வெளியிடப்பட்ட நேரம்: 13:52 (28/08/2016)

கடைசி தொடர்பு:20:19 (28/08/2016)

வைகுண்டராஜனால் தமிழக அரசுக்கு ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு! - பகீர் கிளப்பும் சகோதரர்


வைகுண்டராஜனின் சகோதரர் குமரேசன்

சென்னை: அரசால் விதிக்கப்பட்ட தடையை மீறி, விவி மினரல்ஸ் நிறுவன தொழிலதிபர் வைகுண்டராஜன், தாதுமணல் ஏற்றுமதி செய்கிறார். இதன் காரணமாக தமிழக அரசுக்கு ரூ10,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று பகீர் கிளப்பி உள்ளார் வைகுண்டராஜனின் சகோதரர் குமரேசன்.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட கடற்கரையோரங்களில் கிடைக்கும் தாது மணலை எடுத்து வெளிநாடுகளுக்கு அனுப்பும் தொழில் செய்து வருபவர் வைகுண்டராஜன். கடந்த பல வருடங்களாக இவர் செய்து வரும் இந்த தொழிலுக்கு, உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மட்டத்தில் ஆதரவு இருப்பதாகவும், வைகுண்டராஜன் விதி மீறல் செய்வதாகவும்  குற்றச்சாட்டுக்கள் எழுந்தது


வைகுண்டராஜன்

மேலும், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாகத் தனது தாது மணல் ஏற்றுமதி தொழிலில் கோலோச்சி வரும் வைகுண்டராஜன் அண்ட் பிரதர்ஸ், அரசிடம் முறையான அனுமதி வாங்கவில்லை என்று கூறி, கடந்த 2013 முதல் தாது மணல் ஏற்றுமதிக்கு தமிழக அரசு தடை விதித்தது. ஆனாலும், வி.வி பிரதர்ஸ் என்னும் 'மாய சக்தி'யின் தொழில் தங்கு தடையின்றி நடந்து கொண்டேதான் உள்ளது.

தமிழகத்திலுள்ள முக்கிய அரசியல் கட்சிகளின் ஆதரவு பார்வை இருப்பதால், வி.வி பிரதர்ஸின் தொழிலுக்கு எந்தத் தடையும் வந்ததில்லை. அப்படியே வந்தாலும் அதை ஆரம்பத்திலே முறியடித்து, தாது மணல் ராஜாங்கம் நடத்தும் தந்திரத்தை கற்றவர்கள் வி.வி.பிரதர்ஸ். அதனால் அரசு உத்தரவுகள், இவர்களை என்றுமே தொந்தரவு செய்ததில்லை. அவை மணலோடு மணலாய் மாயமாகிப்போகின்றன.

சமீபத்தில், 'என்னை எனது தலைவர் அறைந்தார்' என்று நாடாளுமன்றத்தில் பேசி உயிருக்குப் பாதுகாப்பு கேட்டு தேசிய அளவில் பரபரப்பை உண்டாக்கிய எம்.பி. சசிகலா புஷ்பாவின் அரசியல் வளர்ச்சிக்கு வைகுண்டராஜன் தான் காரணம் என பேசப்பட்டு வரும் நிலையில், டெல்லியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சசிகலாபுஷ்பா, 'என்னைச் சீண்டினால் அ.தி.மு.க.வின் உள்ளே நடப்பதை வெளியில் சொல்வேன். என்னை சாதாரணமாக நினைக்க வேண்டாம். தமிழக அரசியலையே புரட்டிப் போட்டுவிடுவேன்’ என்று கூறியிருக்கிறார். அவரின் இந்தப் பேச்சு, வைகுண்டராஜன் விவகாரத்தில், தமிழக அரசு வேகமெடுக்க காரணமாகிவிட்டதோ என்று எண்ண வைத்துள்ளதாகக் கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்.


நாடாளுமன்றத்தில் சசிகலா புஷ்பா

இந்நிலையில், சென்னையில் இன்று வைகுண்டராஜனின் சகோதரர் குமரேசன் திடீரென செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ''மத்திய அரசின் நிறுவனங்கள் மூலம் விதிக்கப்பட்ட தடையை மீறி வைகுண்டராஜன், அவரது விவி மினரல்ஸ் நிறுவனம் மூலம் தொடர்ந்து தாது மணலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இதனால், தமிழக அரசுக்கு ரூ10,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த தாது மணல் எந்தெந்த வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது என்பதற்கான முழுமையான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அந்த ஆதாரங்களை முதல்வரிடம் அளிக்க உள்ளேன். இதுவரை தடையை மீறி 50 லட்சம் டன் அளவுக்கு தாது மணலை வைகுண்டராஜன் வெளிநாடுகளுக்கு கடத்தியுள்ளார். இந்த சட்ட விரோத நடவடிக்கையை அவர் ரவுடிகளின் பாதுகாப்புடன் நடத்தி வருகிறார். இப்படி முறைகேடாக அள்ளப்பட்ட தாது மணல், 15 கிடங்குகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.

 

 

 

இந்த கடத்தல் தொடர்பாக இதுவரை 50 காவல் நிலையங்களில் புகார் கொடுத்துள்ளோம். ஆனால், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால், தொடர்ந்து வைகுண்டராஜனிடம் இருந்து எனக்கு கொலை மிரட்டல் வருகிறது. சசிகலா புஷ்பாவிற்கும் உதவி செய்து தூண்டி விடுகிறார் வைகுண்டராஜன். மேலும், அரசுக்கு கடுமையான வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தாது மணல் கடத்தல் விவகாரத்தை, தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு தடுக்க வேண்டும். மேலும் வைகுண்டராஜனின் சொத்துகளை முடக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறி உள்ளார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்