Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

உலகத் தமிழர்களின் 'ஓம் முருகா'!  -சமூக சேவையில் சசிகலா மருமகன் 

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் ஜெபராஜின் மனைவி, 'அந்த' நபரை அணுகிறார். ' ஏமனில் மீன் பிடிக்கும் வேலை என்று சொல்லி அழைச்சுட்டுப் போனாங்க. கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடிச்சதால அரெஸ்ட் பண்ணிட்டாங்க. அவர் கூடவே, எங்க ஊரைச் சேர்ந்த அஞ்சு பேரும் ஜெயில்ல இருக்காங்க. எப்படியாவது காப்பாத்துங்க...' எனக் கதறி அழ, ' ஏமனில் இந்திய தூதரம் இல்லை. எங்கள் ஓம் முருகா அமைப்பின் பிரதிநிதிகளின் உதவியைக் கேட்கிறேன்' என ஆறுதல் கூறிவிட்டு களத்தில் இறங்கினார் அந்த நபர். அடுத்த ஓரிரு நாட்களில் ஓம் முருகா அமைப்பின் சார்பில், ஐந்து மீனவர்களும் மீட்கப்பட்டனர். இணையத்தளத்தில் கடந்த ஓராண்டாகவே ஓம் முருகாவின் செயல்பாடுகள், உலகத் தமிழர்களை வசீகரிக்கிறது. ' சிறிய அளவிலான ஏற்றுமதியா? ஏற்றுமதி செய்ய வழி தெரியாமல் திணறுகிறீர்களா? வர்த்தகத்திற்கு வழிகாட்டுதல்கள் தேவையா?, போலி விசாவில் ஏமாந்துவிட்டீர்களா?' என பைசா செலவில்லாமல் ஆலோசனைகளை அள்ளித் தருகிறது. இதன் இணையப் பக்கத்தை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை மட்டும் 12 ஆயிரத்தைத் தாண்டிவிட்டன. 

ஓம் முருகா இணையத்தளத்தின் நிர்வாகி 24 வயதே ஆன ஜெயானந்த் திவாகரன். இணையத்தளத்தின் எந்தப் பக்கத்திலும் திவாகரன் மகன் என்றோ, சசிகலாவின் மருமகன் என்றோ அடையாளம் காட்டப்படவில்லை. ' ஏற்றுமதி தொடர்பான ஆர்வத்தை தமிழர்களிடம் விதைப்பதற்கான தளம் இது. அரசியலுக்கு இடம் தர வேண்டாம்' என்ற கண்டிப்போடு நடத்தி வருகிறாராம். " இதுமட்டுமல்ல... புலம் பெயர்ந்த தமிழர்களின் நலனுக்காக ஏராளமான நல உதவிகளைச் செய்து வருகிறார் அவர். வெளிநாட்டில் விசா காலம் முடிந்த பிறகு, சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வந்த நூற்றுக்கணக்கான மக்களுக்கு ஓம் முருகா வழிகாட்டியிருக்கிறது. வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு எந்தப் பிரச்னையென்றாலும், ஓம் முருகா முகநூல் பக்கத்தில் பதிவு செய்த சில விநாடிகளில் தீர்வு கிடைத்துவிடுகிறது. 'நாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் சிறிதளவு  ஏழைகளுக்கு உதவ வேண்டும்' என உத்தரவே போட்டிருக்கிறார் ஜெயானந்த். டிசம்பர் மாத வெள்ளத்தில் சென்னை பாதிக்கப்பட்டபோது, நேரடியாக களத்தில் இறங்கி வேலை பார்த்தார். ஐந்து லட்ச ரூபாய் மதிப்பில் மீனவர்களுக்கான வலைகள், நல்ல ஆடைகளை வாங்கிக் கொண்டு போய் விநியோகித்தார். கடலூர் மாவட்டத்திற்கு மட்டும் பத்து டன் அரிசியை வழங்கினார். இதைப் பற்றி விளம்பரப்படுத்திக் கொள்ளவும் அவர் விரும்பவில்லை. முழு நேர சமூகசேவகராகவே மாறிவிட்டார்" என விவரிக்கிறார் ஓம் முருகா இணையத்தளத்தின் நிர்வாகி ஒருவர். 

மன்னார்குடி அ.தி.மு.க பிரமுகர் ஒருவர் நம்மிடம், " அரசியல் அதிகாரத்தில் இருந்து சசிகலாவின் தம்பி திவாகரன் விலகியிருந்தாலும், ஜெயானந்தின் பாதை முற்றிலும் அரசியலை நோக்கியே வளர்கிறது. ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ விவேக் ஜெயராமனும் ஜெயானந்தும் உறவினர்கள் என்பதைத் தாண்டி, நெருக்கமான நண்பர்களாக இருக்கின்றனர். அரசியல் பாதைக்குள் நுழையாமல் வர்த்தகத்தைக் கவனித்து வருகிறார் விவேக். ஆனால், ஜெயானந்த் அப்படி இருக்க விரும்பவில்லை. அடித்தட்டு கட்சிக்காரர்களிடம் ரொம்பவே நெருக்கம் காட்டுகிறார். கடந்த மாதம் திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடிக்குச் செல்லும் வழியில் உள்ள ராமநாதசாமி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்தினார். காரணத்தைக் கேட்டபோது, ' சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்றால் விழா எடுக்க வேண்டும் என வேண்டிக் கொண்டேன்' எனப் பதில் கொடுத்தார். இந்தப் பதிலை அவரது தந்தையே எதிர்பார்க்கவில்லை. ஒருகாலத்தில் அரசியல் அதிகாரத்தில் திவாகரன் கோலோச்சியபோது, அவருடைய அணுகுமுறையைப் பார்த்து பார்த்து வளர்ந்ததால், ' அப்பாவைப் போல செயல்பட வேண்டும்' என்ற எண்ணமே, அரசியல் ஆர்வத்திற்குக் காரணமாக இருக்கலாம். கூடவே, கடந்த காலங்களில் கார்டனில் கோலோச்சிய மன்னார்குடி உறவுகள் செய்த தவறுகளையும் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்" என்கிறார் அவர். 

"  சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் முதல்வரை விமர்சித்து உதயநிதி ஸ்டாலின் ஒரு கவிதையை எழுதினார். அதற்குப் பதிலடியாக கருணாநிதியை விமர்சித்து, ' கரை ஒதுங்கிய கட்டுமரமே' எனக் கவிதை எழுதி வெளியிட்டார் ஜெயானந்த். ஆரம்பக் கல்வியை கோவை சின்மயா இண்டர்நேஷனல் பள்ளியில்தான் படித்தார். பின்னர் தஞ்சாவூர் ஏ.வி.சி கல்லூரியில் பி.ஏ ஆங்கில இலக்கியத்தில் கோல்டு மெடல் வாங்கினார். திவாகரனும் இதே கல்லூரியில் எம்.எஸ்சி வன உயிரியியல் படிப்பில் கோல்டு மெடல் வாங்கியவர்தான். பின்னர், சென்னை லயோலா கல்லூரியில் எம்.ஏ ஆங்கில இலக்கியத்தை முடித்தார். கூடவே, மீடியா மேனேஜ்மெண்ட் என்ற முதுகலைப் பட்டயப் படிப்பையும் நிறைவு செய்தார். சென்னையில் படிக்க விரும்பியதற்கு முக்கியக் காரணமே, ' அரசியல் பணிகளில் தீவிரமாகச் செயல்பட வேண்டும்' என்றுதான். லயோலா கல்லூரி மாணவர் தேர்தலில், தொடர்ந்து தி.மு.க பின்புலத்தில் உள்ளவர்களே வெற்றி பெற்று வந்தனர். உதயநிதி ஸ்டாலின் படிக்கும் காலம் வரையில் இந்தநிலைதான் நீடித்தது. முதல்முறையாக, அ.தி.மு.க தரப்பில் இருந்து மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளராக தேர்வானார் ஜெயானந்த். ' மாணவர் சங்கத் தேர்தல் என்பது அரசியல் பாதைக்கான தொடக்கமாக இருக்கும்' என அப்போதே  நண்பர்களிடம் உற்சாகமாக பேசினார். 

லயோலா கல்லூரியில் எம்.ஏ ஆங்கில இலக்கியத்தை இந்தாண்டுதான் நிறைவு செய்தார். நண்பர்கள் சிலரின் துணையோடு 'ரெட் பிரிக்ஸ்' என்ற கட்டுமான நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். கூடவே, ஓம் முருகா இணையத்தளத்திற்கு ஆலோசனை கூறுவது, தொழில் தொடர்பான கூட்டங்களை நடத்துவது என ஜெயானந்த் ரொம்பவே பிஸி. ' நமக்கு அருகிலேயே உதவி தேவைப்படும் மக்களின் எண்ணிக்கை மிக அதிகம். அவர்களுக்கு உதவி செய்வோம். முதல்வர் மற்றும் அத்தையின்(சசிகலா) ஆசீர்வாதம் கிடைத்தால், அரசியலில் தீவிரக் கவனம் செலுத்துவோம். இல்லாவிட்டால் வர்த்தகத்தை கவனிப்போம்' என்பதுதான் ஜெயானந்த்தின் குறிக்கோளாக இருக்கிறது. 

-ஆ.விஜயானந்த் 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement