Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தமிழர்களைக் கொலை செய்த ரயில் பாதை! - அதிரவைக்கும் ஆவணப்படம்

ரலாற்றை நாம் முழுமையாக அறிந்துவைத்து இருப்பதில்லை. நாம் அறிந்துகொள்ள நினைத்தாலும் அவை நம்மிடம் முழுமையாக வழங்கப்படுவதில்லை. பல நேரங்களில் நாம் வரலாறு மீதும், அதுகுறித்த ஆவணங்கள் மீதும் அக்கறை செலுத்துவதில்லை. இதன் விளைவு அதைப்பற்றி நாம் அறிந்துகொள்ள முடிவதே இல்லை. அப்படி நாம் அக்கறை செலுத்தாத ஒரு கொடூர வரலாற்றை கண்முன் நிறுத்தி அதிரவைக்கிறது, ‘சயாம் பர்மா மரண ரயில் பாதை’ ஆவணப்படம்.

10 ஆண்டுகளாகச் சேகரிப்பு!

‘ரெட் டீ’ என்ற நாவல், தேயிலைத் தோட்டங்களுக்கு வேலைக்குச் சென்ற தமிழகத் தோட்டத்தொழிலாளர்களின் அவல வாழ்வை நுட்பமாகப் பேசியிருந்தது. மிகவும் அதிரவைத்த அந்தக் கொடுமைகளை எல்லாம்விட மிகக் கொடுமைகளைக் கொண்டது இந்த ‘சயாம் பர்மா மரண ரயில் பாதை’. பர்மியர்கள், தாய்லாந்துக்காரர்கள், மலேசியர்கள், சீனர்கள் எனப் பலதரப்பட்டவர்கள் இதில் பாதிக்கப்பட்டிருந்தாலும், பெரும்பான்மையாகப் பாதிக்கப்பட்டது தமிழர்கள்தான். இப்படி ஒரு லட்சம் தமிழர்களின் உயிரைக் காவுவாங்கி, ஆனால் நம் கண்களில் படாத இந்த ரயில் பாதையின் வரலாற்றைக் கடந்த 10 ஆண்டுகளாகச் சேகரித்து, ஆவணப்படம் ஒன்றை கடந்த 2014-ம் ஆண்டு இயக்கி பாரிஸில் வெளியிட்டார் இந்தப் படத்தின் இயக்குநரும், காரைக்கால் அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பேராசிரியருமான குறிஞ்சி வேந்தன்.

415 கி.மீ. அளவில் ரயில் பாதை!

கடந்த இரண்டு ஆண்டுகள் உலக திரைப்பட விழாக்களிலும் இந்திய திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு விருதுகளைப் பெற்ற இந்தப் படம், சென்னை ஆர்.கே.வி ஸ்டூடியோவில் கடந்த 27-ம் தேதி திரையிடப்பட்டது. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் புலம்பெயர் ஆய்வுமையமும், நிமிர் அமைப்பும் இணைந்து  திரையிடலுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். போலீஸ் தடை உள்ளிட்ட சிக்கலுக்குப் பின்னரே திரையிடல் நடந்தது.

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் தாய்லாந்து, பர்மா வழியாக இந்தியா வந்து, இந்தியாவைக் கைப்பற்றி ஆசியா முழுக்க தன் கட்டுப்பாட்டை நிறுவ திட்டம் தீட்டியது ஜப்பான். இந்தத் திட்டத்தை நிறைவேற்றும் நோக்கில் ஜப்பான் 1942-ம் ஆண்டு ‘சாயம்’ என்று அழைக்கப்பட்ட அன்றைய தாய்லாந்துக்கும், பர்மாவுக்கும் இடையே 415 கிலோ மீட்டர் அளவில் ஒரு மாபெரும் ரயில் பாதை ஒன்றைக் கட்டமைக்க முடிவு செய்தது. இதற்கு முன்னர் இதே பாதையில் ரயில் பாதை அமைக்க பிரிட்டன் திட்டமிட்டிருந்தது. ஆனால் குன்றுகள், ஆறுகள், காடுகள் என வெவ்வேறு நிலப்பரப்பினால் ஆன அந்த 415 கி.மீ பாதையை குடைந்து ரயில் பாதை அமைக்க மிகுந்த பொருட்செலவும், மனிதவளமும் தேவைப்பட்டதால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

 

கடத்திச் செல்லப்பட்ட தமிழர்கள்!

தொழில்நுட்பம் வளர்ந்திராத அந்தக் காலகட்டத்தில் இது மிகப்பெரிய பணி. பிரிட்டன் கைவிட்ட இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முழுவீச்சுடன் களமிறங்கியது ஜப்பான். தன்னிடம் இருந்த அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த போர்க்கைதிகள், பொறியாளர்களுடன் மொத்தம் 60 ஆயிரம் பேருடன் தொடங்கியது இந்தப் பணி. அவ்வளவு பேர் போதாது என்பதை உணர்ந்த ஜப்பான், மலேசிய ரப்பர் மற்றும் தேயிலைக் காடுகளில் பணிபுரிந்து வந்த தமிழர்களை வலுக்கட்டாயமாக இதில் ஈடுபடுத்தியது. எங்கு செல்கிறோம், எதற்காகச் செல்கிறோம் எனத் தெரியாமல் கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டனர். தெருவில் நடந்து கொண்டிருந்தவர்கள் கடத்திச் செல்லப்பட்டு, அடிமைகளாக இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ரப்பர் தோட்டத்தில் ஏராளமான சோதனைகள், நெருக்கடிகளைச் சந்தித்த தமிழர்களுக்குக் குடும்பத்தோடு இருப்பது ஒன்றே நிம்மதியளித்திருந்தது. ஆனால், ரயில் பாதை பணியில் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டபோது, அதுவும் இல்லாமல்போனது. வானத்தில் சூரியன் இல்லாத நேரம் தவிர மற்ற எல்லா நேரமும், மக்களின் வேர்வையும் ரத்தமும் உழைப்பாக உரியப்பட்டது. பணியின் கொடுமை தாங்காமல் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்தவர்களின் தலைகள் மற்ற தொழிலாளர்களின் முன்பு கொய்யப்பட்டு அந்தத் தலைகள், மரக்கிளையில் தொங்கவிடப்பட்டன.

 

வாழைத்தார் படம் போட்ட பண நோட்டுகள்!

காலரா, மலேரியா நோய்களால் கொத்துக்கொத்தாகச் செத்து மடிந்தவர்கள், ஆங்காங்கே குழிதோண்டிப் புதைக்கப்பட்டனர். ஒரு கட்டத்தில், இனி புதைக்க இடமே இல்லை என்றபோது, பிணங்கள் எல்லாம் டீசல் ஊற்றி எரிக்கப்பட்டன. 5 ஆண்டுகாலத்தில் இந்தத் திட்டத்தை முடிக்கத் திட்டமிட்டிருந்தது பிரிட்டன். ஆனால், இ்தைத்தான் ஜப்பானியர்கள் 15 மாதங்களில் நிகழ்த்திக்காட்டினர். அதற்காக ஒரு லட்ச ஆசிய தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இதில், மிகப்பெரும்பான்மையானோர் தமிழர்கள். இத்தனைக்கும் பிறகுதான் 1945-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ரயில் சேவை தொடங்கியது. ஜப்பானியர்கள் இதை ஒரு திருவிழாவைப்போலக்  கொண்டாடினர். உயிரிழந்தவர்கள்போக, எஞ்சி இருந்த தமிழர்களும் இதர தொழிலாளிகளும் சோர்வோடு மலேசியத் தோட்டங்களில் உள்ள தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர். வேலை பார்த்ததற்கு ஊதியமாய் ஒவ்வொருவருக்கும் ஒரு மூட்டை நிறைய வாழைத்தார் படம் போட்டு அச்சடிக்கப்பட்ட பண நோட்டுகள்  வழங்கப்பட்டன. அதுவே, அவர்களுக்கு ஆறுதலாக இருந்தபோதும் அப்போது, ‘அந்தப் பண நோட்டுகள் செல்லாது’ என அறிவிக்கப்பட்டதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

நூலகங்கள் மற்றும் ஆவணக் காப்பகங்களில் தரவுகள்!

உலகப் போர் முடிந்ததும் யுத்தக் கைதிகளாய் இருந்த பிரிட்டன் மற்றும் அமெரிக்க வீரர்கள் அவர்களின்  நாடுகளில் கதாநாயகர்களாய் கொண்டாடப்பட்டனர். பர்மா மற்றும் சீன தொழிலாளர்கள் அவர்கள் நாட்டு அரசாங்கத்திடம் இருந்து அடிப்படை வாழ்வாதாரத்துக்கான உதவியினைப் பெற்றனர். எல்லாவற்றுக்கும் மேல் அந்த மக்களுக்கு அந்த நாட்டில் நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டது. ஆனால், இந்தக் கொடூரத்தில் கொல்லப்பட்ட 60 ஆயிரம் தமிழர்களைப் பற்றிப் பேச அப்போது யாருமே இல்லை. பொருளாதாரத் தேவைக்காகப் புலம்பெயர்ந்ததால், இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும்கூட அந்த மக்களை நினைவுகூரவில்லை எவரும்.
இந்தக் காட்சிகள் மிக நேர்த்தியாகப் படம்பிடிக்கப்பட்டு இருந்தன. ரயில் பாதை அமைக்கப்பட்ட காலத்தில் அதில், வேலை செய்ததில் எஞ்சியிருந்த சிலரைத் தேடிப்பிடித்து இதில் பேச வைத்திருக்கிறார்கள். நெஞ்சத்தைப் பதறவைக்கும் இந்த வரலாற்றுச் சோகத்தை, துயரத்தைத் தனது 65 நிமிட ஆவணப்படத்தில் பதிவுசெய்திருக்கிறார் இயக்குநர் குறிஞ்சி வேந்தன். ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு கிழக்காசிய நாடுகளுக்குச் சென்று அங்குள்ள நூலகங்கள், ஆவணக் காப்பகங்களில் தரவுகள் திரட்டி, ரயில் பாதை அமைக்கும் பணியில் அன்று ஈடுபட்டு இன்றும் உயிரோடு இருக்கும் நான்கு ஐந்து தமிழ் தொழிலாளர்களைச் சந்தித்துப் பேசி முழுமையான ஆய்வுக்குப் பின் இந்த ஆவணப்படம் படமாக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய அதிர்வை இந்த ஆவணப்படம் ஏற்படுத்தியிருந்தது. அதைவிட இதை நாம் இதுவரை அறிந்திருக்கவில்லை என்பதுதான் மிகப்பெரிய அதிர்ச்சி. லட்சக்கணக்கில் பலியான தமிழர்களுக்கு இந்திய வரலாற்றில் எந்தப் பதிவும் இல்லை என்பது நிச்சயம் நம்ப முடியவில்லை. புதையுண்டு கிடக்கும் இத்தகைய  ஆவணங்கள் வெளிவரும்போது, இதுதான் வரலாறு என நாம் கட்டமைத்து வைத்திருந்தவை அனைத்தும் நொறுங்கிப் புதியதொரு உருவம் எழுகிறது.

- ந.அருண் பிரகாஷ் ராஜ் (மாணவப் பத்திரிகையாளர்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement