ரயிலில் பணம் கொள்ளை: கொள்ளையர்கள் ஜார்க்கண்டில் பதுங்கலா?

சென்னை: பரபரப்பை ஏற்படுத்திய ரயில் பண கொள்ளை சம்பவத்தில் வடமாநில கொள்ளையர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரமாகியுள்ளது. கொள்ளையர்கள் ஜார்க்கண்டில் பதுங்கியிருப்பதாக வந்த ரகசிய தகவலையடுத்து தமிழக போலீஸார் அங்கு விரைந்துள்ளனர்.

சேலத்திலிருந்து சென்னைக்கு கடந்த 8-ம் தேதி இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4.16 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தது சென்னை எக்ஸ்பிரஸ். இந்த ரயிலில் சேலம் பகுதியில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து அழுக்கான ரூபாய் நோட்டுக்கள் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு தனி பெட்டி மூலம் அனுப்பப்பட்டிருந்தன. 226 மரப்பெட்டிகளில் 342.75 கோடி ரூபாய் இருந்தது. கோடிக்கணக்கான மதிப்பில் பணம் கொண்டு இருந்ததால் ஆயுதப்படை உதவி கமிஷனர் நாகராஜ் தலைமையில் 9 பேர் பாதுகாப்புக்காக துப்பாக்கியுடன் அதில் வந்தனர்.

இவர்கள் பயணித்த ரயில் பெட்டிக்கு மூன்று பெட்டிகள் தள்ளி பணம் ஏற்றப்பட்ட பெட்டி இருந்தது. சென்னை அடைந்தவுடன் எழும்பூர் பார்சல் அலுவலகத்தில் சீலிடப்பட்ட ரயில் பெட்டி,  காலை 10.45  மணியளவில் ரிசர்வ் வங்கியின் உதவி மேலாளர் நடராஜன் முன்னிலையில் திறக்கப்பட்டது. அப்போது ரயில் பெட்டியின் மேற்கூரையில் துளையிடப்பட்டிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணையில் 5.75 கோடி ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது.

இந்த வழக்கு சிபிசிஐடி போலீசுக்கு வழக்கு மாற்றப்பட்டதும், சேலத்திலிருந்து சென்னை வரை உள்ள வழித்தடம் முழுவதையும்  போலீஸார் சோதனை நடத்தினர். ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணை அறிக்கைகளும் ஆராயப்பட்டன. அப்போது விருத்தாசலம் பகுதியில் இன்ஜின் மாற்றுவதற்காக 20 நிமிடங்கள் நின்றது தெரியவந்தது. மேலும் விருத்தாசலம் ஜங்சன் பகுதியில் பல ரயில்கள் கிராசிங் இருந்ததால் சென்னை எக்ஸ்பிரஸ் மெதுவாக சென்றுள்ளது. எனவே இந்த பகுதியில் தான் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசுக்கு எழுந்தது. இதனால் விருத்தாசலம் ரயில்வே ஜங்சன் பகுதியில் சென்னை எக்ஸ்பிரஸ் கடந்து சென்ற நேரத்தில் பேசப்பட்ட போன் அழைப்புகளை போலீஸார் சேகரித்தனர். அப்போது சில போன் அழைப்புகள் மூலம் போலீசுக்கு முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன.

அந்த பகுதியில் பதிவாகிய சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீஸார் கண்காணித்ததில் சில தடயங்கள் கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் வடமாநில கொள்ளையர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது  ஜார்க்கண்டில் கொள்ளையர்கள் பதுங்கியிருப்பதாக வந்த ரகசிய தகவல் அடிப்படையில் போலீஸ் டீம் அங்கு விரைந்துள்ளது.

இந்த கொள்ளை சம்பவத்தில் கொள்ளையர்களுக்கு ரயில்வே ஊழியர்களில் சிலர் உதவியிருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது. அதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில் வங்கிகளுக்கு பணத்தை மரப்பெட்டிகளில் பார்சல் செய்யும் பணியை  சேலத்தில் உள்ள பிரபல பார்சல் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த நிறுவனத்திற்கும், வங்கியில் உள்ள சில அதிகாரிகளுக்கு மட்டுமே பணம் சென்னைக்கு கொண்டு செல்லப்படும் தகவல் தெரியும். அடுத்து ரயில்வேயில் சில அதிகாரிகளுக்கும், பாதுகாப்புக்கு சென்ற போலீஸாருக்கும் தகவல் தெரியும் என்பதால் அவர்களிடமும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அவர்களின் போன் அழைப்புகளையும் போலீஸார் கண்காணித்து வருகின்றனர். இதில் சிலர் மீது போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். விரைவில் கொள்ளையர்களை பிடித்துவிடுவோம் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர் வழக்கை விசாரித்துவரும் சிபிசிஐடி போலீஸார்.

- எஸ். மகேஷ்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!