'ஆண்ட்ராய்டு செயலி, யூ டியூப் வகுப்பறைகள்!' -அரசுப் பள்ளிகளின் 'ரூட்டை' மாற்றும் ஆசிரியர்கள் | TN Govt school Teachers Using Digital Technology in Classrooms

வெளியிடப்பட்ட நேரம்: 15:36 (03/08/2016)

கடைசி தொடர்பு:15:36 (04/08/2016)

'ஆண்ட்ராய்டு செயலி, யூ டியூப் வகுப்பறைகள்!' -அரசுப் பள்ளிகளின் 'ரூட்டை' மாற்றும் ஆசிரியர்கள்

சிறந்தமுறையில் கல்வி கற்பிக்கும் நூறு ஆசிரியர்களின் வீடியோவை யூ டியூப்பில் வெளியிட்டுள்ளது மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம். ' மனப்பாடக் கல்வியை ஊக்குவிக்காமல், பாடத்தை புதுமையான வழியில் கற்பிக்கும் முயற்சியில் தீவிர கவனம் செலுத்துகிறோம்' என்கின்றனர் ஆசிரியர்கள்.

தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் பணியைச் செய்து வருகிறது கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, புதுமையான வகையில் வகுப்பெடுக்கும் 100 ஆசிரியர்களைக் கண்டறிந்தார்கள் கல்வி அதிகாரிகள். தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என ஆசிரியர்களை வகைப்படுத்தி, பாடம் எடுக்க வைத்தனர். மனப்பாடக் கல்வியாக இல்லாமல், மாணவர்களின் பங்களிப்போடு எடுக்கப்படும் பாடங்கள் அசர வைக்கின்றன. தனியார் பள்ளிகளோடு ஒப்பிட முடியாத அளவுக்குக் கற்பித்தல் திறனில் அசத்துகிறார்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள். ஆசிரியர்கள் நடத்தும் இந்த வகுப்புகளை இணையதளத்தில் பதிவேற்றியதை உற்சாகமாக வரவேற்கிறார்கள் கல்வியாளர்கள்.

சத்தியமங்கலம், அரசு மேல்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர் திலீப்பிடம் பேசினோம்.

" எங்களது வீடியோக்களை யூ டியூப்பில் பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. வெறுமனே தேர்வுக்கு மாணவர்களைத் தயார்படுத்துவது என்றால், ஒரு பாடத்தை முடிக்க எங்களுக்கு ஒரு வாரம் போதும். அதுவே, பாடத்திட்டத்தைப் புரிய வைத்து ஒவ்வொரு மாணவனுக்கும் கற்பித்தலின் நோக்கம் சென்று சேர வேண்டும் என்றால், குறைந்தது மூன்று வாரங்கள் தேவைப்படும். மனப்பாடக் கல்வியை ஊக்குவிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். கதை சொல்வது தொடங்கி, உரைநடையில் மாணவர்களும் எழுதுவது வரையில் விளையாட்டுப் பாணியிலான கல்விமுறையைப் பயன்படுத்துகிறோம்.

அறிவியல் பாடம் என்றால் ஆய்வகத்தின் உதவியோடு புரிய வைக்கலாம். அதுவே, ஆங்கில வகுப்பு என்றால் மாணவர்களை அமர வைப்பது அவ்வளவு எளிதானதல்ல. அவர்களுக்குப் புரிய வைக்கும் வகையில்  ஸ்பீக்கர்களை அரசு வழங்கியுள்ளது. ஒரு ஆங்கில வார்த்தையைச் சொன்னால், அதற்கேற்ப ஒவ்வொரு எழுத்தாக ஸ்பீக்கரில் எதிரொலிக்கும். உடற்கல்வி முறையிலேயே மொழிக் கல்வியை கற்பிக்கிறோம். இதனால் தேர்வுக்குப் படிக்கிறோம் என்ற பயம் இல்லாமல் மாணவர்கள் மகிழ்ச்சியோடு பங்கேற்கின்றனர். ஸ்மார்ட் வகுப்பறைகள், டேப்லெட்டுகள், ப்ளூ டூத் ஸ்பீக்கர்கள் என போதுமான அளவுக்கு உபகரணங்களை அரசு வழங்கியுள்ளது. இதைப்போன்றே மற்ற அரசுப் பள்ளிகளும் வகுப்பறைகளை புதுமையாக மாற்ற முயற்சி எடுக்க வேண்டும் என கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்" என்றார் உற்சாகத்தோடு.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட அதிகாரி ஒருவர், நம்மிடம் பேசும்போது, " புதுமையான வகுப்பறைகளை உருவாக்குவது குறித்து 10 மாவட்டங்களில் உள்ள 100 ஆசிரியர்களுக்குப் பயிற்சியளித்தோம். அதன்பிறகு, 22 மாவட்டங்களில் 220 ஆசிரியர்கள் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டார்கள். இவர்கள் மூலம், மாநிலத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் நவீன கற்றல் வகுப்பு முறைகளைக் கொண்டு செல்ல இருக்கிறோம். அதேபோல், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் அறிவியல் பாடத்தை புரிந்து கொள்ளும் வகையில் புதிய செயலியை (tnschoolslive) கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகள் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். கூகுள் ஆண்ட்ராய்டில் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பாடம் புரியவில்லை என்றால், பாடத்தில் காட்டப்படும் படத்தின் மீது செல்போனை வைத்து ஸ்கேன் செய்தால், முப்பரிமாணத்தில் படத்தை பார்ப்பது மட்டுமல்லாமல், அது தொடர்பான எளிமையான விளக்கத்தையும் கேட்கலாம். பாடத்தை வெகு சுவாரஸ்யமாக கற்றுக் கொள்ளலாம்" என்கிறார். 

-ஆ.விஜயானந்த்
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க