Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பச்சமுத்து... சி.பி.ஐ. முதல் சி.பி.சி.ஐ.டி வரை!

எஸ்.ஆர்.எம் குழுமங்களின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் என்கிற பச்சமுத்து மோசடி வழக்கில் இன்று கைதாகியிருப்பது பல்வேறு மட்டங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பச்சமுத்துவின் மீது சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் 420, 406 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர். பின்னர் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால், சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

‘புதிய தலைமுறை’ உள்ளிட்ட தொலைக்காட்சிகள், எஸ்.ஆர்.எம் கல்விக் குழுமம், பேருந்துகள், மருத்துவமனைகள், வேந்தர் மூவீஸ் சினிமா நிறுவனம் எனப் பல நிறுவனங்களின் முதலாளி, இந்திய ஜனநாயக கட்சி (ஐ.ஜே.கே)-யின் நிறுவனர் என்ற வகையில், பாரிவேந்தர் என்கிற பச்சமுத்து தமிழகத்தில் பிரபலமான பெயர்.

‘‘சில்லரை வணிகங்களில் ஒருபோதும் அந்நிய முதலீடுகளை அனுமதிக்கக் கூடாது. சிறந்த வணிகர்கள், கல்வியாளர்கள், நன்கு படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்” என்றெல்லாம் அவரது அறிக்கைகள் 2009 முதல் நடப்பு 2016 வரையில் ஊடகங்களில் அடிக்கடி வந்துவிடும். அதேபோன்று எஸ்.ஆர்.எம் குழும மாணவர்கள் சேர்க்கையில் இடைத்தரகர்கள் தலையீடு போன்ற விவகாரமான செய்திகளும் வரத் தவறியதில்லை. ‘தரகர்கள் தலையீடு என்பது தவறான தகவல்’ என பச்சமுத்து தரப்பு மறுத்தாலும், மாணவர்களுக்குள் அடிக்கடி மோதல் ஏற்பட்டு அந்த மோதலின் பின்னணியே கல்லூரி அட்மிஷன் விவகாரம்தான் என்பதையும் சில ஊடகங்கள் அம்பலப்படுத்தி வந்தன.

‘‘எஸ்.ஆர்.எம் என்றால் பச்சமுத்து என்ற இமேஜை உடைப்பதுபோல் பச்சமுத்துவால் ஆளாக்கப்பட்ட மதன் என்பவர், பச்சமுத்து மூலமாகவே உச்ச வளர்ச்சிக்குப் போனார். வேந்தர் மூவீஸ் என்ற சினிமா கம்பெனியையே அவர் பெயரில் தொடங்கும் அளவுக்கு பச்சமுத்துவுக்கு நெருக்கமான மதன், நாளடைவில் வேந்தர் மதன் என்றே அழைக்கப்பட்டார். மதனின் அசுர வளர்ச்சியை பச்சமுத்துவின் மகன் ரவி பச்சமுத்து ரசிக்கவில்லை. அவர் மட்டுமல்ல, பச்சமுத்துவின் குடும்பத்திலேயே அதற்கு எதிர்ப்புக் கிளம்பியது.

காட்டாங்கொளத்தூரில் எஸ்.ஆர்.எம் கல்வி நிறுவனம் இருந்தாலும், வடபழனியில் உள்ள வேந்தர் மூவீஸ் அலுவலகத்தில் உரிய பணத்தை மதனிடம் செலுத்திய அடையாளமாக மதன் வழங்கும் ‘பென்சில்-லைன்-மார்க்’ கார்டு இருந்தால்தான் எஸ்.ஆர்.எம் கல்லூரியில் அனுமதி கிடைக்கும் என்பதே பச்சமுத்துவின் குடும்பத்தில் புகைச்சலுக்குக் காரணமாக அமைந்தது.

‘மதுராந்தகத்தில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு ஏக்கர் - 12 சென்ட் நிலத்தை ரவி பச்சமுத்துவும், அவரது நண்பருமான ராஜ கீழ்ப்பாக்கம் பகுதிவாசி மோகன்ராஜ் என்பவரும் போலியாக ஆவணம் தயாரித்து தன்னை மோசடி செய்துவிட்டதாக’ சரோஜா என்ற பெண், போலீஸ் டி.ஜி.பி, சென்னை போலீஸ் கமிஷனர், தமிழக முதல்வரின் தனிப்பிரிவு ஆகியோருக்குப் புகார் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

அந்தப் புகாரின் பின்னணியில் மதன் இருப்பதாக பச்சமுத்துவின் ஒட்டுமொத்த குடும்பமே மதனை சபித்துக் கொண்டிருக்க பச்சமுத்துவோ, ‘அந்தப் புகாரை மீடியாக்களில் வந்துவிடாமல் பார்த்துக்கொண்டதே தம்பி மதன்தான். அவரைச் சந்தேகப்படாதீர்கள்’ என்று குடும்பத்தாரிடமே மல்லுக்கு நின்றிருக்கிறார். பெற்ற பிள்ளையும், குடும்ப உறுப்பினர்கள் பலர் சொல்லியும் மதன் மீதான நம்பிக்கையை பச்சமுத்து மட்டும் கொஞ்சமும் மாற்றிக் கொள்ளவில்லை. அப்படிப்பட்ட பச்சமுத்துவின் நம்பிக்கையை அடியோடு மாற்றிப்போட்டது, மதனின் 102 மருத்துவ சீட் மோசடிதான்’’ என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

“எங்கள் கல்லூரியில் சீட் பெற வருகிறவர்கள், வடபழனி வேந்தர் மூவீஸை அணுகிப் பணம் செலுத்திய பின்னர், ‘பென்சில் மார்க்’ கார்டுடன் வந்து பச்சமுத்துவிடம் சீட் வாங்குவார்கள். மதன் மோசடி செய்த அன்று, ‘102 சீட்டுக்கான பணம் கணக்கிலேயே இல்லை’ என்று தெரியவந்தது. அதன் பின்னர்தான் மதனைப் பார்த்து, ‘இத்தோடு ஓடிப் போய்விடு. வேந்தர் மூவீஸுக்கு வேறு ஆளைப் போட்டுக்கொள்கிறேன். என் கட்சியிலும் இருக்காதே’ என்று பச்சமுத்து விரட்டிவிட்டார்’’ என்கிறார்கள் எஸ்.ஆர்.எம் ஏரியாவில்.

பச்சமுத்துவால் விரட்டப்பட்டதாகச் சொல்லப்படும் வேந்தர் மூவீஸ் மதன், சமீபத்தில் மாயமானார். இவரைக் கண்டுபிடித்துத் தருமாறு சென்னை ஹைகோர்ட்டில் ஹேபியஸ் கார்பஸ் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கோர்ட், ‘மதனுக்கு நெருக்கமான பச்சமுத்துவிடம் ஏன் விசாரணை நடத்தவில்லை’ எனக் கேள்வி எழுப்பியது.

சென்னை விமான நிலைய ஓய்வு சுங்கத்துறை அதிகாரி ஜம்பாலாவின் வீட்டில் கடந்த ஆண்டு சி.பி.ஐ நடத்திய சோதனையில், அவரது வரவு செலவு டைரி சிக்கியது. அதில், தன் மகள் மானஷாவை எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரியில் சேர்ப்பதற்காக 40 லட்ச ரூபாயை நன்கொடையாகக் கொடுத்ததாக ஜம்பாலா குறிப்பிட்டிருந்தார்.

ஜம்பாலாவின் டைரி ஆதார அடிப்படையில் பச்சமுத்து சி.பி.ஐ விசாரணைக்கு ஆளானார். அவரிடம் அன்று மூன்றரை மணி நேரம் விசாரணை நடத்தியது. சி.பி.ஐ... இன்று அதே விவகாரக் கோப்புகளை மீண்டும் கையில் வைத்துக்கொண்டிருக்கிறது, சென்னை மத்தியக்(சி.சி.பி) குற்றப்பிரிவு போலீஸ்.

பச்சமுத்து கைது விவகாரத்தில் அடுத்தடுத்த அதிர்ச்சி காட்சிகள் வெளியாகலாம்...

- ந.பா.சேதுராமன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement