இருளர் பெண்கள் வழக்கை மூடி மறைக்கிறதா போலீஸ்?

விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூரில் போலீஸாரால் சீரழிக்கப்பட்ட நான்கு இருளர் பெண்களை நினைவிருக்கிறதா? இந்தக் கொடூரச் சம்பவம் நிகழ்ந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. தமிழகத்தையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட இருளர் பெண்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. எளியவர்களுக்கு நீதிப் பெற்றுத் தரவேண்டிய நீதித்துறை மந்தமாக இருக்கிறது.

கடந்த 2011-ம் ஆண்டு திருக்கோயிலூரைச் சேர்ந்த நான்கு இருளர் பெண்களை, காவல் ஆய்வாளர் தலைமையிலான 8 போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது, ''காவல் நிலையம் செல்லும் வழியில் உள்ள காட்டுப் பகுதியில், தங்களை போலீஸார் பாலியல் பலாத்காரம் செய்தார்கள்'' என்ற பகீர் குற்றச்சாட்டை இருளர் பெண்கள் முன்வைத்தனர். இதனையடுத்து, அந்த 8 போலீஸாரையும் பணி இடைநீக்கம் செய்த தமிழக அரசு, இது தொடர்பாக செஞ்சி போலீஸ் துணைக் கண்காணிப்பாளரை விசாரிக்கவும் உத்தரவிட்டது. அதே சயமத்தில், இந்தப் புகார் பற்றி திருக்கோயிலூர் மாஜிஸ்திரேட்டும் நீதி விசாரணை நடத்தினார். 150-க்கும் மேற்பட்ட சாட்சியங்களை விசாரித்த போலீஸார், ''கிரிமினல் வழக்கில் சிக்கியுள்ள தங்களது குடும்ப உறுப்பினர்களைக் காப்பாற்றவே, இந்தப் பெண்கள் பாலியல் பலாத்கார நாடகம் நடத்துகின்றனர்'' என அறிக்கை சமர்ப்பித்தனர்.

இதனிடையே சிறைக் கைதிகளுக்கான உரிமை மையத்தின் இயக்குநர் புகழேந்தி என்பவர் இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடந்திருந்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, திருக்கோயிலூர் மாஜிஸ்திரேட் இன்னும் தனது நீதி அறிக்கையைத் தாக்கல் செய்யாதது தெரியவந்துள்ளது.

சில வழக்குகளில் நீதிமன்றம் அதிரடியாகச் செயல்படும்போது, இந்த வழக்கில் இவ்வளவு தாமதம் ஏன்? இருளர் பெண்களுக்கு நடந்த இந்தக் கொடுமையை வெளிக்கொண்டுவந்த பேராசிரியர் கல்யாணி, ''ஆரம்பத்தில் இருந்தே இந்த வழக்கை மூடிமறைக்க போலீஸார் முயற்சி செய்தார்கள். 'உங்களுக்கு என்ன வேண்டும் என்றாலும் செய்கிறோம், இந்த வழக்கை மட்டும் கைவிட்டுவிடுங்கள்' என எங்களிடம்கூட கெஞ்சினார்கள். பாதிக்கப்பட்டவர்கள் பழங்குடியினர்... குற்றம் செய்தவர்கள் போலீஸ்காரர்கள். நிலைமை இப்படி இருக்கும்போது, தமிழக போலீஸாரே இந்த வழக்கை விசாரித்தால் எப்படி நியாயம் கிடைக்கும்? சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸார், இந்த வழக்கு முடிவதற்கு முன்பே மீண்டும் பணிக்குத் திரும்பிவிட்டார்கள். டி.ஐ.ஜி., எஸ்.பி அலுவலகங்களில் வைத்து வழக்கை வாபஸ் வாங்கச்சொல்லி அந்த நான்கு பெண்களை போலீஸார் மிரட்டினார்கள். தவறு செய்யவில்லை என்றால், போலீஸார் ஏன் இப்படி மிரள்கிறார்கள்? வழக்கின் விசாரணை நடந்தால் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில், வழக்கை நசுக்க தமிழக அரசு சகல விதங்களிலும் முயற்சிக்கிறது. அரசின் அழுத்தம் காரணமாகவே மாஜிஸ்திரேட் நீதி விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்யவில்லை என்ற சந்தேகம் எழுகிறது'' என்றார்.

'பாதிக்கப்பட்ட பெண்கள் இருளர் என்பதற்கான சான்றிதழே இல்லை' என போலீஸ் அறிக்கை அளித்திருப்பதைப் பற்றிப் பேசிய கல்யாணி, ''பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்குப் பள்ளிகளிலேயே சாதிச் சான்றிதழ் அளிக்கிறார்கள். ஆனால், பழங்குடி மாணவர்களுக்கு மட்டும் 12-ம் வகுப்புக்குப் பிறகும் சாதிச் சான்றிதழ் கிடைப்பதில்லை என்பது அரசுக்குத் தெரியுமா'' எனக் கேள்வி எழுப்பினார்.

- ஆ.நந்தகுமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!