலையும் இல்லாம, வெட்டியா இருப்பானுங்க. தலித் பொண்ணுங்களைத் தூக்கிட்டுப் போறதுதான் இவனுக வேலையே. அவங்க சமூகத்து பெரியவங்களும் இதைத் தட்டிக் கேட்க மாட்டாங்க" என வேதனைப்பட்டனர். கலைச்செல்வியின் அப்பா ராஜேந்திரனோ, " என் புள்ளையக் கொன்ன மாதிரியே அவனுங்களும் சாகனும். எங்களுக்கு வேற எதுவும் வேணாம். அரசாங்கத்தோட எந்த உதவியும் வேண்டாம்" எனக் கதறி அழுதார்.

எவிடென்ஸ் கதிர் நம்மிடம், " என் வாழ்நாளில் இப்படியொரு கொடூர சாவைப் பார்த்ததில்லை. நுங்கம்பாக்கத்தில் கொல்லப்பட்ட சுவாதியைவிட, பல மடங்கு கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார் கலைச்செல்வி. ஐ.டி நிறுவனங்களில் வேலை பார்க்கும் பெண் கொல்லப்பட்டால் தேசிய அளவில் பரபரப்பான விவாதமாகிறது. அதுவே, ஏதோ ஒரு கிராமத்தில் தலித் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டால், யாரும் கண்டுகொள்வது இல்லை. மிகுந்த வேதனையாக இருக்கிறது. அந்தப் பெண்ணின் உடலில் கொடூரமான காயங்கள் இருக்கின்றன. வாயில் கிழிந்த உள்ளாடையைத் திணித்துவிட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். அதன்பிறகு சாகும் வரையில் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். போஸ்ட்மார்ட்டம் அறிக்கையில் பாலியல் சித்ரவதை செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொடூரமாகக் கொலை செய்த குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிய வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறோம். சாலிய மங்கலத்தில் வேற்று சாதி ஆண்களை எதிர்த்துப் பேச முடியாத நிலையில், அந்த ஊர் தலித் மக்கள் உள்ளனர்.

ஆண்டுக்கு 15 பெண்கள் வரையில் பாலியல் சித்ரவதைக்கு ஆளாகிறார்கள். ' இந்தக் கொடுமையை எதிர்த்துப் பேச முடியாத நிலைமையில இருக்கிறோம். அரசாங்கத்துகிட்ட சொல்லி எங்களைக் காப்பாத்துங்கய்யா' என அந்த மக்கள் கதறுகின்றனர். இதைப் பற்றி விரிவாக ஆய்வு நடத்த இருக்கிறோம். ' பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் தைரியமாக வந்து புகார் கொடுங்கள்' என  அறிவுறுத்தியிருக்கிறோம். ' அரசாங்கம் எந்த இழப்பீடும் தர வேண்டாம். இந்த அநியாயத்தைத் தட்டிக் கேட்டா போதும்' என்பதுதான் அவர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

சாலிய மங்கலத்தில் தலித் மக்கள் மீது நடக்கும் கொடுமைகள் குறித்து அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்று படுகொலைகள் நடக்கும்போது மட்டுமே, அம்மக்கள் படும் துன்பங்கள் வெளி உலகிற்குத் தெரிய வருகின்றது. எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் சட்டரீதியாகவே எங்கள் போராட்டத்தைத் தொடருவோம்" என்றார் கொந்தளிப்போடு.

தலித் பெண்ணின் மரணம் பற்றிய தகவல் வெளியாகி 48 மணி நேரங்கள் கடந்தும் அரசு நிர்வாகத்தில் எவ்வித சலனமும் இல்லை. ' சாலிய மங்கலத்தை அரசு சீரியஸாக கவனிக்க வேண்டும்' என எச்சரிக்கை குரல் எழுப்புகின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள்.

-ஆ.விஜயானந்த்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement