Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பருப்பு சாகுபடி செய்யலாம் வாங்க!- அழைப்பு விடுக்கும் ஆராய்ச்சி நிறுவனம்

வழக்கமாக வெங்காயம், தக்காளியின் விலை உயர்வுதான் மக்களை பாடாய் படுத்தும். ஆனால், கடந்தாண்டு ஏற்றத்துக்கு போன பருப்பு வகை தானியங்களின் (பயறு வகைகளை உடைத்தால் பருப்பு) விலை உயர்வு, பருப்பை பற்றி கவனம் கொள்ள வைத்திருக்கிறது.

உலகளவில் பயறு வகை சாகுபடியில் முன்னணி வகிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனாலும் நம்நாட்டின் தேவைக்கு ஏற்ப உள்நாட்டில் உற்பத்தி இல்லை என்பதுதான் சோகம். இதற்கிடையே, 2016ம் ஆண்டை சர்வதேச பயறு வகைகள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பயறு சாகுபடி குறித்து பல்வேறு அமைப்புகளும் இந்தியாவில் விழிப்பு உணர்வுக் கூட்டங்களை நடத்தி வருகின்றன. அந்த வகையில் சென்னை, தரமணியில் உள்ள எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தில் 3 நாள் கருத்தரங்கு நடைபெற்று வருகிறது. வேளாண் வல்லுநர்கள், விஞ்ஞானிகள், விவசாயிகள் என்று பலர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி வருகின்றனர்.

தொடக்க நாளான நேற்று (ஆகஸ்ட் 7ம் தேதி) பேசிய எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி செல்வம், " நெல், கோதுமை பற்றாக்குறை பிரச்னை 1960களில் ஏற்பட்டது. அதன்பிறகு பஞ்சாபில் அறிமுகப்படுத்தப்பட்ட பசுமைப் புரட்சியால், உணவுப் பற்றாக்குறை பிரச்னை தீர்க்கப்பட்டது. தற்போது ஊட்டச்சத்து, நுண்ணூட்டச்சத்து குறைபாடு மக்களிடையே நிலவி வருகிறது. இதோடு பருப்பின் தேவையும் அதிகரித்து வருகிறது. பயறு உற்பத்தியை பெருக்கினால் இந்த பிரச்னை எளிதாக தீரும்" என்றார்.

லெபனான் நாட்டைச் சேர்ந்த சர்வதேச வறட்சிப் பகுதி வேளாண் ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குநர் மஹமத் சோல் பேசும்போது, " இந்தியாவில் 60களின் மத்தியில் நிகழ்ந்த ஒரு புரட்சி, இப்போது நடைபெற வேண்டும். அதுதான் பயறு உற்பத்தி புரட்சி. பயறு வகை தானியங்களின் முலம்ஊட்டச்சத்து பலன்கள் கிடைப்பதோடு, விவசாயிகளுக்கு வருமானமும் கிடைக்கிறது. வர்த்தக ரீதியாக விற்பனைக்கும் பருப்பு வகைகள் ஏற்றவை. 1.22 பில்லியன் மக்கள் ஊட்டச்சத்து பற்றாக்குறையோடு இருக்கும் நாட்டில் பயறு உற்பத்தி அவசியம்" என்றார்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.ராமசாமி பேசும்போது, "தமிழ்நாட்டில் தை, சித்திரை மற்றும் குறுவை என்று 3 பருவங்களில் பயறு வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. நெல் சாகுபடியில் இயந்திரங்கள் பயன்பாட்டால், அறுவடை வேலைகள் எளிதாக முடிந்து விடுகின்றன. அதனால், உடனே பயறு வகை சாகுபடி வேலைகளை தொடங்கலாம். ஹெக்டேருக்கு 570 கிலோ விளைச்சல் என்ற நிலை மாறி, பயறு வகைகளில் புதிதாக வந்துள்ள ஆராய்ச்சி ரகங்களால் 1000 கிலோ வரை மகசூல் எடுக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இப்போது அரசு 1 கிலோ பருப்பை 82 ரூபாய்க்கு வாங்கி, 90 ரூபாய்க்கு விற்கும் நிலையும் மாறும்" என்றார்.

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் பேசும்போது, "இந்த ஆண்டை சர்வதேச பயறு வகைகள் ஆண்டாக அறிவித்ததற்கு காரணமே பருப்பு பற்றாக்றைக்கு ஒரு நிரந்தர தீர்வை காண வேண்டும் என்பதே. பசியில்லா உலகம் என்ற இலக்கை நோக்கி நாம் பயணிக்கும்போது குழந்தைகள், பெண்களின் ஊட்டச்சத்து குறைபாடுகளையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். ஆஸ்திரேலியா, மொசாம்பிக், மியான்மர் உள்ளிட்ட நாடுகள் பயறு வகைகள் உற்பத்தியில் முன்னணியில் இருந்தாலும், உலகளவில் இந்தியாவும் முன்னணியில் இருந்து வருகிறது.

இதை இன்னும் அதிகப்படுத்த நெல் அறுவடைக்கு பிறகு உளுந்து, பயறு வகைகளை விதைப்பதற்கு விவசாயிகள் முன்வர வேண்டும். இப்படி விதைப்பதால் ஒரே வகையான பயிர்கள் பயிரிடுவது தவிர்க்கப்பட்டு, பல வகையான பயிர்கள் விதைப்பது சாத்தியமாகிறது. இதுமட்டுமில்லாமல், பயறு வகைகள் மண்ணுக்கு சத்தை அளிக்ககூடிய வேலையையும் செய்கிறது. பயறு வகைகளால் மண்ணின் வளம் காக்கப்படுவதோடு, உற்பத்தியும் பெருகுகிறது. இந்திய உணவுக் கழகமும் பருப்பு வகைகளை கொள்முதல் செய்வதற்கு தயாராக இருந்து வருகிறது" என்றார்.கருத்தரங்கின் ஒரு பகுதியாக கண்காட்சியும் நடைபெற்று வருகிறது. இதில் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பகுதி விவசாயிகள் நடத்தி வரும் பயறு உற்பத்தியாளர் நிறுவனத்தின் ஸ்டால், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

துளிகள்
..............

பயறு உற்பத்தியில் இந்தியாவின் நிலை

உலகளவில் இந்தியாவின் உற்பத்தி 22 சதவிகிதம். பயன்பாடு 27 சதவிகிதம்.

உள்நாட்டு தேவை 18 மில்லியன் டன். 2030ல் இது 32 மில்லியனாக அதிகரிக்கும். ஆண்டுதோறும் 3-5 மில்லியன் டன் இறக்குமதி செய்யப்படுகிறது.
 
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வின்படி ஒருநாளில் மனிதனின் பருப்பு தேவை சராசரியாக 80 கிராம். இந்தியாவில் 1960களில் ஒரு மனிதனின் பருப்பு பயன்பாடு சராசரியாக 70 கிராமாக இருந்தது. 2009-2010ல் அது 33 கிராமாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- த.ஜெயகுமார்

படங்கள்: அ. சரண்குமார்
(மாணவப் பத்திரிகையாளர்)உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement