Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'காதலும் கார்ஃபைடு கல்லைப் போலத்தான்!' -முதல்வர் உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கு ராமதாஸின் கடிதம்

போயஸ் கார்டனில் முதல்வரிடம் கொடுப்பதற்காக கடிதம் ஒன்றைக் கொடுத்து அனுப்பியிருக்கிறார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ். ' முதல்வரைச் சந்தித்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை. பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியே மனு கொடுத்தோம்' என்கின்றனர் பா.ம.க நிர்வாகிகள். 

தமிழக பிரச்னைகள் குறித்து தினம்தோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ். நேற்று மாலை அவரது சார்பாக முதல்வரின் போயஸ் கார்டன் வீட்டிற்கு வந்தார் பா.ம.க செய்தித் தொடர்பாளர் பாலு. ' திடீரென்று முதல்வரிடம் மனு கொடுக்கும் அளவுக்கு என்ன நேர்ந்துவிட்டது' என அரசியல் மட்டத்தில் விவாதம் எழுந்தது. இதுகுறித்து பா.ம.க தலைமையிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. பாலுவிடம் பேசினோம். " முதல்வரை சந்திக்கச் சென்று மனு கொடுத்ததில் எந்த உள்நோக்கமும் இல்லை. அங்கு அவரை சந்திக்க முடியவில்லை. முதல்வரின் செயலாளர் ஒருவரிடம் மருத்துவர் அய்யா கொடுத்தனுப்பிய கடிதத்தைக் கொடுத்தோம். பெண்களின் பாதுகாப்பு குறித்துத்தான் கடிதத்தில் விளக்கப்பட்டிருந்தது. இதேபோல், அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் கொடுத்து வருகிறோம். அரசியல் காரணங்கள் எதுவுமில்லை" என்றவர், முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட கடிதத்தின் நகலை நமக்குக் கொடுத்தார். 

அதன் சாராம்சம் இதுதான்....

அன்புள்ள முதல்வர் அவர்களுக்கு,
வணக்கம்!
தமிழ்நாட்டின் இன்றைய பெரும் பிரச்னைகளில் ஒன்றாக உருவெடுத்திருக்கும் இளம் பெண்களின் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த உங்களின் கவனத்தை ஈர்க்கவும் பெண்கள் பாதுகாப்புக்காகவும் பெண்களின் கண்ணியம் மற்றும் உரிமைகளை பாதுகாப்பதற்காகவும் குரல் கொடுக்குமாறு உங்களை  கேட்டுக் கொள்வதற்காகவும் தான் உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன்.

சில ஆண்டுகளுக்கு முன் காரைக்கால் வினோதினியிடம் அந்தக் கொடுமை தொடங்கியது. கொடிய மிருகம் ஒன்று, அந்த அப்பாவிப் பெண்ணுக்கு காதல் வலை வீசியது. ஆனால், தன் பொறுப்பை உணர்ந்திருந்த வினோதினி, அந்தக் காதலை ஏற்க மறுத்துவிட்டார். விளைவு அப்பெண்ணின் முகத்தை அமிலம் வீசி சிதைத்தது  அந்த மிருகம். ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த வித்யா என்ற பெண்ணுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த விஜயபாஸ்கருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், இடையில் ஏற்பட்ட ஊடலால் வித்யாவுக்கு அமில அபிஷேகம் செய்தது அந்த மிருகம். இந்த இரு நிகழ்வுகளிலும் பாதிக்கப்பட்டு பல மாதங்கள் உயிருக்கு போராடிய வினோதினியும் வித்யாவும் இறுதியில் மரணத்தைத் தழுவினார்கள்.

சேலம் வினுப்பிரியா, சென்னை சூளைமேடு சுவாதி, விழுப்புரம் நவீனா என இந்தப் பட்டியல்  தொடர்கிறது. இந்த இளம்பெண்களின் துயர முடிவுக்கு காரணம் அவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒருதலைக் காதல் தான். இவர்களில் விழுப்புரம் நவீனாவுக்கு செந்தில் என்ற மிருகம் கொடுத்த தொல்லையை 'ஒருதலைக் காதல்' என்று சொல்ல முடியாது. நவீனா 14 வயது சிறுமியாக இருக்கும் போதிலிருந்தே செந்தில் பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறான். கடைசியில் அந்த மிருகத்தின்  சீண்டல் நவீனாவை உயிருடன் தீயிட்டு எரித்து படுகொலை செய்த கொடுமையில் நிறைவடைந்துள்ளது. இந்த கொடுமைகளுக்கு எல்லாம் முதன்மைக் காரணம் காதல் என்றால் என்ன என்ற புரியாமையும்,  சாதி ஒழிப்புக்கான சிறந்த ஆயுதம் காதல் வழி கலப்புத் திருமணம் தான் என்ற தவறான வழிகாட்டுதலும்  தான் என்பதில் உள்ள உண்மையை  புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். காதலுக்கோ, கலப்பு திருமணத்திற்கோ நான் ஒரு போதும் எதிரியல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள். 

கடந்த காலங்களில் நான் செய்து வைத்த கலப்புத் திருமணங்கள் என் வார்த்தைகளுக்கு வலிமை சேர்க்கும் கருவிகளாகும். காதல் என்பது அற்புதமான உணர்வு. ஆனால், அது ஒரு ஆணும், ஒரு பெண்ணும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு இயல்பாக வர வேண்டும். எந்த ஒரு பழமும் இயல்பாக கனிந்தால் மட்டுமே சுவைக்கும். மாறாக, கார்பைடு வைத்து கனியவைத்தால் அது உடல் நலனுக்கு தீமையை மட்டுமே ஏற்படுத்தும். இது அறிவியல் உண்மை. காதலும் அப்படிப்பட்டது தான். இயல்பாக ஏற்பட்ட காதல் நாளுக்கு நாள் வலிமையடையும். மாறாக பெண்ணிடம் உள்ள அழகில் மயங்கியோ, சொத்துக்களைப் பறிக்கும் நோக்குடனோ செயற்கையாக உருவாக்கப்படும் காதல் வாழ்க்கையை பொசுக்கிவிடும். இதில் கொடுமை என்னவெனில், இக்காதலால் பாதிக்கப்படுபவர்கள் பெண்களாகவே இருப்பது தான்' என விவரித்தவர், 

தொடர்ந்து, பெண் ஏன் அடிமை ஆனாள் புத்தகத்தில் பெரியார் குறிப்பிடும் சில வார்த்தைகளை விவரித்துவிட்டு, காதல் தெய்வீகமானது அல்ல... அது ஆசை மற்றும் செல்வத்தை பொறுத்தே ஏற்படும் என்பதையும் 30.06.1940 அன்று வெளியான குடியரசு நாளிதழில்  பெரியார் கூறியிருக்கிறார். காதல் மற்றும் அதன்மூலம் ஏற்படும் கலப்புத் திருமணங்களால் சாதி ஒழிந்து விடும் என்று ஒரு பிரசாரம் திட்டமிட்டு செய்யப்படுகிறது.  ஆனால், காதலாலும் கலப்புத் திருமணத்தாலும் சாதிகள் ஒழிவதில்லை என்பது தான் உண்மை. இந்திய விடுதலைக்குப் பிந்தைய 65 ஆண்டுகளில் நடந்த காதல் திருமணங்களால் சாதியற்ற சமுதாயம் எந்த அளவுக்கு உருவாகியிருக்கிறது?  காதல் கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்களில் எத்தனை பேர் தங்களின் குழந்தைகளை சாதியற்றவர்களாகப் பதிவுசெய்திருக்கிறார்கள்? என்ற எளிய வினாக்களுக்கு பல ஆண்டுகளாக விடை தேடிக் கொண்டிருக்கிறேன். ஆனால், இன்னும்  விடை கிடைக்கவில்லை. காரணம்... காதல் திருமணம் செய்து கொண்டவர்களில் 99 விழுக்காட்டினர் தந்தையின் சாதியையே குழந்தையின் சாதியாக பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இளைஞர்களை தூண்டிவிடும் வகையில் இவர்கள் பேசிய பேச்சுக்கள் பொது அரங்கில் ஏற்கனவே வெளியாகியுள்ளன. இப்போது பிறசாதிப் பெண்களை காதலில் வீழ்த்துவது தங்களின் குலப்பெருமை என்பதைப் போல பேசி, அச்செயலை நியாயப்படுத்தியிருக்கிறார் ஒரு தலைவர். 

அவர் பேசிய மிகவும் அருவருக்கத்தக்க வார்த்தைகளை இந்த கடிதத்தில் மறுபதிப்பு செய்வதே பாவச்செயல் தான். ஆனாலும்,  அந்த வார்த்தைகளில் ஒளிந்திருக்கும் கயமையை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக அவரது உரையின் ஒரு பகுதியை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். (அரசியல் கட்சித் தலைவரின் வாசகங்களை விவரிக்கிறார்) இப்படி ஒரு நிலை ஏற்பட்டதற்காக வருந்துகிறேன். இந்த உரை அடங்கிய வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், பெண்ணுரிமை பேசும் பெரியார் வழி வந்த தலைவர்களோ, பொதுவுடமை பேசும் தலைவர்களோ, பெண்ணியவாதிகளோ இதைக் கண்டிக்க முன்வராதது மிகவும் வருத்தமளிக்கிறது. பெண்கள் சமூகத்தின் வரங்கள். ஆனால், சமூகத்தின் சில சாபங்களால், அந்த வரங்கள் பொசுக்கப் படுகின்றன. பெண்களை படிக்க வைக்க வேண்டும்; வாழ்க்கையில் முன்னேற உறுதுணையாக இருக்க வேண்டும். ஆனால், நமது சமுதாயம் பெண்களை பாதுகாக்கவில்லை. மாறாக, பெண்கள்  எனும் மலரை கசக்கி எறியும் கயவர்களுக்கு, இல்லாத காரணங்களைக் கூறி, சாமரம் வீசிக் கொண்டிருக்கிறது. இந்தப் போக்கு உடனடியாக தடுக்கப்படாவிட்டால் தமிழகம் பெண்களுக்கு நரகமாகி  விடும் ஆபத்திருக்கிறது. இந்த ஆபத்துக்கு எதிராக பெண்கள் நலனில் அக்கறையுள்ள அனைவரும் அணி திரள வேண்டும்' என விவரித்திருக்கிறார் பா.ம.க நிறுவனர் ராமதாஸ். 

-ஆ.விஜயானந்த் 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement