தொடரும் போலி மருத்துவர் கைது: இதுவரை 162 பேர் சிக்கியுள்ளனர்! | 162 quacks held so far ...!

வெளியிடப்பட்ட நேரம்: 14:56 (01/09/2016)

கடைசி தொடர்பு:15:21 (01/09/2016)

தொடரும் போலி மருத்துவர் கைது: இதுவரை 162 பேர் சிக்கியுள்ளனர்!

     

சென்னை: தமிழக அளவில் போலி மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், அவர்களால்
சிகிச்சைக்கு வரும் மக்கள் கடும் சிக்கலுக்கு ஆளாகி, உயிரையும் இழக்கும் துன்பத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்று அரசுக்குத் தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. இதனால் தமிழக சுகாதாரத் துறை விழித்துக்கொண்டு தமிழகம் முழுக்க போலி மருத்துவர்கள் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளது.

அதன்படி எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கைகளில், இதுவரை தமிழகத்தில் 162 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்கின்றனர் சுகாதாரத்துறை அதிகாரிகள். அதிலும் சென்ற மாதத்தில் மட்டும்    
19 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 மர்மக் காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவர்கள்

கடந்த சில வாரங்களாக திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு,சிக்குன் குனியா,வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது என்றும் அதற்கு 5 பேர் பலியாயினர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.மேலும் பலர், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில், காய்ச்சலால் இறந்தவர்களில் 2 பேருக்கு ஆரம்பத்தில் போலி மருத்துவர்கள் சிகிச்சை அளித்தது தற்போது தெரியவந்துள்ளது.இதனையடுத்து போலி மருத்துவர்களைக் கண்டறியும் நடவடிக்கையைத் துரிதப்படுத்தியுள்ளது சுகாதாரத் துறை.

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் போலி மருத்துவர்களை கண்டறியும் பணிகளில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் போலி மருத்துவர்களிடம் செல்ல வேண்டாம் என்றும் சுகாதரத்துறை பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளது.  

கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை  618 போலி மருத்துவர்களைக் கண்டுபிடித்து கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில், பல் மருத்துவக் கவுன்சில், ஆயுஷ் மருத்துவக் கவுன்சில் ஆகியவற்றில் பதிவு இல்லாதவர்கள் போலி மருத்துவர்களாக கருதப்படுவார்கள் என்பது கவனிக்கத்தக்கது.
   
இந்தக் கைது நடவடிக்கைகள் குறித்து கூறிய சுகாதாரத் துறை அதிகாரிகள்,

"போலி மருத்துவர்களாகக் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு தண்டனை பெற்றவர்களைக்  கண்காணிக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த திட்டமிட்டு வருகிறோம். அதனால் அவர்கள் கைது தண்டனை முடிந்தும்,வேறு பகுதிகளுக்குச் சென்று மருத்துவம் பார்ப்பது தவிர்க்கப்படும்" என்றனர்.   

சென்னையில் பல இடங்களில் போலி மருத்துவர்கள்  மருத்துவம் அளித்து வருவது குறித்தும் சுகாதாரத் துறைக்குப் புகார்கள்  சென்றவண்ணம் இருப்பதால்,இங்கும் போலி மருத்துவர்கள் தேடுதல் வேட்டை தீவிரமாகியுள்ளது.  

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close