Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சகாயத்தின் அரசு 'ஸ்பா'வுக்கு, அதிகாரிகள் நடத்திய மூடுவிழா! -மசாஜ் கொள்ளைக்கு முடிவு கட்டுமா அரசு?

'மன அழுத்தத்தைப் போக்குகிறோம்' என்ற பெயரில் ஆயிரக்கணக்கான மசாஜ் சென்டர்கள் உருவெடுத்துவிட்டன. இவர்கள் வசூலிக்கும் கட்டணக் கொள்கைக்கு எந்தவிதக் கடிவாளமும் இல்லை. 'குறளகத்தில் அரசே நடத்தி வந்த 'இயற்கை ஸ்பா' வை இழுத்து மூடிவிட்டார்கள். சகாயம் கொண்டு வந்த திட்டம் என்பதால் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை' என்கின்றனர் காதி ஊழியர்கள்.

'கேரள மசாஜ்', 'தாய்லாந்து தெரபிஸ்ட்டுகள்', 'ஆயுர்வேத குளியல்' என்ற பெயரில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான எஸ்.எம்.எஸ்கள் வலம் வருகின்றன. அதிக பணிச்சுமை, மனஅழுத்தம், மாசுபடிந்த சுற்றுப்புறம் என ஸ்பாவைத் தேடி ஓடுகிறவர்கள், கட்டணத்தைப் பார்த்ததும் மனநிம்மதியைத் தொலைக்கிறார்கள். குறைந்தபட்சம் மூன்றாயிரம் ரூபாயையாவது வாங்கிக் கொண்டுதான் வெளியே அனுப்புகிறார்கள். பல இடங்களில் மசாஜ் சென்டர்கள் என்ற பெயரில் பாலியல் தொழில்களும் அரங்கேறுகின்றன.

" ஏழை எளிய மக்களுக்கும் இதுபோன்ற 'ஸ்பா' க்கள் தேவை என்பதை உணர்ந்து, மிகக் குறைந்த செலவில்,  'அரசு இயற்கை ஸ்பா' வைக் கொண்டு வந்தார் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் முதன்மை செயல் அலுவலராக இருந்த சகாயம் ஐ.ஏ.எஸ். 150 ரூபாயில் இருந்து 800 ரூபாய் வரையில் பல தரப்பட்ட சிகிச்சை முறைகள் இங்கே வழங்கப்பட்டு வந்தன. ஓரிரு ஆண்டுகள் மட்டுமே இயங்கிய அரசு ஸ்பாவை,  மேற்கொண்டு முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல அதிகாரிகள் விரும்பவில்லை. இப்போது அந்த இடத்தை வாடகைக்கு விடும் வேலைகள் நடந்து வருகின்றன" என வேதனைப்பட்டார் காதி ஊழியர் ஒருவர். தொடர்ந்து அவர்,

" ஆடம்பர ஸ்பாக்களில் செய்யப்படும் அதே சிகிச்சைகள்தான் இங்கும் வழங்கப்பட்டு வந்தன. முக்கோண வடிவப் பெட்டியில் தலை மட்டும் வெளியே தெரியுமாறு உட்கார வைக்கப்பட்டு, 45 டிகிரி வெப்பநிலையில்,  உடலில் உள்ள கழிவுகளை வியர்வையாக வெளியேற்றும் சிகிச்சைக்கு 200 ரூபாய் கட்டணமாக வாங்கினர். அதேபோல், முதுகுத் தண்டு வட சிகிச்சை, மூலிகை மண் சிகிச்சை எனப்படும் மட் தெரபி, மெழுகு ஒத்தடம், எண்ணெய் மசாஜ், மனஅழுத்தத்தைப் போக்கும் ரெஃப்லெக்சாலஜி, அக்குபஞ்சர் என தனியார் ஸ்பாக்களுக்குப் போட்டியிடும் அளவுக்கு, அரசு ஸ்பாவை நடத்தி வந்தார் சகாயம்.

காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட்டு வந்த இந்த மையத்தில் ஆண்களுக்கு பெண்களுக்கு என தனித்தனியான நிபுணர்கள் பணியில் ஈடுபட்டனர். இதன் மூலம் காதித் துறைக்கு நல்ல வருவாயும் கிடைத்தது. ஸ்பா, மசாஜ் தவிர வாடிக்கையாளர்களுக்கு யோகா பயிற்சியும் அளிக்கப்பட்டன. அரசே ஸ்பா நடத்துவதால் அரசு ஊழியர்கள் மட்டுமன்றி, பொதுமக்களும் ஆர்வத்தோடு வந்து சென்றனர். அடுத்தடுத்து வந்த அதிகாரிகள் ஸ்பா மீது கவனம் செலுத்தவில்லை. ' இது தேவையற்றது. இழுத்து மூடுங்கள்' என உத்தரவிட்டனர். தனியார் மசாஜ் சென்டர்களின் ஆதிக்கத்தில் இருந்து பொதுமக்களைக் காப்பதற்கு, மாநிலம் முழுவதும் அரசே இயற்கை ஸ்பாக்களைத் திறந்தால் நல்ல வருவாய் கிடைக்கும்" என ஆதங்கப்பட்டார்.

" காதியில் விற்பனையாகும் இயற்கை வேளாண் பொருட்களில் இருந்தே அரசு ஸ்பாவுக்குத் தேவையான மூலப் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தன. சகாயம் பதவியில் இருந்தபோது பொதுமக்களே பயன்படுத்தும் வகையில், மண்குளியல் பவுடர்கள், விதம்விதமான இயற்கை சோப்புகள், மெழுகு ஒத்தடப் பொருட்கள் என இயற்கை சிகிச்சை முறைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து வந்தார். ஊழியர்களும் திருப்தியோடு வேலை பார்த்தனர். காதித் துறையின் வருவாயும் உயர்ந்தது. இப்போது நிலைமை அப்படி இல்லை" என வேதனைப்படுகிறார் காதித்துறை அதிகாரி ஒருவர்.

அரசு ஸ்பாவில் அக்கறை காட்டுமா அரசு?

-ஆ.விஜயானந்த்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement