' ராஜீவ் கொலை சதியோடு இந்தியா வரவில்லை என்பதை சொல்வீர்களா?' -சி.பி.ஐ அதிகாரிக்கு சாந்தனின் கண்ணீர் கோரிக்கை | Speakout the Truth: Rajiv Gandhi convict Santhan writes to CBI ex -official Madhavan

வெளியிடப்பட்ட நேரம்: 17:23 (03/08/2016)

கடைசி தொடர்பு:18:11 (03/08/2016)

' ராஜீவ் கொலை சதியோடு இந்தியா வரவில்லை என்பதை சொல்வீர்களா?' -சி.பி.ஐ அதிகாரிக்கு சாந்தனின் கண்ணீர் கோரிக்கை

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் சாந்தன். ' வெளிநாட்டு வேலைக்காத்தான் இந்தியா வந்தேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதைப் பற்றி ஒருமுறையேனும் பகிரங்கமாக வெளியில் சொல்வீர்களா' என தன்னைக் கைது செய்த காவல்துறை உயர் அதிகாரிக்கு வேண்டுகோள் வைக்கிறார்.

ஸ்ரீபெரும்புதூரில், கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் படுகொலை செய்யப்பட்டார் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி. இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் 25 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்களின் விடுதலைக்கான கோரிக்கை பேரணி ஒன்று அண்மையில் நடந்தது. அதேநேரத்தில், ' ராஜீவ்காந்தி கொலை வழக்கின் சாந்தனை நான்தான் சுட்டுக் கொன்றேன்' என ஃபேஸ்புக் ஸ்டேட்டஸில் பகிரங்கமாக தெரிவித்திருந்தார் ராஜீவ்காந்தி வழக்கில் சி.பி.ஐ ஆய்வாளராக இருந்த ஜெபமணி மோகன்ராஜ்.

இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாந்தன், ராஜீவ்காந்தி வழக்கில் தன்னைக் கைது செய்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி கே.எஸ்.மாதவனுக்கு,  விரிவான கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். கைது செய்யப்பட்டது முதல் விசாரணை வரையில் நடந்த அனைத்து விஷயங்களையும் பதிவு செய்திருக்கிறார். இனி கடிதத்தைப் படியுங்கள்....

" உங்களுக்கான என்னுடைய பிரார்த்தனை வெறும் சம்பிரதாயமானது அல்ல. ஏனெனில் என்னுடைய நல்வாழ்விற்காக பிரார்த்தித்தவர் தாங்கள். 'எதுவும் ஆகாது' என்றும் வாழ்த்தினீர்கள். தாங்கள் மறந்திருக்கலாம். அந்த 1991-ம் ஆண்டின் இதேபோன்ற ஜூலை மாதத்தினை என்னால் எப்படி மறக்க முடியும்? ஸ்ரீபெரும்புதூரில் வீசிய சூறைக்காற்றினால் வாழ்வு சின்னாபின்னமாக்கப்பட்ட,  துன்பத்திற்கு துணையாக்கப்பட்ட நான் கைது செய்யப்பட்டது ஜூலையில்தானே. என் கைகளில் விலங்கு மாட்டிய, என் கால்களின் நடமாட்டத்தை முடக்கிய 1991-ம் ஆண்டு ஜூலையினை எப்படி மறப்பேன்?

ஒருநாள் விடியற்காலை பொழுதில் உங்களுக்குள் என்ன தோன்றியதோ... என்னைப் பார்த்து, ' கவலைப்படாதே ஒன்றும் ஆகாது. விடுதலை ஆகிவிடுவாய்' என்றீர்கள். இருபத்தைந்து ஆண்டுகள், என்னைப் பார்த்து பழித்துவிட்டு ஓடிப் போய்விட்டன. இவை வீணாகக் கழிந்த நாட்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். 22 வயதில் இருந்து நாற்பத்து ஏழு வரையிலான முக்கியமான 25 வருடங்களை இரும்புக் கதவுகள் இரக்கம் இல்லாமல் தின்றுவிட்டன. எனக்கு விதிக்கப்பட்டிருக்கும் எஞ்சிய ஆண்டுகளை வெளியில் கழிக்க மாட்டேனா?

 

எனக்கு 'ராஜீவ் கொலையாளி' என்று தடா நீதிமன்றம் வரமாக வழங்கிய, உச்ச நீதிமன்றத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட மரணத் தண்டனையை, 2011-ல் இந்தியாவின் குடியரசுத் தலைவர் மாளிகை ஒப்புக் கொண்டது. அந்த சேதி அறிந்ததில் இருந்து என்னோடு முருகன் கோவிலுக்கு வந்த, மழிப்பதற்காக தாடி வளர்த்த அப்பா நோயாளி ஆனார். 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் மரணத் தண்டனையை ரத்து செய்ததுடன், 'தண்டனைக் காலத்தையும் கடந்த சிறைவாசியாக இருக்கும் எங்களை விடுவிப்பது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்கலாம்' என்று வழங்கிய தீர்ப்பினை அறியாமலேயே காலமாகிவிட்டார் என் அப்பா. நான் கைதியான நாளில் இருந்தே ஒருவேளை மட்டுமே சாப்பிட்டு விரதம் இருந்தபடியே எனக்காகக் காத்திருக்கும் வயோதிக அம்மாவுக்காகவாவது, ஒரு மகனாக என் கடமைகளைப் புரிய மாட்டேனா?

இது மட்டும்தான் என்னுடைய ஆசையா?

நான் வெளிநாடு போக வந்ததற்கும், அதற்கான முயற்சியில் ஈடுபட்டதற்கும் என் தரப்பில் உயிருள்ள ஆதாரம் தாங்கள்தான். டிராவல் ஏஜென்ட் மற்றும் அவரை அறிமுகம் செய்த இலங்கை நண்பர் இருவரையும் விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்ததுடன், தடா நீதிமன்றத்தில் சாட்சியமும் அளித்தீர்கள். 1996-ம் ஆண்டின் இதே ஜூலை மாதத்தில் நான்கு நாட்கள் நீதிமன்றத்திற்கு வந்து சென்றீர்கள். 273-வது சாட்சியான தங்களின் வார்த்தைகள், இருண்டு போயிருந்த என் வானத்தில் விடிவெள்ளி போலிருந்தது. எவ்வளவு ஒற்றுமை பாருங்கள். இதே போன்ற ஜூலை மாதத்தில்தான் என்னைக் கண்காணித்துக் கைது செய்தீர்கள். நான்காம் தேதி கைதான என்னை 9-ம் தேதி வரையில் கடுமையாக விசாரித்தீர்கள்.

தங்களுடன் இணைந்து பணியாற்றிய ஆய்வாளர் ஜெபமணி மோகன்ராஜ், 'நான் வெளிநாடு செல்வதற்காக வந்ததை' ஒப்புக் கொண்டிருக்கிறார். இதை ஆதாரபூர்வமாக தங்களால் மட்டுமே சொல்ல முடியும். ஏனென்றால், தங்களுக்குத் தெரிந்த உண்மையை தடா நீதிமன்றத்தில் சாட்சியமாக பதிவு செய்துவிட்டீர்கள். அப்போது மட்டும் ஊடகத்துறையினர் நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்பட்டிருந்தால், 'ராஜீவ் கொலைச் சதியுடன் நான் இந்தியாவுக்கு வரவில்லை' என்ற உண்மை வெளி உலகிற்குத் தெரிந்திருக்கும்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் (பத்தி:231) 'நான் வெளிநாடு செல்ல வந்ததில் சந்தேகம் இல்லை' என்றும் 'அதற்குரிய பாஸ்போர்ட், விசா போன்றவற்றைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டேன்' என்றும், 'அது வெற்றி பெறாமல் போகவே, சிவராசனின் சதித்திட்டத்தில் உறுப்பினர் ஆனேன்' என்றும் இருக்கிறது. தீர்ப்பு உரையில் பாதி அளவாவது உண்மை இருக்கிறது என்று ஆறுதல் அடைகிறேன். பத்தி 245-ல் ' டிராவல் ஏஜென்டிடம் பணத்தைக் கேட்டு, தடா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து பணம் பெற்றேன்' என்று உள்ளது. தாங்கள் நினைத்தால் என்னுடைய வெளிநாட்டுப் பயண முயற்சி பற்றிய உண்மையைச் சொல்லலாம். இந்த உண்மை வெளியில் தெரிந்தால் போதும். 'ராஜீவ்காந்தி கொலைச் சதியில் உறுப்பினன் அல்ல' என்பதற்கான என் தரப்பு வாதங்களை மக்கள் மன்றத்தில் வைப்பேன். நீதி தேவதையின் கண்கள் மட்டும்தான் கட்டப்பட்டுள்ளன. மக்களின் நிலை அப்படி அல்ல.

மனிதநேயம் இல்லாத, மதில்களால் முடக்கப்பட்டிருக்கும் என்னுடைய விதியை விரட்டியடிக்கும் வல்லமை, தங்களுடைய வார்த்தைகளுக்கு இருக்கின்றன. 'நான் வெளிநாடு செல்லவே வந்தேன்' என்பதை வெளி உலகிற்கு அறிவிக்க மாட்டீர்களா? சி.பி.ஐ காவல் முடிந்து செங்கல்பட்டு தனிமைச் சிறைக்கு என்னை அழைத்துச் செல்லும் நேரத்தில், என்னைப் பார்க்க வந்தார் முதன்மை புலனாய்வு அதிகாரியான ரகோத்தமன். அப்போது அவர் எனக்குக் கொடுத்த பாசி நிற டீ சர்ட்டைதான் நீண்ட நாட்கள் பயன்படுத்தினேன். என்னைப் பற்றிய தவறான புதிய புனைவுகளை  அவருடைய புத்தகத்தில் வெளியிட்டிருந்தாலும், அவரை என்னால் மறக்க முடியாது. இதையெல்லாம் அவர் செய்ய இன்னொருவர் தூண்டுதலாக இருந்தார். உங்களுக்கு நேரடியாக உத்தரவிடும் இடத்தில் இருந்த சிவாஜிதான் அந்த அதிகாரி. 'சி.பி.ஐயின் பரிசு கைது' என்று வர்ணிக்கப்பட்ட,  ஒற்றைக்கண் சிவராசனின் நெருங்கிய கூட்டாளி என்று செய்தி பரப்பப்பட்ட என்னைக் கைது செய்த குழுவிற்கு தலைமை தாங்கியவர் அவர்தான்.

இதைவிட வேறு ஒரு சிறப்பும் இருக்கிறது. நான் ராஜீவ் கொலைச் சதியுடன் இந்தியாவிற்கு அனுப்பப்படவில்லை என்ற உண்மையை அறிந்தவர்களில் அவரும் ஒருவர். தொடர்பில் இருந்தால் என்னுடைய விசாரிப்புகளை தெரிவியுங்கள். ' சிறையில் பயனுள்ள வகையில் காலம் கழி' என்று கடைசியாக அறிவுரை அளித்தார். சிறை அதிகாரிகள் புத்தக வாசிப்புக்கும் யோசிப்புக்கும் தடை விதிக்கவில்லை. படித்தேன். படைத்தேன். பரிசுகள்கூட பெற்றேன் என்று அவரிடம் கூறுங்கள். என்னுடைய கதைகளில் சில அவருடைய தாய்மொழியான கன்னடத்தில் மொழி பெயர்க்கப்பட்டன என்றும், பின்னர் அவை தொகுக்கப்பட்டு 'சிறகுகள் இல்லாத பறவைகள்' என்ற புத்தகமாக வெளியிடப்பட்டன என்றும் கூறுங்கள்"  என வேதனை கலந்த வார்த்தைகளில் எழுதியிருக்கிறார் சாந்தன்.

'பேரறிவாளனின் வாக்குமூலத்தை தவறாக எழுதிவிட்டேன்' என மனம் திறந்து பேசினார் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி தியாகராஜன். அவரைப் போலவே, 'கே.எஸ்.மாதவனும் முன்வர வேண்டும்' என வேண்டுகோள் வைக்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்.

-ஆ.விஜயானந்த்
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்