Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அறிக்கையில் இருந்தது, அறிவிப்பில் இல்லை!- உடைந்து சிதறிய மண்பாண்டத் தொழிலாளர்கள் நம்பிக்கை

வீனம் என்ற பெயரில் மனிதன் இயற்கையான வாழ்கை முறையிலிருந்து செயற்கை உலகிற்குள் பிரவேசித்தபின்தான் சுகாதார சீர்கேட்டின் பிடியில் சிக்கி சீரழிய துவங்கினான். அப்படி மனிதனால் புறக்கணிக்கப்பட்ட ஒரு பொருள் மண்பாண்டம். உணவுப்பொருளின் நச்சுத்தன்மையையும் நீக்கும் அபூர்வ சக்தி மண்பாண்டத்திற்கு உண்டு. அப்பாக்கள் இறந்துகொண்டிருக்க, தாத்தாக்கள் இன்னமும் ஆரோக்கியமாக உலவிக்கொண்டிருக்க காரணம் மண்பாண்டங்களில் அவர்கள் சமைத்து உண்டதுதான். மனிதர்களின் புறக்கணிப்பு களிமண் பற்றாக்குறை என பல்வேறு காரணங்களால் உடைந்து சிதறிய பாத்திரமாய் இருக்கிறது இன்று மண்பாண்ட தொழிலாளர்களின் நிலை.

இந்நிலையில் அரசும் தங்களை புறக்கணிப்பதாக புகார் வாசிக்கிறார்கள் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவரும் முன்னாள் வாரியத்தலைவருமான சேம. நாராயணன்,

“அந்தக்காலத்தில் உணவுப்பொருட்களை சமைக்க முற்றிலும் மண்பாண்டங்களே பயன்பட்டன. மண்பாண்டங்கள் நச்சுத்தன்மையை நீக்கும் குணம் கொண்டது என்பது அறிவியல் பூர்வமாகவே நிரூபிக்கப்பட்ட உண்மை. அக்காலத்தில் மனிதர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மண்பாண்டங்கள் பெரிதும் உதவின. ஆனால் இன்று பெரும்பாலும், அலுமினியம், பிளாஸ்டிக் என உலோக பாத்திரங்களையே பயன்படுத்துகின்றனர். தெருவுக்கு 4 மருத்துவமனை இருக்க இதுதான் காரணம். தமிழகத்தில் காகித மண் பொம்மைகள் செய்வது செங்கல் சூளை, அகல்விளக்கு செய்வது என சுமார் 40 லட்சம் பேர் இந்த தொழிலில் ஈடுபட்டுவந்தனர்.

மண்பாண்ட பாத்திரங்களின் பயன்பாடு குறைந்தது, மற்றும் களிமண் பற்றாக்குறை போன்ற காரணங்களால் இவர்களில் பலர் மண்பாண்டத் தொழிலுக்கு முழுக்கு போட்டுவிட்டு கூலிவேலைகளுக்கு செல்ல ஆரம்பித்துவிட்டனர். மீதமிருப்பவர்களும் நிரந்தரமற்ற நிலையில்தான் இத்தொழிலை தொடர்கின்றனர்.

இப்படி மண்பாண்ட தொழில் ஏற்கனவே நலிவடைந்திருக்கிற சூழலில் அரசும் எங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் வஞ்சிப்பது வேதனையளிக்கிறது என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “ சட்டமன்ற கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கைகளில் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2016 தேர்தல் அறிக்கையில் சொன்னவற்றை ஒன்றன்பின் ஒன்றாகவும், சிலவற்றை 110 விதியின் கீழும் அறிவிப்புகளாக வெளியிட்டு வருகிறார். 

தேர்தலுக்கு முன்பு 14.02.2016 அன்று தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் (குலாலர்) சங்கத்தின் மாநில மாநாடு நடைபெற்றது. எங்கள் அழைப்பை ஏற்று அமைச்சர்கள் ஆ.பழனியப்பன், சின்னய்யா மற்றும் ராமச்சந்திரன் எம்.பி., ஆகியோரை அனுப்பிவைத்தார் ஜெயலலிதா. மாநாட்டில் நிர்வாகிகளின் உருக்கமான பேச்சை கேட்ட அமைச்சர்கள் அதை ஜெயலலிதா கவனத்துக்கு கொண்டு சென்றனர். எங்களின் கோரிக்கைகளை ஏற்று அதிமுக தேர்தல் அறிக்கையில் எங்கள் நலனுக்காக 4 அறிவிப்புகளை வெளியிட்டார் ஜெயலலிதா.

மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மழைக்கால பராமரிப்பு உதவித்தொகையை ரூபாய் 5 ஆயிரமாக உயர்த்துவது, மண்பாண்டங்கள் செய்வதற்கான தொழிற்கூடங்கள் அமைக்க மானியம் வழங்குவது, அரசு நிலங்களில் இருந்து மண்பாண்டங்கள் செய்ய தேவையான களிமண் எடுத்துக் கொள்ள சிறப்புச் சலுகை அளிப்பது, மண்பாண்டங்கள் தயாரிக்க ‘சீலா வீல்’ மின் சக்கரம் வழங்க நடவடிக்கை எடுப்பது என  4 அறிவிப்புகளை அதில் கூறியிருந்தார். 

கடந்த 24-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட கதர் கிராமத் தொழில் மானிய கோரிக்கையின்போது எங்கள் கோரிக்கைகளில் மழைக்கால பராமரிப்பு உதவித்தொகை பற்றிய அறிவிப்பு இடம்பெறும் என ஆவலோடு எதிர்பார்த்திருந்தோம். ஆனால் ஏமாற்றமே கிடைத்தது. மீனவர்களின் நலனுக்காக மீன்பிடித் தடைக் காலத்திற்கு அரசு அவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறது. மண்பாண்டத்தொழிலிலும் மழை வெள்ளம்போன்ற நேரங்களில் தொழில் முடங்கிவிடும். அக்காலங்களில் நாங்கள் பெரும் துயரை சந்திக்கவேண்டியதிருக்கும். அரசின் அறிவிப்பு அதற்கு ஒரு தீர்வாக இருக்கும் என நம்பியிருந்தோம். ஆனால் நிறைவேறவில்லை.

இன்னமும் நாங்கள் நம்பிக்கை இழக்கவில்லை. முதல்வர் நினைத்தால் வரும் திங்கட்கிழமை கூட்டத்தொடரில் கூட 110 விதியின் கீழ் தேர்தல் அறிக்கையில் சொன்னவைகளை அறிவிப்புகளாக வெளியிட்டு மண்பாண்டத் தொழிலாளர்களின் உள்ளத்தை குளிரவைக்கலாம். செய்வார்கள் என நம்புகிறோம்” என்றார்.

- எஸ்.கிருபாகரன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement