Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

' சபையில் அமளியைத் தூண்டிவிடுவதே முதல்வர்தான்!'  -விளாசும் விஜயதரணி எம்.எல்.ஏ. 

ட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவடைந்துவிட்டது. ' பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எந்த மரியாதையும் கொடுக்கப்படவில்லை. பேரவையின் மரபும் காக்கப்படவில்லை' எனக் கொதிக்கிறார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி. 

தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஜூலை 25-ம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்ததை அடுத்து, 29-ம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதமும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அரசு துறைகளின் மானியக் கோரிக்கைகளின் மீதான விவாதமும்  நடைபெற்றது. கூட்டத்தொடரின் இறுதிநாளான இன்று, சிறுவாணி அணை விவகாரம் தொடர்பாக முதல்வர் கொண்டு வந்த தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூடவே, மாநகராட்சி மேயர் மற்றும் நகராட்சி தலைவர்களை தேர்வு செய்யும் சட்டத் திருத்தம் முன்வைக்கப்பட்டது. இதற்கு தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, தேதி குறிப்பிடப்பிடாமல் அவையை ஒத்தி வைத்தார் சபாநாயகர் தனபால். 

சட்டமன்றக் கூட்டத் தொடர் குறித்து, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் கொறடா விஜயதரணி எம்.எல்.ஏவிடம் பேசினோம். " இன்று சபை முழுக்க கூச்சல், குழப்பமாகவே நடந்து முடிந்தது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. கூட்டத் தொடர் முழுவதும் சர்ச்சைகள் ஏற்பட்டதற்கு முதல்வரின் தூண்டுதலே காரணம். தி.மு.க உறுப்பினர்களை இடைநீக்கம் செய்துவிட்டு, எதிர்க்கட்சிகளே இல்லாமல் சபையை நடத்திய பெருமை ஆளுங்கட்சிக்குக் கிடைத்திருக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளில் எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு எப்படி வாய்ப்பு அளிக்கப்படவில்லையோ, அதைப்போலவே இந்தக் கூட்டத் தொடரிலும் பேசவிடவில்லை.

நேரடி மேயர் தேர்வு முறையை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, ' வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்'  என கோரிக்கை வைத்தோம். அவ்வாறு வாக்கெடுப்பு நடத்திருந்தால், ஆளுங்கட்சி உறுப்பினர்களே அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்திருப்பார்கள். அதைத் தவிர்த்துவிட்டார்கள். இதன்மூலம் கூட்டுறவு சங்கத் தேர்தலைப் போல, உள்ளாட்சித் தேர்தலில் அவர்களே வெற்றி பெற்றது போல அறிவிப்பதற்கே வாய்ப்பு அதிகம். உள்ளாட்சியில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு பற்றி தெளிவான வரையறை சொல்லப்படவில்லை" என ஆதங்கப்பட்டவர், 

தொடர்ந்து, " மகப்பேறு விடுப்பை 9 மாதங்களாக உயர்த்த வேண்டும் என சமூகநலத்துறை மானியக் கோரிக்கையில் நான்தான் பேசினேன். அதையே, 'ஒன்பது மாதங்கள் விடுப்பு' என அறிவித்தார் முதல்வர். ஒரு பெண் கருவுற்ற நாள் என்பது 60 நாட்களுக்குப் பிறகு தெரிய வரும். அப்படிப் பார்த்தால் ஏழு மாதங்களில் குழந்தை பிறந்துவிடும். அரசு வழங்கும் தொடர் விடுப்பு என்பது ஏழு மாதங்களில் முடிந்துவிடும். நான் வைத்த கோரிக்கை என்னவென்றால், குழந்தை வளரும் ஓராண்டு காலம் வரையில் எப்போது வேண்டுமானாலும் ஒன்பது மாத விடுப்பை ஈடுகட்டிக் கொள்ளலாம் என்பதுதான். அதை அரசு சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. தற்போதைய அறிவிப்பால் அரசு பெண் ஊழியர்களுக்கு முழுமையான பயன் கிடைக்க வாய்ப்பில்லை. அதேபோல், முதியோர்கள் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கும் வகையில் இலவச பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும் என்றோம். தற்போது மாதத்திற்கு பத்து டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. இதை வைத்துக் கொண்டு அவர்கள் என்ன செய்வார்கள்? 

இதைவிடக் கொடுமை, விஷன் 2023 திட்டத்திற்கு 15 லட்சம் கோடி ரூபாய் எப்படி வரும் என்பதைப் பற்றிய எந்தப் பார்வையும் இல்லை. முதலீட்டாளர் மாநாட்டால் வந்த ஒரு லட்சம் கோடி முதலீடுகளுக்கே இன்னமும் வழி தெரியவில்லை. அரசின் கடன் சுமை கூடிக் கொண்டே போவதற்குத் தீர்வும் இல்லை. இந்நிலையில், எப்படி வரப் போகிறது 15 லட்சம் கோடி என்று கேட்டால், அதற்கும் பதிலில்லை. 2013-ம் ஆண்டில் திருவண்ணாமலையில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில், ஒரு கட்டடத்தைக் கட்டுவது குறித்து அறிவித்திருந்தார் முதல்வர். அதே கட்டடம் கட்டுவதைப் பற்றி இப்போதும் அறிவிக்கிறார். இதைப் பற்றி அவர் அறிந்தாரா என்பதும் தெரியவில்லை. காவல்துறை வீட்டுவசதி பற்றிப் பேசும்போதும், 'அருகதை', 'யோக்கியதை' என்ற வார்த்தைகளை வைத்துக் கொண்டே சச்சரவு நீடித்தது. அவையில் ஜனநாயகமும் இல்லை. அவை உறுப்பினர்களுக்கு மரியாதையும் இல்லை. ஒருதலைப்பட்சமாகவே நடந்து கொண்டார் சபாநாயகர்" எனக் கொந்தளித்தார் விஜயதரணி. 

-ஆ.விஜயானந்த்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement