தி.மு.க.வினர் போட்டிப் பேரவைக் கூட்டம்..! - தலைமை செயலகத்தில் பரபரப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில், தி.மு.க.வினர் போட்டிப் பேரவைக் கூட்டம் நடத்தி வருவதால் தலைமை செயலகத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்களை 1 வாரத்திற்கு சஸ்பெண்ட் செய்து நேற்று முன்தினம் சபாநாயகர் தனபால் உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து, நேற்று காலை சட்டப்பேரவைக்கு வந்த ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்களை, பேரவை வளாகத்திற்குள் நுழைய அவைக் காவலர்கள் அனுமதி மறுத்தனர்.

இதையடுத்து ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  ஸ்டாலின், துரைமுருகன் உட்பட தி.மு.க. உறுப்பிர்கள் அனைவரும் பேரவையின் 4-ம் எண் வாயில் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பேரவையின் 4-ம் எண் வாயில் முன்பு இன்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், ஸ்டாலின் தலைமையில் போட்டி பேரவைக் கூட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்கள் கலந்து கொண்டு, சட்டப்பேரவையை போல் மைக்குகளில் போட்டிப்பேரவை கூட்டத்தில் பேசி வருகின்றனர்.

இந்த போட்டி சட்டப்பேரவை கூட்டத்தில், பேரவைத் தலைவராக எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் செயல்படுகிறார். அவர், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார். அ.தி.மு.க. அமைச்சர்களைப் போலவே இந்தப் போட்டிக் கூட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பேசி வருகின்றனர். இதில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி போல தி.மு.க.வினர் எதிரெதிரே அமர்ந்து போட்டிக் கூட்டத்தில் வாக்குவாதம் செய்து வருகின்றனர்.

சபாநாயகரின் சஸ்பெண்ட் உத்தரவுக்கு எதிராக 2வது நாளாக பேரவை வளாகத்தில் தி.மு.க.வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தி.மு.க.வினரின் போட்டிக் கூட்டத்தை தொடர்ந்து அங்கு பரபரப்பு நிலவிவருவதால், பேரவை வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

படங்கள்: ஆ.முத்துகுமார்

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!