Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாசத் தவிப்பில் ஜெயலலிதா....!  -இளவரசி மகன் விவேக் திருமண காட்சிகள்

' முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நல்லாசியுடன்' என்று அழைப்பிதழில் அச்சடித்திருந்தாலும், விவேக் ஜெயராமனின் திருமணத்திற்கு முதல்வர் வரவில்லை. ' சிறுவயதில் இருந்தே பரிவோடு வளர்க்கப்பட்ட ஒருவரின் திருமணத்தில் பங்கேற்க முடியாத சோகத்தில் இருக்கிறார் முதல்வர்' என ஆதங்கப்படுகின்றனர் அ.தி.மு.கவினர். 

முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி சசிகலாவின் மன்னார்குடி குடும்ப உறவுகளில், இளவரசியின் மகன் விவேக் மீது முதல்வருக்கு அளவுகடந்த பிரியம் உண்டு. கைக்குழந்தையாக விவேக் இருந்த சமயத்தில், ஜெயலலிதாவின் ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்தைக் கவனித்துக் கொண்டிருந்த ஜெயராமன், மின்சாரம் தாக்கி இறந்துபோய்விட்டார். இந்த சம்பவத்தால் மிகவும் வேதனைப்பட்ட ஜெயலலிதா, கைக்குழந்தையோடு தவிக்கவிடப்பட்ட இளவரசியை போயஸ் கார்டனுக்குள்  அழைத்துக் கொண்டார். அப்பாவை இழந்த பிள்ளை என்பதால், சிறுவயது முதலே பாசத்திற்குரிய வளர்ப்பு மகனாகவே அவரை வளர்த்தார் ஜெயலலிதா. இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார் ஜெயலலிதா. அந்த நேரத்தில் மருந்து, மாத்திரைகள், உடைகள் என சிறைக்குள் சாதாரணமாக சென்று வந்தார் விவேக். அப்போதும் கட்சிக்காரர்கள் மத்தியில் பெரிதாக அவர் பேசப்படவில்லை. எதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல், பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். சிறையில் இருந்து ஜெயலலிதா வெளியே வந்த சில வாரங்களில், ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்தின் சி.இ.ஓவாக நியமிக்கப்பட்டார் விவேக். இதன்பிறகு, ஆளுங்கட்சியின் பவர்ஃபுல் பட்டியலில் அவரும் இடம் பிடித்தார். 

ஜாஸ் சினிமாஸ் சி.இ.ஓவாக நியமிக்கப்பட்ட ஆண்டிலேயே, ' விவேக் திருமணத்தைக் கண்குளிர நடத்தி முடிக்க வேண்டும்' என ஆசைப்பட்டார் ஜெயலலிதா. இதற்காக பெண் பார்க்கும் படலமும் தொடங்கியது. அப்போதுதான் குரோம்பேட்டையில் மருத்துவப் படிப்பில் மூன்றாம் ஆண்டு படிக்கும் கீர்த்தனாவின் ஜாதகம் பொருந்தி வரவே, திருமணத்திற்கான ஏற்பாடுகளையும் கவனிக்கத் தொடங்கினார் சசிகலா தம்பி திவாகரன். ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள திவாகரன் வீட்டில் வைத்தே நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. இவை அனைத்தும் முதல்வரின் ஆசீர்வாதத்துடனேயே நடந்தது. ' திருமணத்திற்கு முதல்வர் வருவார். அதன்மூலம் மீண்டும் ஒன்று சேர்ந்துவிடலாம்' என மன்னார்குடி உறவுகள் நம்பிக் கொண்டிருந்த நிலையில், உளவுத்துறையின் சில குறிப்புகள் முதல்வரை அதிர வைத்ததாகச் சொல்கின்றனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், 

"விவேக் திருமணத்திற்கு வர முடியாத மனவேதனையில் இருக்கிறார் முதல்வர். சிறு வயதில் இருந்தே பார்த்து பார்த்து வளர்த்த பையன் என்பதால், ' தன்னுடைய தலைமையில் திருமணம் நடக்க வேண்டும்' என்பதைத்தான் முதல்வர் விரும்பினார். மணப்பெண்ணின் தந்தை பாஸ்கரன் மீது செம்மரக்கடத்தல் தொடர்பாக சில வழக்குகள் இருக்கின்றன. இதுகுறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர் அதிகாரிகள் சிலர். ' இப்படியொரு திருமணத்திற்கு நீங்கள் வந்தால் தேவையற்ற சர்ச்சைகள் ஏற்படும்' எனச் சொன்னதாலேயே முதல்வர் தலைகாட்டவில்லை. 'கடைசி வரையில் முதல்வர் வந்துவிடுவார்' என்று விவேக் நம்பிக் கொண்டிருந்தார். முதல் அழைப்பிதழை முதல்வருக்கு கொடுத்தபோது, திருமணத்திற்கு வருமாறு மிகவும் வேண்டிக் கேட்டுக் கொண்டார் விவேக். ' என்னுடைய ஆசீர்வாதம் உனக்கு எப்போதும் உண்டு' எனக் கூறியிருக்கிறார். முதல்வரின் சார்பாக மணமக்களுக்கு பரிசு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. 

நேற்று மாலை திருமணம் நடந்த எம் வெட்டிங் மண்டபத்திற்கு குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் வந்தார் விவேக். வானவேடிக்கைகள் முழங்க கோட், சூட் உடையில் மண்டபத்திற்குள் நுழைந்தார். 25 வகையான உணவுப் பதார்த்தங்களுடன் களை கட்டியது மண்டபம். பின்னர் மன்னார்குடி சமூகங்களின் வழக்கப்படி சடங்குகள் நடந்தன. நடிகர்கள் விஷால், சிவகார்த்திகேயன், பிரபு, தியாகராஜன், பிரசாந்த், இயக்குநர் சசிகுமார் எனப் பலரும் வந்திருந்தனர். மன்னார்குடி உறவுகளில் திவாகரன் முதற்கொண்டு அனைவரும் வந்துவிட்டனர். முதல்வரின் முன்னாள் வளர்ப்பு மகனான சுதாகரன் மட்டும் வரவில்லை. இன்று காலையில்தான் நடராஜன் வந்திருந்தார். நேற்று மாலை முதலே சசிகலா மண்டபத்தில்தான் இருந்தார். காலையில் திருமணம் நடந்தபோது மேடையில் சசிகலா இருந்தார். நடராஜன் மேடைக்குகீழ் சேரில் அமர்ந்திருந்தார். 2012-ம் ஆண்டு திவாகரன் மகள் ராஜமாதங்கி திருமணம் நடந்தபோதுகூட சசிகலா தலைகாட்டவில்லை. ஏறக்குறைய ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மன்னார்குடி உறவுகளோடு திருமணத்தில் பங்கேற்றிருக்கிறார் சசிகலா. முகம் முழுக்க புன்னகையோடு மண்டபத்திற்குள் வலம் வந்து கொண்டிருக்கிறார். இதன்மூலம் சிலரது மனதிற்குள் இருந்த சங்கடங்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டன" என்றார் விரிவாக. 

திருமணம் முடிந்த கையோடு, ' முதல்வரிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டும்' என்பதில் உறுதியாக இருக்கிறார் விவேக்.  ' 20 ஆண்டுகளுக்கும் மேலாக பரிவோடு வளர்க்கப்பட்டவரின் திருமணத்தில் பங்கேற்க முடியாத சோகத்தில் இருக்கிறார் முதல்வர்' என்கின்றனர் கார்டன் உதவியாளர்கள். 

-ஆ.விஜயானந்த்
- படங்கள்: உசேன்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement