Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'கலைச்செல்வி மரணம் அரசின் கண்களில் படவில்லையா?' -கேள்வி எழுப்பும் சி.பி.எம் ஜி.ராமகிருஷ்ணன்

ஞ்சாவூரில் பாலியல் வன்கொடுமையில் கொல்லப்பட்ட பழங்குடிப் பெண் கலைச்செல்வி மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது தலித்-பழங்குடி வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்துவிட்டது காவல்துறை. ' முதலில் கொலை வழக்காக மட்டுமே பதிவு செய்திருந்தனர். போராட்டத்தின் முடிவிலேயே வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது' எனக் கொந்தளிக்கிறார் சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்.

தஞ்சை மாவட்டம், சாலிய மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகள் கலைச்செல்வி. இவர்கள் 'காட்டுநாயக்கர் தோட்டி' என்ற பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த 1-ம் தேதி அதிகாலையில் முட்புதர் ஒன்றில் நிர்வாண நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார் கலைச்செல்வி. பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தியது மட்டுமல்லாமல் மிகக் கொடூரமாகக் கொல்லப்பட்டிருந்தார் கலைச்செல்வி.

கொலைக்குக் காரணமானவர்கள் என அடையாளம் காட்டப்பட்ட ராஜா என்கிற அரங்கராஜன் மற்றும் குமார் ஆகிய இருவரைப் போலீஸார் கைது செய்தனர். வாயில் உள்ளாடை திணிக்கப்பட்டு, கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்த கலைச்செல்வியின் மரணத்தால் அதிர்ந்து போன சி.பி.எம் உள்ளிட்ட கட்சிகள், போராட்டத்தில் இறங்கின. இதையடுத்து, குற்றவாளிகள் இருவர் மீதும் தண்டனைச் சட்டப் பிரிவு 342, 376, 302 பிரிவுகளிலும், எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3(2)(5ஏ) பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்திருக்கிறது அம்மாபேட்டை காவல்நிலையம்.

காவல்துறையின் நடவடிக்கை பற்றி நம்மிடம் பேசிய சி.பி.எம் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், " இன்று மாலை தஞ்சை ரயிலடியில் கலைச்செல்வி மரணத்திற்கு நியாயம் கேட்டு மாபெரும் கண்டனப் போராட்டத்தை நடத்த இருக்கிறோம். கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மீது முதலில் கொலை வழக்கு மட்டுமே பதிவு செய்திருந்தனர். கலைச்செல்வி மரணம் மட்டுமே முதல் நிகழ்வு அல்ல. இதற்கு முன்னதாகவும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கின்றன என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பெண்களைப் போகப் பொருளாகப் பார்க்கும் பாலின பாகுபாடும் சாதிய பின்புலமும் இதற்குள் உண்டு.  'பழங்குடிப் பெண்தானே...யார் வந்து கேட்கப் போகிறார்கள்?' என்ற ஆணவம்தான் கொலையாளிகளுக்கு இருந்திருக்கிறது. இது குறித்தெல்லாம் வாய் திறக்க மறுக்கும் ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகளின் அணுகுமுறைகளும்  ஆட்சேபனைக்குரியது.

பொதுவாகவே இளம்பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறை தமிழகத்தில் அதிகரித்து வருவதுடன், தலித் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகளும் தீவிரமடைந்து வருகின்றன. சட்டமன்றத்தில் மேசை தட்டும் நடவடிக்கைகளின் மூலம் உண்மையை மறைத்து விட முடியாது என்பதை சுட்டிக் காட்டுகிறோம். கலைச்செல்வி மரணத்தில், குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

சாலியமங்கலத்தில் நடந்து வரும் பழங்குடி மக்கள் மீதான வன்முறைகளின் மீது தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும். இதையொட்டியே கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த இருக்கிறோம்" என்றார் கொந்தளிப்போடு.

' கலைச்செல்வி குடும்பத்திற்கு இழப்பீட்டை விரைந்து வழங்க வேண்டும் என்பது மட்டுமல்ல, குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என்ற கோரிக்கையோடு களமிறங்கியுள்ளனர் மனித உரிமை ஆர்வலர்கள்.

-ஆ.விஜயானந்த்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement