Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’கபாலி’ ரஞ்சித்துடன் புகைப்படம் எடுத்தால், இப்படியும் நடக்குமா!?

யர் கல்வி நிறுவனங்கள் குறித்து நமக்கொரு பிம்பம் இருக்கும். அங்கு படிப்பவர்கள் எல்லாம் முற்போக்குச் சிந்தனை கொண்டவர்கள்... அனைத்தையும் பரந்த மனப்பான்மையுடன் அணுகுபவர்கள் என்று. ஆனால், அண்மையில் நடந்த ஒரு சம்பவம், அந்த எண்ணங்களை எல்லாம் பொய்யாக்கி உள்ளது

தனது முகநூல் பக்கத்தில் ’கபாலி’ திரைப்படத்தின் இயக்குநர் ரஞ்சித்தோடு இருக்கும் புகைப்படத்தை வைத்ததற்கு, ஐ.ஐ.டி-யில் படிக்கும் ஒரு மாணவருக்கு என்னென்ன கமென்ட்கள், மெசேஜ்கள் வந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள். ‘சூப்பர் மச்சி’, ‘கூல் டூட்’, ‘செம’ என்கிற கமென்ட்களை நீங்கள் எதிர்பார்த்தீர்களானால் ஏமாந்துபோவீர்கள்.

"உன்னையெல்லாம் வெட்டி பன்றிக்குத்தான் போட வேண்டும்."

"கீழ்த்தரமான உன்னைப் பார்க்கும்போது உன் தாயும் நடத்தை கெட்டவளாகத்தான் இருப்பாள் என்றே தோன்றுகிறது."

‘’கண்டிப்பாக நீயெல்லாம் இடஒதுக்கீட்டு முறையில்தான் ஐ.ஐ.டி-யில் படிக்க வந்திருப்பாய்.’’

என்கிற மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகள்தான். இன்னமும் பலவற்றை வெளியில் சொல்ல முடியாது. அந்த அளவுக்கு வக்கிரம் நிறைந்தவை.

என்ன நடந்தது ?

அந்த மாணவர் பெயர் அபினவ் சூர்யா. சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகக் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் இளங்கலை பொறியியல் இறுதி ஆண்டு படித்து வருகிறார். கடந்த செவ்வாய் அன்று சென்னை எக்மோரில், ’கபாலி’ திரைப்படம் குறித்த உரையாடல் நிகழ்வு நடந்துள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித் மட்டுமல்லாது எழுத்தாளர்கள், விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்ட நிகழ்வில் அபினவ் சூர்யாவும் நண்பர்களுடன் கலந்துகொண்டிருக்கிறார். விழா நிறைவில் நண்பர்கள் சூழ பா.ரஞ்சித் உடன் செல்ஃபி எடுத்துள்ளார். அந்தப் படத்தை அன்று இரவு தனது முகநூல் பக்கத்தில் முகப்புப் படமாக வைத்துள்ளார். இவ்வளவுதான் அவர் செய்தது.


மறுநாள் காலை முகநூலைத் திறந்துப் பார்த்தவருக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது. ஒன்று, இரண்டல்ல... கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கில் குறுஞ்செய்திகள். அத்தனையும், சாதியையும், அவரையும் குறிவைத்து எழுதிய மோசமான பதிவுகள். இதில் பெரும்பாலானவை  உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் அனுப்பியதே. தற்போது இந்தப் பிரச்னை சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஐ.ஐ.டி மாணவர் அபினவ் சூர்யாவிடம் பேசினோம். ‘’கடந்த வாரத்தில் ’கபாலி’ இயக்குநர் ரஞ்சித்தோடு நான் இருக்கும் புகைப்படத்தை வைத்ததால் அதற்காக கொந்தளித்துப் போய் மட்டும் இவர்கள் இப்படி வன்மத்தைக் காட்டவில்லை. கடந்த வாரத்தில் எங்கள் கல்லூரிக்கு ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.டி.பாக்ஸி சுதந்திர விழா சார்பாக அழைக்கப்பட்டு இருந்தார். அந்த விழாவில் ஒரு தீவிர வலதுசாரி தன்மையோடு பேசிய அவர், ’பாகிஸ்தானோடு சண்டையிடுங்கள்... அப்போதுதான் நம் நாட்டின் ஒருமைப்பாடு நிலைக்கும். எங்கள் தலைமுறையில் பாகிஸ்தானை இரண்டு ஆக்கினோம். உங்கள் தலைமுறை அதை மேலும் நான்கு ஆக்க வேண்டும். அப்போதுதான் நாம் அமைதியாக வாழ முடியும்’ என்றார்.

மேலும் அவர், ஒட்டுமொத்த விடுதலை இயக்கத்தையும் கொச்சைப்படுத்தி, ராணுவத்தால்தான் இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தது என்றதோடு இல்லாமல், ‘அகிம்சை முட்டாள்தனமானது’ என்றார். மற்ற நாட்டு மக்களிடம் அன்பு செலுத்துங்கள் என்று பேசாவிட்டால் பரவாயில்லை. பகைமை உணர்வை வலுப்படுத்தும்படி பேசியதால், கல்லூரி நிர்வாகத்துக்குக் கடிதம் எழுதினேன். அதைத் தொடர்ந்து மேஜர் பேச்சை ஆதரித்தவர்கள் என் மீது இப்படியான வன்மத் தாக்குதல்களைத் தொடுக்குகிறார்கள். 

கடந்த ஆண்டு ’அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம்’ என்கிற பெயரில் இயங்கி வந்த அமைப்பைத் தடைசெய்யக்கோரி ஏ.பி.வி.பி., ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. அந்தப் போராட்டம் முறியடிக்கப்பட்டாலும் தொடர்ந்து அந்த அமைப்புக்கான அச்சுறுத்தல் நிலவி வருகிறது. அதுபோல தலித் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் உயர்சாதி மாணவர்களாலும், பேராசிரியர்களாலும் சாதியத் தாக்குதலுக்கு ஆளாகிறார்கள். இதற்கு எல்லாம் ஒரே தீர்வு என்பதை எளிதில் கொண்டு வந்துவிட முடியாது. பொதுவுடைமைக் கருத்துகளை பரப்பி அதன்மூலம் மக்கள் விழிப்பு உணர்வு அடைந்தால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்கள் மேலும் நடைபெறாமல் தடுக்க முடியும்’’ என்றார் அபினவ் சூர்யா.

 சாதி, இந்திய ஆன்மாவை அரித்துக்கொண்டிருக்கும் ஒரு நோய்க் கூறு.  சகிப்புத்தன்மையற்றச் சமூகமாக மாறி வருகிறோம். நிச்சயம் இது யாருக்கும் நன்மை பயக்கப்போவது இல்லை.

- மா.அ.மோகன் பிரபாகரன், சி.எல்.கபிலன் (மாணவப் பத்திரிகையாளர்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement