ஜாமீனில் இருந்த யுவராஜ் மீண்டும் கைது!

சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ள யுவராஜை, சென்னையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ். இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த வழக்கு தொடர்பாக, திருச்செங்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பலரை கைது செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கை விசாரணை செய்துவந்த பெண் டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து விஷ்ணுப்பிரியா தற்கொலை வழக்கும், கோகுல்ராஜ் கொலை வழக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை பேரவை அமைப்பின் தலைவர் யுவராஜ், கடந்த ஆண்டு அக்டோபரில் நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசில் சரண் அடைந்தார். அதன்பின் அவர், உயர் நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்று வெளியே வந்தார். சென்னை பெரியமேட்டில் தங்கியபடி யுவராஜ், பூக்கடை காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.

இந்த நிலையில், யுவராஜுக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 12-ம் தேதி யுவராஜுக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய நிபந்தனை ஜாமீனுக்கு இடைக்கால தடை விதித்தது. இதைத்தொடர்ந்து, திடீரென சி.பி.சி.ஐ.டி. போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு ஸ்டாலின், யுவராஜை கைது செய்து எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. தலைமை அலுவலகத்துக்கு அழைத்து சென்றார்.

 மேலும், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் யுவராஜ், நாமக்கல்லுக்கு அழைத்து செல்லப்பட்டதுடன், நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று சி.பி.சி.ஐ.டி. வட்டாரங்கள் தெரிவித்தன.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!