விஜயகாந்துக்கு கேக் ஊட்டிய வைகோ..! கலகலத்த பிறந்தநாள்

தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, விஜயகாந்துக்கு, வைகோ, திருமாவளவன் ஆகியோர் கேக் ஊட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு இன்று 65வது பிறந்தநாள். அவரது பிறந்தநாளை தமிழகம் முழுவதும் தேமுதிக நிர்வாகிகள் அன்னதானம், மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், மக்கள் நலக்கூட்டணி தலைவர்களான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் முத்தரசன் மற்றும் மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் இன்று கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரவேற்றார். பின்னர் விஜயகாந்துக்கு அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சால்வைகள் அணிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, திறந்தவெளியில் கட்சி வளாகத்தில் வைகோ, திருமாவளவன், முத்தரசன் ஆகியோர் முன்னிலையில் விஜயகாந்த் கேக் வெட்டினார். அப்போது, விஜயகாந்துக்கு வைகோ, திருமாவளவன், முத்தரசன் ஆகியோர் கேக் ஊட்டினர். பதிலுக்கு விஜயகாந்தும் அவர்களுக்கும் கேக் ஊட்டினார். மேலும், விஜயகாந்த் மைத்துனர் சுதீஷுக்கு திருமாவளவன் கேக் ஊட்டினார். பதிலுக்கு அவரும் கேக் ஊட்டினார்.

விஜயகாந்துக்கு மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் நேரில் வந்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க வந்ததால் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகம் கலகலப்புடன் காணப்பட்டது.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்கள் நலக்கூட்டியக்கம் இணைந்து உள்ளாட்சி தேர்தலை சந்திக்கும் என்றும்,
மாவட்ட வாரியாக உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் நடந்து வருகிறது என்றும் கூறினார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது குறித்து தேமுதிகதான் முடிவு செய்ய வேண்டும். விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு தமிழக முதல்வர் வர வேண்டும் என்றார்.

சகாயராஜ்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!