Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்த தமிழர்களுக்காகவும் பேசுவோம்...!

'2016 , ஆகஸ்ட் ஒன்றாம் தேதி,  அகதிகள் முகாமில் இருக்கும் இலங்கை தமிழர்கள், தங்களுக்கு குடியுரிமை வேண்டி, சென்னை எழும்பூரில் போராட்டம் நடத்தினர்' என்கிற செய்தியை இணையத்தில் வாசித்தபோது எனக்கு வேடர் காலனி நினைவிற்கு வந்தது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஒன்றரை மணி நேர பயணம் வேடர் காலனி. தமிழகத்தில் இருக்கும் 107 அகதிகள் முகாம்களில் ஒன்றுதான் வேடர் காலனி. ஒரு குக்கிராமத்தை போல தோற்றம் அளிக்கும் இவ்விடம், ஒரு திறந்த வெளி சிறைக்கூடம். மொத்தம் அறுபது குடும்பங்கள் இருக்கும். எனவே அறுபது வீடுகள். எல்லாம் அலுமினிய தகரத்தால் ஆனவை. அனைத்தும் ஐந்து ஆறு தெருக்களில் இறுக்கமாக அமைக்கப்பட்டு, அதற்குள்ளாகவே அந்த கிராமத்தின் எல்லையும் அம்மக்களின் வாழ்க்கையும் முடிந்துவிடுகிறது.

அங்கு மணி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) என்கிற பெயின்டர் எங்களை அவ்வூருக்குள் அழைத்துச் சென்றார். மணி அண்ணனுக்கு முப்பத்தி ஐந்து வயது. இங்கு வந்து முப்பது வருடங்கள் ஆகிவிட்டது. அவரிடம் ஈழத்தை பற்றிய நினைவு எதுவும் மிஞ்சி இருக்கவில்லை. அவருக்கு திருமணம் ஆகி, இரண்டு குழந்தைகள் இருக்கிறாரகள். அவர்கள் வீட்டிற்கு சென்றபோது கூட, அவரின் பெண் குழந்தைதான் எங்களுக்கு குளிர்பானம் தந்தாள். அவள் ஈழத்தை வரைபடத்தில் தவிர வேறு எங்கும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. மணி அண்ணன் பன்னிரெண்டாவது வரை படித்திருந்தார். கோயம்புத்தூரில்  பெயின்டர் வேலை. தினம் காலை ஆறு மணிக்கு வீட்டை விட்டு வெளியேறினால் , மாலை ஆறு மணிக்குள் முகாமில் இருக்க வேண்டும். ஒரு வேலை சென்னை போன்ற அயல் ஊர்களில் வேலை பார்க்க வேண்டும் என்றால், ஒரு கடிதம் எழுதி அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு பெற வேண்டும். பிறகு பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை ஆஜராகி கையெழுத்திட வேண்டும். இவர் மட்டுமல்ல, அகதிகள் முகாமில் இருக்கும் பெரும்பான்மையான ஆண்கள் கட்டட வேலைக்கும் பெயின்டர் வேலைக்கும்தான் செல்கிறார்கள்.

கண்காணிப்பின் வலி:

மணி சொன்னார்,  " ஆரு என்ன படிச்சிருந்தாலும் சரி , இங்கன கட்டட வேலதான் பாக்கணும். ரகுனு ஒருத்தரு இருந்தாரு டபிள் MA  முடிச்சிருந்தாரு. ஆனாலும் பெயின்டர் வேலதான். அதனாலயே மனசு வெறுத்து போயி மென்டல் ஆகிட்டாரு" .

இங்கே முகாமிலேயே பள்ளிக்கூடம் இருக்கிறது. பள்ளிக்கூடம் முடித்துவிட்டு, கல்லூரி படிப்புக்கு இந்தியாவில்  எங்கு வேண்டுமானாலும் சேரலாம். ஆனால் படிப்பு முடிந்து  விட்டால் மீண்டும் முகாம் வாழ்க்கைக்கே வந்துவிட வேண்டும். இலங்கை அகதிகளுக்கு அரசாங்க வேலையும் இல்லை. தனியார் நிறுவனங்களும் இவர்களை உள்வாங்கிக் கொள்வதில்லை. எனவே மிஞ்சி இருப்பது இந்த தினக் கூலி தொழில்தான். இவர்களின் வீட்டை நம்மவர்கள் யாரும் அத்தனை எளிதில் வீடு என ஒப்புக் கொள்ள மாட்டார்கள். தகரத்தை கோத்து செய்யப்பட்டவை  அவை. உள்ளே புழுக்கம் அதிகமாகவே இருந்தது.

அங்கும் அம்மா ஃபேனும் , கலைஞர் டிவியும் இருந்தன. இங்கிருக்கும் மக்கள், எங்களை பார்த்தபோது ஒரு வித மயான அமைதியுடன் புன்னகைத்தனர். 'அந்நியர்களை கண்டால் அச்சப்படுவது இம்மக்களுக்கு இயல்பே' என்றார் மணி. காரணம் யார் சாதாரண ஆள், யார் க்யூ பிராஞ்ச் அதிகாரி என்று இவர்களால் கண்டு கொள்ள முடியாது அல்லவா... போர் முடிந்து புலிகள் முழுமையாக நீக்கப்பட்ட பிறகும், இந்திய அரசாங்கம் இலங்கை தமிழர்களின் மீது இருக்கும் சந்தேகக் கண்ணை நீக்கவில்லை. ஏதோ ஒரு வேஷத்தில், யாரோ ஒரு ஆள் அவர்கள் மத்தியிலேயே இருந்து கொண்டு, அவர்களின் சம்பாஷணைகள் அனைத்தையும் கேட்டு, அதை க்யூ பிரிவிற்கு அனுப்ப,  அடிக்கடி அவர்கள்  யாரையாவது அழைத்துக் கொண்டு போய் விசாரணை நடத்துவார்கள்.

இயக்கத்தை சேர்ந்தவன் / சேர்ந்தவள் என உறுதி செய்யப்பட்டால், குடும்பத்தில் இருந்து அவர்கள் நிரந்தரமாக பிரிக்கப்பட்டு  இயக்கத்தில் இருந்தவர்களுக்கான சிறப்பு முகாமில் அடைக்கப்படுவார்கள். அவர்கள் பிறரின் உலகில் இருந்து நிரந்தரமாக அழிக்கப்பட்டுவிடுவார்கள். எனவே யாரைப் பார்த்தாலும் ஒரு மெல்லிய அச்சம் அவர்கள் முகத்திலும், நெஞ்சத்திலும் எதிரொலிப்பது இயல்பே. மணி அண்ணன் கூட எங்களை அவ்விடத்தில் ரொம்ப நேரம் வைத்திருக்க விரும்பவில்லை. எதுவாக இருந்தாலும் போன் செய்து பேச சொன்னார். இதையும்  யாராவது கண்காணித்து புகார் செய்தால், இதற்காகவும் விசாரணை நடத்தப்படுமாம்.  

இது வேடர் காலனி முகாமின் கதை மட்டுமல்ல:

வேடர் காலனியில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, தமிழத்தில் அகதிகளாய் இருக்கும் அத்தனை ஈழத்து தமிழர்களுக்கும், மலையகத் தமிழர்களுக்கும் இதே நிலைதான். இது ஒரு தனி மனிதனை, எந்த அளவிற்கு மன உளைச்சலுக்கு ஆளாக்க  முடியுமோ அந்த அளவிற்கு ஆக்குகிறது. இதனால் முகாம்களில் தற்கொலைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. கடந்த மார்ச் மாதம், மதுரையில் இருக்கும் ஒரு முகாமில், ரவீந்திரன் என்பவர் மின் கம்பத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். காரணம் ஆஸ்பத்திரியில் உடல் நலம் சரியில்லாததால், அவரது மகன் அனுமதிக்கப்பட்டு ரோல் கால் நேரத்தில் முகாமில் இல்லாததால், அவர் மகனின் பெயர் நீக்கப்பட இருந்தது. நீக்கப்பட்டால் ஒரு அகதிக்கு கிடைக்க வேண்டிய எந்த சலுகையும் கிடைக்காது. ரவீந்திரன் நிலைமையை எவ்வளவோ எடுத்துச் சொல்லி கெஞ்சியும், அங்கிருக்கும் அதிகாரிகள் அவரை சற்றும் பொருட்படுத்தாது உதாசீனப்படுத்தியதால், மனம் நொந்து தற்கொலை செய்து கொண்டார். இலங்கை தமிழர்களை தவிர்த்து  ஆப்கானிஸ்தான், திபெத் , மியன்மர், பங்களாதேஷ் என கிழக்காசிய நாடுகள் பலவற்றில் இருந்து அகதிகள் இந்தியாவிற்கு வருகிறார்கள். அவர்களுக்கு தரும் அடிப்படை சுதந்திரமும் உரிமையும் கூட தமிழர்களுக்கு தரப்படாமலிருக்க காரணம், ராஜீவ் காந்தியின் மரணம்.  

1983 ல் இனப்போர் தொடங்கியதில் இருந்தே, இலங்கை  தமிழர்கள் அகதியாய் இங்கு அதிகம் புலம் பெயரத் தொடங்கி, 1990 களில் பெரும் எண்ணிக்கையிலான அகதிகள், தமிழகம் வந்தனர். இப்போது இங்கே 107 முகாம்களில், 60,000 க்கும் மேற்பட்டோர் வாழ்கிறார்கள்.  இவர்கள் எல்லாம் வந்து கால் நூற்றாண்டு ஓடி விட்டது. ஈழத்து பண்பாடு எதுவும் இவர்களோடு இப்போது இல்லை. அழகிய ஈழத்து தமிழ் கூட நம் வெகுஜன தமிழாய் மாறிவிட்டது. அடுத்த தலைமுறை இங்கே, பிறந்து  வளர்ந்து , வாழ காத்திருக்கிறார்கள். 

இவர்கள் நினைவில் இலங்கையோ, அங்கிருக்கும் அவர்கள் வீடோ, பூர்வீகமோ இல்லை. எதிர்காலம் பற்றிய அச்சம் மட்டுமே. அகதியாய் வந்தவர்கள், யாரோ சிலர் செய்த குற்றத்திற்காக, தலைமுறை கடந்த பின்பும் கைதியாய் வாழ்கிறார்கள். இலங்கை போரின் போது  இனத்தின் பேரழிவை எதிர்த்து  உரக்க பேசியவர்கள், அகதிகளைப் பற்றி பேசுவதில்லை. இவர்கள் நலன் குறித்து விவாதிப்பதில்லை. வெகு சிலர் இம்மக்களோடு, இவர்களின் குடி உரிமைக்காக போராடுகிறார்கள். ஈழத் தந்தை செல்வாவின் மகன் சந்திரசேகர் போன்றோர் இவர்களை ஈழத்தில் மீண்டும் குடியிருக்க அழைக்கிறார்கள்.  மழை  வெள்ளத்தின்போது, முகாமில் இவர்கள் வாழும் வாழ்க்கை மற்ற  எல்லோரையும் விடவும் கவலைக்கிடமாக இருந்தது. ஆனால் அதை கவனிக்க யாரும் இல்லை.

யுத்தத்தின் போது  இவர்களுக்காக ஒலித்த குரலில் ஒரு பங்கேனும் இன்று ஒலித்தால், இவர்கள் வாழ்க்கையில் விடியல் ஏற்படலாம்.

- ந. அருண் பிரகாஷ் ராஜ்
மாணவர் பத்திரிகையாளர்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement