Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வாட்ஸ் அப் -ல் திருடனை தேடுகிறோம்!- துாக்கத்தை தொலைத்த கிராம மக்கள்

ர்கூடி தேர் இழுப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், திருடர்களைப் பிடிப்பதைப் பார்த்திருக்கிறோமா? தஞ்சையைச் சுற்றியுள்ள கிராமங்களில் திருடர்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை என்பதால், கிராம மக்கள் யாரும் இரவு நேரங்களில் தூங்குவதில்லை. பெண்கள், தங்களது தாலிக்கயிற்றையே அவிழ்த்துவைத்துவிட்டு, மஞ்சள் கயிற்றை அணியக்கூடிய சூழ்நிலையில் உள்ளார்கள். கடந்த 35 நாட்களாகக் கிராம மக்கள் அனைவரும் ஒருவித அச்சத்துடனும், பீதியுடனுமே வாழ்ந்து வருகின்றனர்.

தஞ்சையை அடுத்துள்ள நாஞ்சிக்கோட்டை, நடுவூர், விளார், வல்லுண்டாம்பட்டு, மருங்குளம், ஈச்சங்கோட்டை, உப்புண்டார்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள பெண்களிடம் தினமும் திருடர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டி வருகின்றனர். அவர்களைத் துரத்திச்சென்று பிடிக்கும் ஆண்கள் உருட்டுக்கட்டையால் தாக்கப்படுவதுடன், பிளேடாலும் கிழிக்கப்படுகின்றனர்.

‘‘காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்வதில்லை!’’

இதுகுறித்து செல்வகுமாரிடம் பேசினோம். ‘‘கிராமத்தில் உள்ள பெண்களையும் அவர்களின் நகைகளையும் பாதுகாப்பதற்கு வீட்டுக்கு ஒருவர், இரவு காவல் பணிக்கு வரவேண்டும் என்று ஊரில் முடிவு செய்திருக்கிறோம். அதன்படி, இரவு முழுக்க ஊர் முழுவதும் ரோந்து சென்று திருடர்களைப் பிடிக்கிறோம். திருடர்களால், பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மக்களே திருடர்களைப் பிடித்துக்கொடுத்தாலும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்யாமல் அனுப்பிவிடுகிறார்கள். இதனால்தான் தொடர் திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன’’ என்றார்.

‘‘தினம்தினம் பயத்துலேயே வாழுறோம்!’’

‘‘திருடர்களின் அட்டகாசம் நாளுக்குநாள் தாங்க முடியலை. நாங்க தூங்கியே ஒரு மாசத்துக்கு மேலே ஆயிடுச்சு. என்னோட, 4 பவுன் தாலிச்செயினைத் திருடனுங்க அறுத்துக்கிட்டு ஓடிட்டானுங்க. அவனுங்களைப் பிடிக்கப்போன பக்கத்து வீட்டுக்காரர் பாண்டியனை உருட்டுக்கட்டையால அடிச்சுப் போட்டுட்டானுங்க. ஊரே கூடி அவனுங்களைத் தேடிப் பார்த்தோம். கிடைக்கலை. போலீஸாரும் சேர்ந்து தேடினாங்க. பிறகு விடியற்காலம் எங்கோ ஒளிஞ்சிருந்த திருட்டுப் பசங்க, லட்சுமி வீட்டுல திருட நுழைச்சிருக்காங்க. அவுங்க சத்தம் போட்டதால தப்பிச்சு ஓடிப்போய்ட்டானுங்க. இப்படித் தினம்தினம் என்னாகுமோ, ஏதாகுமோ பயத்துலேயே நாங்க வாழுறோம்’’ என்றனர் தாலியைப் பறிகொடுத்த சிவசங்கரியும், அவரது உறவினர் லதாவும்.

‘‘சட்டம் - ஒழுங்கு கெட்டுப்போச்சு!’’

பாதிக்கப்பட்ட பாண்டியன், ‘‘நான் பிடிக்கப்போன திருடனுங்க கறுப்பு கலர் சட்டையும், டிராயரும் போட்டிருந்தானுங்க. கை, காலில் எண்ணெய்யைத் தடவியிருந்தானுங்க. நல்லா நோட்டம்போட்டுத்தான் திருட வர்றானுங்க. நகையும் பணமும் கொள்ளை போறதோட எங்களோட உயிருக்கும் உத்தரவாதம் இல்லாம இருக்கு. யாராவது சந்தேகப்படும்படியான நபர் வந்தால், அவரைப் படம்பிடிச்சு வாட்ஸ் அப் மூலம் பக்கத்து கிராமங்களுக்கு அனுப்பி உஷார்படுத்துறோம். போன் செய்தும் சொல்றோம்.

இதேமாதிரி நாங்க எத்தனை நாளைக்கு ஓட்டமுடியும்? எங்களுக்கும் பிழைப்பு இருக்கிறது. வயல்வெளிகளுக்குப் போக முடியலை. பட்டப்பகலில்கூட திருடுவதற்கு முயற்சி செய்றானுங்க. பொம்பளைங்க யாராவது தனியாக வயலில் வேலை செஞ்சுக்கிட்டு இருந்தா அவங்ககிட்டபோய் பேச்சுக்கொடுத்துத் திருட பார்க்குறானுங்க. அந்த அளவுக்கு எங்க மாவட்டத்துல சட்டம் - ஒழுங்கு கெட்டுப்போச்சு’’ என்றார்.

‘‘நூதன முறையில் திருடுறானுங்க!’’

‘‘திருடுறவனுங்க எல்லாம் சின்ன பசங்களா இருக்கானுங்க. ஆண்ட்ராய்டு போன், கல்லு, டார்ச் லைட், இரும்புக் கம்பி, கட்டர் என எல்லா திங்க்ஸையும் வச்சிக்கிட்டு நூதன முறையில் திருடுறானுங்க. திருட்டுத் தொழிலில் மிகப் பெரிய நெட்வொர்க் இருப்பதாகத் தெரிகிறது. திருடனுங்களைப் பிடிச்சுக்கொடுத்தா போலீஸாரும் கண்டுக்க மாட்டேங்குறாங்க. ஊருக்குள் வரும் சந்தேகப்படும்படியான நபர்களை விசாரிக்கக் கூடாது என்கிறார்கள். இதுவரை போலீஸ் எந்தத் திருட்டை ஒழிப்பதற்கும், திருடனுங்களைப் பிடிப்பதற்கும் முயற்சி எடுத்ததாகத் தெரியவில்லை’’ என்றார் சுரேஷ்.

‘‘புதுப்பட்டியில் ஒருவரது வீட்டில் குடும்பச் செலவுக்காக வாங்கிவைத்திருந்த 65 ஆயிரம் பணத்தைத் திருடிச் சென்றிருக்கின்றனர். உப்புண்டார்பட்டியில், ஒரு வீட்டின் பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டு எழுந்துவந்து கேட்ட ஒருவரை, பிளேடால் கிழித்துவிட்டுச் சென்றிருக்கின்றனர். இப்படி ஒவ்வொரு கிராமத்திலும் தினம்தினம் ஏதாவது ஒரு சம்பவம் நடக்கிறது’’ என்கிறார்கள் கிராம மக்கள்.

‘‘மஞ்சக்கயிறுதான் போட்டிருக்கிறோம்!’’

‘‘எங்க பகுதியில் உள்ள கிராமங்களில், நிறையப் பேர் தாலியை அறுத்துட்டானுங்க. பெண்களுக்குத் தாலி என்பது எவ்வளவு பெரிய பாக்கியம்? அதற்குக்கூட இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லையென்றால், எதற்காக நாங்க வாழணும். நாங்க தாலியை அறுத்துவிட்டு மஞ்சக்கயிறுதான் போட்டிருக்கிறோம். இப்படிப்பட்ட உலகத்துல நாங்க இருந்தா என்ன... செத்தா என்ன’’ என்று சொல்லும் சுபா, கழுத்தில் உள்ள மஞ்சள்கயிற்றை எடுத்துக் காட்டுகிறார்.

காவல் துறையினரிடம் பேசினோம். ‘‘நாங்கள் என்ன பண்ணுறது? முடிந்த அளவுக்குப் பாதுகாப்பு வழங்கியிருக்கிறோம். பொதுமக்களுக்குத் தேவையான டிப்ஸ் கொடுத்திருக்கிறோம். காவல் நிலையங்களில் போலீஸ் பற்றாக்குறை இருக்கிறது. ஒவ்வொரு பகுதிகளுக்கும் போலீஸாரைப் பிரித்து அனுப்புவதில் சிரமம் ஏற்படுகிறது’’ என்றனர்.

இது நியாயமா போலீஸ்?

- ஏ.ராம்
படங்கள்: கே.குணசீலன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement