Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சசிகலா புஷ்பாவின் ஆகஸ்ட் 29 'திகுதிகு' அவதாரம்!

நாடார் சமூகத்தின் புதிய தலைவியாக அவதாரமெடுத்துள்ளார் சசிகலா புஷ்பா. ஆம், அ.தி.மு.க.வில் அவர் நீக்கப்பட்ட பின்னும், அவர் மீதான வழக்குகளுக்கு பிறகும், அவருடைய சமீபகால நடவடிக்கைகள் அனைத்தும் சமுதாயத்தை நோக்கியே செல்வதை நாம் கவனிக்க முடிகிறது.

அ.தி.மு.க. தலைமை கொடுக்கும் நெருக்கடியில் இருந்து தப்பிக்க, வேறு எந்த கட்சியில் இணைந்தாலும் தனது எம்.பி. பதவி காலியாகிவிடும் என்பதால், எம்.பி. என்கிற அந்தஸ்தோடு வளம் வரவும், தனக்கு பின்னால் எப்போதும் ஒரு கூட்டம் இருக்க வேண்டும் என்பதாலும், நாடார் சமுதாயப் போராளியாக தன்னை காட்டிக்கொள்ள முடிவெடுத்து விட்டார் சசிகலா புஷ்பா. அதன் ஆரம்ப கட்ட டிரைலர் காட்சிகள்தான் இன்று மதுரையில் அரங்கேறியது.

சசிகலா புஷ்பா தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு மீதான சந்தேகத்தை அரசு தரப்பு கிளப்பியதால், நேரில் ஆஜராகுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை சமீபத்தில் உத்தரவிட்டது. இந்த வழக்கில் ஆஜராக சிங்கப்பூரிலிருந்து கிளம்பி இன்று காலை மதுரை வந்தார் சசிகலா புஷ்பாவும் அவரது கணவரும். அவருடைய பாதுகப்புக்கு மதுரை விமான நிலையம் முழுக்கவும், அவர் ஹோட்டலுக்கு செல்லும் வழி நெடுகிலும் ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். மாட்டுத்தாவணி அருகே பப்பீஸ் ஹோட்டலில் தங்கியிருந்தவரை  நாடார் சமுதாயப்புள்ளிகள், தொழிலதிபர்கள் சிலர் சந்தித்து சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், 12 மணிக்கு நீதிமன்றத்திற்கு செல்வதாக இருந்த சசிகலா புஷ்பாவிடம், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு செல்லுமாறு சில முக்கியஸ்தற்கள் கூறி இருக்கிறார்கள். அதன்படி, காலை பத்து முப்பதுக்கு விளக்குத்தூண் பகுதியில் அமைந்திருக்கும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் சசிகலா புஷ்பா. அவர்  வருகின்ற தகவல் தெரிந்து மீடியாக்கள் அங்கு குவிந்ததனர். அதற்கு முன்பே காவல்துறையினர் அங்கு வந்து பாதுகாப்புக்காக நின்றிருந்தனர்.

 

காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க சசிகலா பஷ்பா வருவதற்கு முன், ஐந்து கார்களில் ஆதரவாளர்கள் வந்து இறங்கினார்கள். அவர்கள் வந்த கார்களில் காமராஜரும், சசிகலா புஷ்பாவும் இருப்பது போன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தது. ஆரம்பத்தில், வாகனங்கள் புடை சூழ ஊர்வலமாக வருவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதற்கு அனுமதி இல்லை, அப்படி வந்தால் வழக்கு போடுவோம் என்று போலீசார் எச்சரிக்கவும் தனித்தனியாக கார்களில் விளக்குத்தூண் வந்து சேர்ந்தனர்.

திடீரென பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலையிட வந்ததது குறித்து சசிகலா புஷ்பாவிடம் கேட்டபோது, ''நான் எப்பவுமே பெருந்தலைவருக்கு மரியாதை செய்து வருகிறேன்.
நான் அ.தி.மு.க.விலிருந்த போதே சமுதாயத்துக்கு உதவி இருக்கிறேன். சமுதாய விழாக்களில் கலந்து கொண்டிருக்கிறேன். எப்பவும் நான் சமுதாயத்தை விட்டு விலகியதில்லை" என்றார்.

மேலும் தொடர்ந்தவர், "தற்போது தனி இயக்கம் ஆரம்பிக்கும் எண்ணம் எதுவும் இல்லை, வேறு கட்சியிலும் சேர மாட்டேன். கட்சி சார்பற்ற எம்.பி.யாக மக்களுக்கு சேவை ஆற்றுவேன். என் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை சட்ட ரீதியாக சந்திப்பேன்" என்று உற்சாகமாக பேசினார்.

தென் மாவட்டத்தில் இன்று பேர் சொல்லக் கூடிய அளவில் நாடார் சமூக தலைவர்கள் யாரும் இல்லாத நிலையில், அந்த வெற்றிடத்தை நிரப்ப சசிகலா புஷ்பா தயாராகிவிட்டார். அதனால் தான் காமராஜரை தன்னுடைய புதிய தலைவராக எடுத்து கொண்டிருக்கிறார். சமுதாயத்தை பற்றி அக்கறையாக பேசுகிறார். தனது ஆதரவாளர்கள் புடைசூழ வலம் வர துவங்கி உள்ளார் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.

எப்படியோ... சிங்கப்பூரிலிருந்து நாடார் சமூகத்தில் புதிய தலைவியாக, புதிய சசிகலா புஷ்பாவாக வந்திருக்கிறார்!

- செ.சல்மான்
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார், வீ.சதீஷ்குமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement