Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சிறையில் சித்ரவதைக்குள்ளாகும் திலீபன் மகேந்திரன்...? சுவாதி கொலை குறித்த பதிவு காரணமா?

 

திருச்சி : சென்னை மென்பொருள் பொறியாளர் சுவாதி கொலை வழக்கு தொடர்பாக அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட திலீபன் மகேந்திரன், சிறையில் பெரும் சித்ரவதைக்குள்ளாகி வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பேஸ்புக்கில் தீவிரமாக இயங்கி வருபவர் திலீபன் மகேந்திரன். நள்ளிரவில் சுடுகாட்டில் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டபடி உள்ள படங்களையும், தேசிய கொடியை தீயிட்டி கொளுத்தி அந்த புகைப்படங்களையும் பேஸ்புக்கில் பகிர்ந்து பரபரப்பை கிளப்பியவர். தேசிய கொடியை எரித்ததற்காக இவர் மீது வழக்குள்ளது. இந்நிலையில் சுவாதி கொலையில் சிலருக்கு தொடர்பிருப்பதாக கூறி அவர்களின் பெயர்களை குறிப்பிட்டு பேஸ்புக்கில் தகவலை பதிந்திருந்தார். 

அவர் குறிப்பிட்டவர்களில்  சென்னை துறைமுக பொறுப்பு கழக இயக்குனரும், பிஜேபியின் மாநில துணை தலைவருமான கருப்பு முருகானந்தமும் ஒருவர். இதையடுத்து தன்மீது அவதூறு பரப்புகின்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி  திருவாரூர் காவல் நிலையத்தில் கருப்பு முருகனந்தம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் கடந்த 25ம் தேதி கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்  திலீபன் மகேந்திரன்.வழக்கில் ஜாமீன் பெற்றுள்ள திலீபன், சட்ட நடைமுறைகள் காரணமாக இன்னும் சிறையில் இருந்து விடுவிக்கப்படவில்லை.

இந்நிலையில் திருச்சி மத்திய சிறையில் திலீபன் மகேந்திரன் கொடுமைப்படுத்தப்படுவதாக பரபரப்பு புகாரினை தெரிவித்துள்ளார் குடிமக்கள் உரிமைகள் பொதுமன்றத்தின் ஒருங்கிணைப்பாளரும், வழக்கறிஞருமான கமருதீன். இது குறித்து தமிழக முதல்வர், திருச்சி மாநகர காவல் ஆணையர்,  சிறைத்துறை கூடுதல் இயக்குனர் உள்ளிட்டோருக்கு புகார் மனுவையும் அவர் அனுப்பியுள்ளார்.

குற்றச்சாட்டு தொடர்பாக அவரிடம் பேசினோம். "கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள திலீபன் மகேந்திரன்.  சுவாதி கொலை செய்யப்பட்ட நாள் முதலே தனது  பேஸ்புக் பக்கத்தில் பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.  இவர்  சுவாதி கொலைக்கு பலரது பெயரையும் குறிப்பிட்டு  இவர்கள் சுவாதி கொலைக்குக் காரணம் என குறிப்பிட்டுள்ளார்.  இந்நிலையில் தான் திலீபன்,   ஆகஸ்ட் 25ம் தேதி கைது செய்யப்பட்டார். சென்னை 'அம்பத்தூர்' பகுதியில் கைது செய்யப்பட்ட இவர், வேளாங்கண்ணியில் கைது செய்ததாக குறிப்பிட்டு போலீசார் வழக்கு போட்டுள்ளனர். 

திலீபன் மகேந்திரனை கடந்த கடந்த சனிக்கிழமை சிறையில் சந்தித்துவிட்டு வந்தேன்.  அடுத்து நேற்று மாலை, எனது கட்சிக்காரர்களை பார்க்க போனபோது.   திலீபனையும் சந்தித்தேன். நான்  சனிக்கிழமை அவரை சந்தித்து சென்ற பிறகு,  அதுவரை  வைத்திருந்த பிளாக்கில் இருந்து மனநிலை சரியில்லாதவர்களை அடைக்கும் மெண்டல் பிளாக்கிற்கு மாற்றி அடைத்து விட்டதாக அவர் கூறினார்.  மேலும் தன்னுடைய ஆடைகளை கழற்றிக் கொடுக்கச்சொல்லி தண்டனை சிறைவாசிகள் அணிந்திருக்கும் டவுசரை மட்டும் அணிய கட்டாயப்படுத்தி, சாப்பிடும் நேரம் தவிர மற்ற நேரங்கள் முழுக்க, ராத்திரி பகலாக தனிமைச் சிறையில் அடைத்து வைத்திருப்பதாக அவர் குற்றஞ்சாட்டினார். "காற்று வசதியில்லை, மின் விசிறியோ, மின் விளக்கோ இல்லை. இரவில் போர்த்திக் கொள்ள போர்வை கூட கொடுக்கவில்லை.  இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். உங்களை பார்க்க வந்தபோதுதான் சட்டையே கொடுத்தாங்க. திரும்பி போகும்போது திரும்ப கழட்டி கொடுத்துடனும்னு சொல்லியிருக்காங்க. என்னை இப்படி நடத்தவேண்டிய அவசியம் என்னனு எனக்கு தெரியவில்லை. இந்த நடவடிக்கைகள் எல்லாம் அச்சத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்துது,"னு சொன்னார்.

இது சம்பந்தமா திருச்சி சிறையில் பணியிலிருந்த சிறை அலுவலரிடம் கேட்டேன். அதுக்கு. 'சிறையில் உள்ள மனநல ஆலோசகரின் அறிக்கையின் படி தான், திலீபனின் பாதுகாப்புக்காக இப்படி அடைத்து வைச்சிருக்கிறோம்' என சொன்னாங்க. மனநல அறிக்கையை கேட்டதுக்கு காட்ட மறுத்துட்டாங்க. சிறை கண்காணிப்பாளரை பார்த்து பேசவும் என்னை அனுமதிக்கலை.  
திலீபனுக்கு ஏற்கனவே பல அச்சுறுத்தல்கள் இருக்கு, இப்படியிருக்க,  சிறையில் திலீபனுக்கு பாதுகாப்பை அதிகரிக்காமல்,  அவர் மனநிலை சரியில்லாதவர் எனச்சொல்லி,  தற்கொலைக்கு முயற்சிப்பவர்களை தனிமை சிறையில் அடைத்து வைத்திருப்பது மனித உரிமை மீறல். முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் போடப்படும் அவதூறு வழக்குகள் சிறைதண்டனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், திலீபனை கைது செய்து சிறையில் அடைத்து சித்ரவதை செய்கிறார்கள். 

ராம்குமார் கைது சம்பவம் நடந்த பிறகு, ராம்குமாரின் ஊரான மீனாட்சிபுரத்திற்கு சென்று அவரது பெற்றோரை திலீபன் சந்தித்துள்ளார். அவரது வழக்கறிஞர் ராம்ராஜையும் சந்தித்துள்ளார். அப்போது திலீபன் சுவாதி கொலை வழக்கு தொடர்பாக சில விஷயங்கள் சொன்னதன் அடிப்படையில்தான் ராம்குமார் தரப்பு இந்த வழக்கை சிபிஐக்கு மாத்தணும்னு கோரிக்கை வைத்தது. 
திலீபன் போட்ட பதிவுகள் குறித்து தமிழக போலீசாரோ, விசாரணை அதிகாரிகளோ ஏதும்  மறுப்பு சொல்லவில்லை. இந்த நிலையில் குற்றச்சாட்டு எழுப்பிய ஒருவரை கைது செய்து சிறையில் அடைப்பதை பார்த்தால் போலீசார் எதையோ மறைக்க பார்க்கிறார்கள். இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடுவோம்," என்றார்.


- சி.ய.ஆனந்தகுமார்,  படம்: தே.தீட்ஷித்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement