Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சமாதான வளையத்தில் சசிகலா புஷ்பா! -கார்டனுக்காக களமிறங்கிய சீனியர் எம்.பிக்கள்

பாலியல் புகார், பணமோசடிப் புகார் என தொடர் வழக்குகளால் கடும் நெருக்கடியில் இருக்கிறார் அ.தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பா. ' பதவியை ராஜினாமா செய்துவிட்டு மன்னிப்புக் கடிதம் கொடுத்தால், கட்சிக்குள் அம்மா சேர்த்துக் கொள்வார்' என சமாதானப்படலத்தைத் தொடங்கியுள்ளனர் அ.தி.மு.க எம்.பிக்கள்.

டெல்லி விமான நிலையத்தில் தி.மு.க எம்.பி திருச்சி சிவாவுடன் நடந்த மோதல் தொடர்பாக, கார்டன் விசாரணைக்கு அழைக்கப்பட்டார் சசிகலா புஷ்பா. இதன்பின்னர் ராஜ்யசபையில் பேசிய சசிகலா, ' என் தலைவர் என்னை அறைந்தார்' என பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். ' அ.தி.மு.கவினரால் என் உயிருக்கு ஆபத்து. பாதுகாப்பு வழங்குங்கள்' என மேல்சபைத் தலைவரிடம் கோரிக்கையும் வைத்தார். சசிகலாவின் இந்த அதிரடியை அ.தி.மு.க மேலிடம் எதிர்பார்க்கவில்லை.

' எம்.பி பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போய்விடுவார் என்றுதான் நினைத்தோம். அகில இந்திய அளவில் கட்சிக்குக் கெட்ட பெயரைத் தேடித் தரும் அளவுக்குச் செல்வார் என்று நினைக்கவில்லை' என அ.தி.மு.க முன்னணி நிர்வாகிகளே புலம்பும் அளவுக்கு நிலைமை எல்லை மீறிப் போனது. தற்போது வரையில் தமிழ்நாட்டில் கால்பதிக்க முடியாத அளவுக்கு, தொடர் நெருக்கடிகளுக்கு ஆளாகியிருக்கிறார் சசிகலா. ' தமிழ்நாட்டிற்குள் வந்தால் கைது செய்யப்படலாம்' என்பதால் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

இந்நிலையில் சசிகலா விவகாரத்தின் அடுத்தகட்டம் குறித்து நம்மிடம் பேசிய, அ.தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர், " இவ்வளவு நடந்த பிறகும் அவர் எம்.பி பதவியை ராஜினாமா செய்யாமல் இருப்பதில், மிகுந்த கோபத்தில் இருக்கிறார் முதல்வர். பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தது முதல் டெல்லி  உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடத்துவது வரையில் பா.ஜ.க எம்.பி சுப்ரமணியன் சுவாமிதான் சசிகலாவை இயக்குகிறார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர் அ.தி.மு.க எம்.பிக்கள். ' சுவாமி தைரியம் கொடுப்பதால்தான், தலைமைக்கு எதிராக பகிரங்கமாகப் பேச முடிகிறது' என உறுதியாக நம்புகிறார் முதல்வர்.  சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்புக்காக முதல்வர் காத்திருக்கும்போது, சசிகலா கிளப்பிய புகார் கூடுதல் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. தவிர, இந்த விவகாரத்தை டெல்லி மீடியாக்கள் பெரிதுபடுத்துவதால், விவகாரத்தை சுமூகமாக முடித்துக் கொள்ள தலைமை விரும்புகிறது. எனவே, உளவுத்துறை அதிகாரி ஒருவர் மூலமாக சமாதானப்படலம் தொடங்கிவிட்டது.

' கட்சிக்குத் துரோகம் செய்துவிட்டுப் போன எத்தனையோ பேரை அம்மா மன்னித்து ஏற்றுக் கொண்டார். தற்போது அமைச்சராக இருக்கும் ஜெயக்குமார் மீது ஒரு காலத்தில் அம்மா கடும் கோபத்தில் இருந்தார். இப்போது அவரை மன்னித்து அமைச்சர் பதவியும் கொடுத்துவிட்டார். நீங்களும் அதேபோல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மன்னிப்புக் கடிதம் கொடுங்கள். அம்மா ஏற்றுக் கொள்வார். இன்னும் ஐந்து ஆண்டுகள் அ.தி.மு.க ஆட்சிதான் தமிழ்நாட்டில் நடக்கப் போகிறது. யாருடைய தூண்டுதலுக்கும் இரையாகிவிட வேண்டாம்' என சசிகலா உறவினர்களிடம் பேசியிருக்கிறார் அந்த அதிகாரி. அவ்வாறு செய்தால், வழக்கு உள்ளிட்ட விவகாரங்களில் இருந்து விடுவித்துவிடும் வாய்ப்பும் இருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மேலிடத்தின் கோரிக்கைக்கு சசிகலா செவிசாய்ப்பார் என நம்புகிறோம். அவருக்கு நெருக்கமான எம்.பிக்கள் மூலமாகவும் சமரச வேலைகள் வேகமெடுத்துள்ளன" என்றார் விரிவாக.

இந்த விவகாரங்கள் எதையும் அறியாத அ.தி.மு.க வழக்குகளைக் கையாளும் ராஜ்யசபை எம்.பி ஒருவர், ' சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கிவிட்டோம்' என ராஜ்யசபை செயலகத்தில் மனு கொடுக்கப் போக, அதிர்ந்து போய்விட்டார் சீனியர் எம்.பி ஒருவர். அவரை அழைத்து, ' கட்சித் தலைமையிடம் இருந்து அதிகாரபூர்வ கடிதம் கொடுக்கப்பட்டால் மட்டுமே, செயலகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். இந்த விவகாரத்தில் கட்சித் தலைமையே மவுனமாக இருக்கிறது. உங்களை யார் முந்திக் கொண்டு கடிதம் கொடுக்கச் சொன்னது?' எனக் காய்ச்சி எடுத்துவிட்டார். அந்த எம்.பியோ, ' புதிய எம்.பிக்கள் பதவியேற்க உள்ளனர். நமது கட்சி சார்பில் நான்கு எம்.பிக்கள் மேல்சபையில் அங்கம் வகிக்க உள்ளனர். சீனியாரிட்டிபடி இடங்களை ஒதுக்குவதற்கு வசதியாக, ராஜ்யசபை செயலகம் பட்டியலைக் கேட்டிருந்தது. அதற்காகத்தான் சசிகலாவை நீக்கிவிட்டதாகக் கடிதம் கொடுத்தேன்' என விளக்கம் கொடுத்திருக்கிறார். ' தலைமையின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம்' என அனைத்து எம்.பிக்களுக்கும் எச்சரிக்கை விடுத்தார் சீனியர் எம்.பி.

சசிகலா புஷ்பாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் அ.தி.மு.க முந்துமா அல்லது ' ராஜ்யசபையில் முந்திக் கொண்டது போலவே, இந்தமுறையும் அ.தி.மு.க மேலிடத்திற்கு எதிராக எதையாவது சசிகலா செய்துவிடுவாரா' என தீவிர யோசனையில் ஆழ்ந்திருக்கிறார்கள் அ.தி.மு.க எம்.பிக்கள்.

-ஆ.விஜயானந்த்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement