'தங்கம் கொடுத்தால், தேடி வருது பி.எச்டி!'  -தடம் மாறுகிறதா தமிழக பல்கலைக்கழகங்கள்? | Educationlist slams Doctoral committee in universities

வெளியிடப்பட்ட நேரம்: 12:17 (02/09/2016)

கடைசி தொடர்பு:12:24 (02/09/2016)

'தங்கம் கொடுத்தால், தேடி வருது பி.எச்டி!'  -தடம் மாறுகிறதா தமிழக பல்கலைக்கழகங்கள்?

ல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி மாணவர்களை குறிவைத்து மிகப் பெரிய மோசடி அரங்கேறி வருவதாகக் குற்றம் சாட்டுகின்றனர் கல்வியாளர்கள். ' பரிசுப் பொருட்களை வாரியிறைக்கும் மாணவர்களுக்கு பி.எச்டி பட்டம் தேடிச் செல்கிறது' எனவும் அவர்கள் அதிர வைக்கின்றனர். 

தமிழகத்தில் இருபதுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் முனைவர் பட்டம் பெறுவதற்காக லட்சக்கணக்கான மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். விரிவுரையாளர் பணியிடங்களில், ஆராய்ச்சிப் பட்டம் பெற்றவர்களுக்குக் கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கிறது. இதன் காரணமாகவே சிறந்த கைடுகளைத் தேடி மாணவர்கள் படையெடுக்கின்றனர். " ஆராய்ச்சிப் படிப்பு முடித்துவிட்டால், எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணத்தில்தான் பல்கலைக்கழகங்களை நோக்கி மாணவர்கள் படையெடுகின்றனர். இவர்களின் ஆர்வத்தையே வணிகமாக மாற்றிக் கொள்ளும் வேலையில் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஈடுபடுகின்றனர். அதிகமான பரிசுப் பொருட்களை வாரியிறைப்பவர்களுக்கே பட்டங்கள் தேடி வருகின்றன. இதனால் தரமான விரிவுரையாளர்களை எதிர்பார்ப்பது வெறும் கனவாகவே மாறிவிடும் அபாயம் உள்ளது" என வேதனைப்படுகிறார் தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் பேராசிரியர். தமிழ்மணி. 

தொடர்ந்து, "ஒவ்வொரு ஆண்டும் ஆராய்ச்சிப் பிரிவு மாணவர்களின் ஆய்வு முடிவுகளை அறிந்து கொள்வதற்காக, டாக்டோரல் கமிட்டி கூட்டப்படுகிறது. ' ஆண்டுக்கு இரண்டு முறை கமிட்டி கூட்டம் நடத்தப்பட வேண்டும்' என்பது பல்கலைக்கழக மானியக் குழுவின் விதி. இதை அடிப்படையாக வைத்து நடத்தப்படும் கூட்டத்தில், ஆராய்ச்சி மாணவர், அவருடைய கைடு, வெளி பல்கலைக்கழகத்தின் துறை பேராசிரியர்கள் உள்பட நான்கு பேர் பங்கேற்கின்றனர். இந்தக் கூட்டங்களுக்கான செலவுகள் அனைத்தும் பல்கலைக்கழக நிதியில் இருந்து கையாளப்படுகின்றன. ஆனால், கமிட்டிக்கு வரக் கூடிய மாணவர்களிடம் இருந்து ஒவ்வொரு கூட்டத்திற்கும் பத்தாயிரம் முதல் இருபதாயிரம் வரையில் கட்டாய வசூல் நடத்தப்படுகின்றன.

' வெளிபல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு அரை பவுன் முதல் ஒரு பவுன் வரையில் தங்கக் காசு கொடுக்கப்பட வேண்டும்' என்பதை சில பல்கலைக்கழகங்கள் கட்டாயமாக்கிவிட்டன. ' இதைப் பற்றி வெளியில் சொன்னால் பி.எச்டி வாங்குவது சிரமம் ஆகிவிடும்' என்பதால் மாணவர்கள் மௌனமாகக் கடந்து செல்கின்றனர். பணம் தர இயலாத நிலையில் உள்ள மாணவர்களுக்கு பட்டம் அளிப்பதை தாமதப்படுத்துகின்றனர். டாக்டோரல் கமிட்டி கூட்டத்திற்கு வரும் துறைசார் நிபுணர்களை மகிழ்ச்சியாக அனுப்ப வேண்டும் என்பதில் பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்கள் பலர் உறுதியாக இருக்கின்றனர். 

இவர்கள் வேறு பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும்போதும் இதேபோன்று நடத்தப்படுகின்றனர். ஒரு கைடுக்கு எட்டு மாணவர்கள் வரையில் ஆராய்ச்சிப் படிப்புக்காக சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆயிரம் மாணவர்கள் வரையில் பி.எச்டி படித்து வருகின்றனர். இவர்கள் ஒவ்வொருவரும் அரை பவுன் தங்கம் மற்றும் 20 ஆயிரம் பணம் தருகின்றனர் என்றால், எவ்வளவு தொகைகள் லஞ்சமாகப் பரிமாறப்படுகின்றன என்பது விளங்கிவிடும். பரிசுப் பொருட்களை வாரியிறைக்கும் ஒரு மாணவர் எப்படி தரமான ஆசிரியராக வெளியில் வருவார்? கண்ணுக்குத் தெரியாமல் நடத்தப்படும் இந்த மோசடிகளைப் பற்றி அரசுக்கு எந்தவிதக் கவலையும் இல்லை. இதுகுறித்து, எங்கள் கவனத்திற்கு ஏராளமான புகார்கள் வந்திருக்கின்றன. இந்த விவகாரத்தில் பல்கலைக்கழக மானியக் குழு அதிகாரிகள் தலையிட்டு, டாக்டோரல் கமிட்டியையே நீக்க வேண்டும். இல்லாவிட்டால் வசதி படைத்தவர்கள் மட்டுமே, பி.எச்டி வாங்க முடியும் என்ற அவலநிலைக்கு கல்வித்துறை ஆளாக நேரிடும்" என்றார் ஆதங்கத்தோடு. 

-ஆ.விஜயானந்த்
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்