Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிரபாகரனைச் சந்திக்க சென்றபோதே ராணுவம் என்னைச் சுட்டுக்கொன்றிருந்தால்... - வைகோ

2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்த மதிமுக, மாநிலம் முழுவதும் உள்ள கட்சித்  தொண்டர்களை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதனை முன்னிறுத்தித் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செயல்வீரர்கள் கூட்டம் நடத்தி வருகிறார்.

அதன்படி நேற்று(வெள்ளி) கிருஷ்ணகிரி,தர்மபுரி மாவட்டங்களுக்கான மதிமுக செயல் வீரர்கள் கூட்டம், தருமபுரியில் நடந்தது. அதில் பங்கேற்றுப் பேசிய வைகோ, "விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நான் பார்க்க சென்றபோதே, இந்திய ராணுவம் என்னைச் சுட்டுக் கொன்றிருந்தால் எனக்கு இந்த நிலைமை வந்திருக்காது" என்று கூறினார்.

முன்னதாகக் கூட்டம் தொடங்கிய போது, தருமபுரி  மாவட்ட அவைத்தலைவர் சாமிக்கண்ணு  பேசினார். அப்போது அவர், தி.மு.கவில் இருந்து வைகோ பிரிந்தபோது நடந்த சம்பவங்களை நினைவு கூர்ந்து உருக்கமாகப் பேசிக்கொண்டிருந்தார். கூட்டத்திலிருந்து   ‘ ஒன்றியச் செயலாளர் ஒருவர் எழுந்து அதெல்லாம் இருக்கட்டும்..  கட்சி வளர்வதற்கு வழிய சொல்லுங்க' என்று கொந்தளித்தார். உடனே பேச்சை மாற்றிய அவைத்தலைவர் சாமிக்கண்ணு ஒன்றியக்கழகங்கள், கிளைக்கழகங்களை வலுப்படுத்துங்கள் கூட்டங்கள் நடத்துங்கள் கொடி ஏற்றுங்கள் என்று பேசி அமர்ந்தார். 

கூட்டத்தில் கொந்தளித்த  அந்த ஒன்றியச்செயலாளரை மேடைக்கு அழைத்த வைகோ அவரைச் சமாதனப்படுத்தினார்.அப்போது அவர், ' மத்த கட்சிக் காரங்க கேவலமா பேசுறாங்க, உங்கள பத்தி பேசும் போது செத்துடலாம் போல இருக்கு' என்று கூறி கண்கலங்கிய அவரைத் தட்டிக் கொடுத்து  அமர வைத்தார் வைகோ.

அடுத்ததாக பேசிய ஒவ்வொருவரும் "உங்களைப்பற்றி யார் எது வேண்டுமானாலும் சொல்லட்டும் உங்களைப்பற்றி எங்களுக்குத் தெரியும் உயிர் உள்ளவரை நாங்கள் உங்களுடன் இருப்போம். இங்கிருந்து போனவர்கள் சொற்பமானவர்கள் நாங்கள் இருக்கிறோம்  நீங்கள் கலங்காதீர்கள்" என்று பல உதாரணங்களைச்  சொல்லி வைகோவை உற்சாகப்படுத்தினார்கள். அதில் ஒருவர் வைகோவை கட்சிக்காரர்கள் புரிந்து கொள்வதற்கு ஒரு பாட்டை எடுத்துவிட்டார். அதைக் கேட்டதும் வைகோ முகம் பலமடங்கு பிரகாசமானது. பாடியவர் இரண்டு வரிமட்டும் பாடி முடித்துப் பேச தொடங்கினார். உடனே அவரை இடை மறித்த வைகோ அடுத்த வரியை பாடுங்க அதுலதான் இருக்கு விஷயமே என்றார்.

அவரும் பாடினார். அந்தப் பாடல்...

" தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
 தரத்தினில் குறைவதுண்டோ
 உங்கள் அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
 அன்பு குறைவதுண்டோ...!

சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும்
சீற்றம் குறைவதுண்டோ..!

பாடல் தந்த உற்சாகத்தோடு கடைசியாக மைக்  பிடித்தார் வைகோ. தான் அரசியலுக்கு வந்த காலம் முதல் நடந்த சம்பவங்களை விளக்க தொடங்கினார்.

"தலைவர் பிரபாகரனைப்  பார்க்க சென்ற போது, என்னை இந்திய கடற்படை மடக்கியதே, அப்போதே என்னை சுட்டுப் பொசுக்கியிருந்தால் எனக்கு இந்த நிலைமை வந்திருக்காது. தலைவர் (கலைஞர்) அன்பு தம்பியே என நெக்குருகியிருப்பார். தி.மு.க. கொடி கம்பங்களில், என் பெயர் நீங்கா இடம்பிடித்திருக்கும். மாவட்டம் தோறும் என் பெயரில் நினைவு அரங்கங்கள் எழுப்பப்பட்டிருக்கும்.

மக்கள் நலக்கூட்டணியை அமைப்பதில் எவ்வளவு கஷ்டப்பட்டோம் என்பதைச் சொல்கிறேன். தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக 4 கட்சித் தலைவர்கள் அமர்ந்து பேசினோம். நான்கு கட்சி மட்டும் கூட்டணி அமைத்துத்  தேர்தலைச்  சந்திப்பது என முடிவெடுத்தோம்.  கட்சிக்கு இரண்டு பேர் வீதம் மொத்தம் 8 பேர் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றோம். ம.தி.மு.க. சார்பில் நானும் மல்லை சத்யாவும் சென்றோம். மூன்று கட்சியில் வந்த 6 தலைவர்களும் விஜயகாந்த் வந்தால்தான் ஜெயிக்க முடியும். நாம் 4 பேரும் தனியாக நின்றால் ஒரு இடம் கூட வெல்ல முடியாது என்று சொன்னார்கள். அரசியல் பார்வையாளர்களும் பத்திரிக்கைகளும் அதே கருத்தை முன்வைத்தன.

'விஜயகாந்த் மக்கள் நலக்கூட்டணிக்கு வர மாட்டார். வைகோவின் ஈகோதான் அதற்குக்  காரணம். விஜயகாந்த் முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதை வைகோ ஏற்க மாட்டார்" என அனைத்து ஏடுகளும் எழுதின. அதே நேரம் தே.மு.தி.க.வோடு கூட்டணி அமைத்தால் வெல்லும் சூழல் இருப்பதாகவும் சில பத்திரிகைகள் எழுதின.

தி.மு.கவில் 'பழம் நழுவிவிட்டது பாலில் விழப்போகிறது' என்றார்கள். வெற்றிகரமாக விஜயகாந்தை அழைத்து வந்தேன். வைகோ சாதித்துவிட்டார் என பத்திரிக்கைகள் பாராட்டின. ஆனால் அதற்குப்  பின்னால் நடந்ததெல்லாம் தலை கீழ். எத்தனை பழிச்சொற்கள்..? எத்தனை அவமானங்கள்.? எல்லாம் கடந்து உங்களுக்காக, உண்மைக்காகப்  போராடிக்கொண்டிருக்கிறேன். எனக்கு எப்போது கட்சியைப் பற்றியும் உங்களைப் பற்றியும் மட்டுமே சிந்தனை. வேறு சிந்தனையே இல்லை. உறக்கமே இல்லை

காலம் இப்படியே இருக்காது. மாறும். எப்போது மாறும் என்று கேட்காதீர்கள். நாம் பதவிக்காக இந்த இயக்கத்தைத் தொடங்கவில்லை உங்களிடம் ஆரம்பத்தில் இருந்து சொல்லி வருகிறேன். இந்த நாடு சீரழிந்து கிடக்கிறது. நாமும் ஊழல் செய்ய வேண்டுமா.? யார் உயிருக்கும் பாதுகாப்பு இல்லை. பெண்களுக்குப்  பாதுகாப்பு இல்லை. நாம் போராட்டக் களத்தில் நிற்கிறோம். போராட்டம்..கண்ணீர்.. தியாகம்... இதுதான் நம் பாதை பதவி அல்ல. நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் என் மீது நம்பிக்கை வைத்துள்ளீர்கள். ஒரு போது உங்களை நான் தலைகுனிய வைக்க மாட்டேன்" என்றார்.

-எம்.புண்ணியமூர்த்தி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement