வெளியிடப்பட்ட நேரம்: 16:38 (19/08/2016)

கடைசி தொடர்பு:11:15 (20/08/2016)

நம் பிள்ளைகளின் கல்விக்கு அரசு எவ்வளவு செலவிடுகிறது தெரியுமா...? 2 min Read

ரு மாநிலத்தின் மனிதவள மேம்பாட்டுக்கு விதையாக இருப்பது கல்விதான். தமிழக அரசு பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான தொகையை ஒதுக்குகின்றனர். 2016-17-ம் ஆண்டில், அதாவது நடப்பு ஆண்டுக்கு பள்ளிக்கல்வித் துறைக்கு 24,130 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.


எப்படிச் செலவழிப்பார்கள்?

இதனைத் தொடக்கக் கல்வி, மேல்நிலைக் கல்வி எனப் பிரித்துச் செலவழிப்பார்கள். இலவச மடிக்கணினி, மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், சைக்கிள்கள், சத்துணவு, பஸ்பாஸ், ஜாமின்டிரி பாக்ஸ் போன்றவற்றை இலவசமாக வழங்கும் திட்டங்களுக்காக நிதி ஒதுக்கப்படுகிறது. பள்ளிகளில் தரத்தை உயர்த்துவதற்கும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் நிதியைச் செலவிடுகின்றனர்.


முந்தைய ஆண்டைவிட அதிகம்!

கடந்த ஆண்டு பள்ளிக்கல்வித் துறைக்கு 20,936 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டது. ஆனால், இப்போது கடந்த ஆண்டைவிட 3,100 கோடி ரூபாய் அதிகம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவு அதிகரிக்கப்பட்டே வந்திருக்கிறது. ஆண்டுதோறும் கோடிக்கணக்கான தொகையைச் செலவழித்தபோதிலும், பள்ளிக் கல்வியின் தரம் எப்படி இருக்கிறது?


தேவை என்பதை அறிவதில்லை!

"பள்ளிக்கல்விக்கு நிதி ஒதுக்கும் முன்பு என்ன தேவை இருக்கிறது என்று ஆசிரியர் அமைப்புகள், பெற்றோர் சங்கத்தினர், மாணவர் அமைப்புகளை அழைத்து விவாதிக்க வேண்டும்" என்ற முக்கியமான கருத்தை முன்வைக்கிறார் பொதுப் பள்ளிகளுக்கான மேடை அமைப்பைச் சேர்ந்த பிரின்ஸ் கஜேந்திரபாபு. ''திட்டங்களுக்குத் தகுந்தாற்போல செலவு செய்கிறார்களா அல்லது தேவைக்கு ஏற்றபடி செலவு செய்கிறார்களா என்ற தெளிவு கல்வித் துறைக்குத் தேவை. பள்ளிக்கல்வித் துறையைப் பொறுத்தவரை ஏராளமான தேவைகள் இருக்கின்றன. தொடக்கப்பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை. மொழிப் பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை. கழிவறைகள் போதுமான அளவுக்கு இல்லை. இந்தப் பற்றாக்குறையால் தொடக்கப்பள்ளி மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படும். இருக்கின்ற ஆசிரியர்களும் நிர்வாகப் பணிகளில்தான் ஈடுபடுகின்றனர். 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்புவரை பெரும்பாலான பள்ளிகளில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு பள்ளியில், 85 மாணவர்களுக்கு ஒரு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்தான் இருக்கிறார். பெரும்பாலான பள்ளிகளில் தொழிற்கல்வி ஆசிரியர்களே இல்லை. இதற்கு எல்லாம் இந்த அரசு நிதி ஒதுக்க வேண்டும். எனவே, பட்ஜெட்டுக்கு முன்பாக அல்லது பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கைக்கு முன்பாக பள்ளிக்கல்வித் துறைக்கு என்ன தேவை என்பதை அறிய ஆசிரியர் அமைப்புகள், பெற்றோர் அமைப்புகள், மாணவர் அமைப்புகளிடம் ஆலோசனை நடத்த வேண்டும்" என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.


வெள்ளை அறிக்கை தேவை!

பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் தொகை முறைப்படி செலவிடப்படுகிறதா என்று தமிழ்நாடு மாணவர் - பெற்றோர் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் அருமைநாதனிடம் பேசினோம். "பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் ஆண்டுதோறும் போதுமான அளவுக்குத்தான் நிதி ஒதுக்குகின்றனர். ஆனால், ஒதுக்கீடு செய்த நிதியை எந்தெந்த வகையில் செலவு செய்தனர் என்ற விவரங்களை அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் தெரிவிப்பதில்லை. அதிகாரிகள் பெரும்பாலும் நிர்வாகப் பணிகளில்தான் ஈடுபடுகின்றனர். மீட்டிங் நடத்துகின்றனர்... அரசுக்கு அறிக்கை அனுப்புகின்றனர். ஆனால், பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்துக் கண்காணிப்பதற்கு அதிகாரிகள் யாரும் இல்லை. எனவே, பள்ளிக்கல்வித் துறையில் நடைபெறும் பணிகளைக் கண்காணிக்க ஒரு பிரிவு ஏற்படுத்த வேண்டும். செலவு செய்யப்பட்ட விவரங்கள் குறித்து வெள்ளை அறிக்கையாகவும் வெளியிட வேண்டும்" என்றார்.

2016-17-ம் ஆண்டில் எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி?

1. விலையில்லாச் சீருடைகள் திட்டம் - ரூ.409 கோடியே 30 லட்சம்
2. விலையில்லாக் கம்பளிச் சட்டைகள் - ரூ.3 கோடியே 71 லட்சம்
3. விலையில்லாக் காலணிகள் - ரூ.120 கோடியே 7 லட்சம்
4. விலையில்லா மடிக்கணினிகள் - ரூ.1,100 கோடி
5. மாணவர்களுக்கான சிறப்பு ஊக்கத்தொகை திட்டம் -  ரூ.381 கோடி

 


இதுவா கல்வி புரட்சி!

இந்திய மாணவர் சங்கத்தின், மாநிலத் துணைத்தலைவர் ஏ.டி.கண்ணன், "பல கோடி ரூபாயை ஒதுக்கி கல்வி புரட்சி செய்கிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. 1600-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளை மூடியிருக்கிறார்கள். தமிழகத்தில் புதிய பள்ளிக்கூடம் கட்டவும், அடிப்படை வசதிகள் செய்யவும், பழைய கட்டடங்களைப் புனரமைக்கவும் 4,400 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கியது. ஆனால் அதைப் பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பினார்கள். 20 மாணவர்களுக்கு ஒரு குடிநீர் குழாய், ஒரு சிறுநீர் கழிப்பிடம், 50 மாணவர்களுக்கு ஓரு கழிப்பிடம் இருக்கவேண்டும் என்று சொல்லப்படுகிறது. தமிழகப் பள்ளிகளின் அடிப்படை வசதிகளின் நிலை கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது" என்றார்.


- கே.பாலசுப்பிரமணி


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்