Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நீங்கள் வாசிப்பதெல்லாம் உண்மையல்ல!

ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என எந்தப் பக்கம் திரும்பினாலும் 'Based on a real incident' என்ற கேப்ஷனோடு எக்கச்சக்கப் படங்கள் தரிசனத்திற்குக் காத்திருக்கின்றன. ட்ரெய்லர்களுக்கான டெம்ப்ளேட்டே அப்படி ஒரு வரியோடுதான் தயார் ஆகும் போல. அவ்வளவுக்கா கற்பனைப் பஞ்சம்? இந்த டெம்ப்ளேட்டை உடைப்பதற்காகவே கற்பனையாய் சில கதைகளை யோசித்திருக்கிறோம். இதெல்லாம் ப்யூர்லி Based on a reel life incident. 

நிழல் வீரன்:

அப்பர் மிடில் க்ளாஸைச் சேர்ந்த அந்த இளைஞனுக்கு சினிமா மீது தீராக்காதல். குழந்தை நட்சத்திரமாக தலை காட்டுபவர் விடாமுயற்சியால் முன்னேறி முன்னணி நடிகராகிறார். 'ரவுடிகளை பூண்டு வெங்காயத்தோடு அழிக்கும் கதையா, கூப்பிடு அவரை' என சொல்லும் அளவிற்கு 'முரட்டு' வளர்ச்சி. தட்டிக்கேட்டு தட்டிக்கேட்டு புரட்சி மோடுக்கு செல்பவர் ஒரு கட்டத்தில், தன் கூட்டத்தில் நடக்கும் தப்புகளையே தட்டிக் கேட்கிறார். 'கத்தி' ஜீவானந்தத்தை விட அதிக நேரம் பிரஸ் மீட்டில் பேசியவர் என்ற சாதனையைப் படைக்கிறார். ஆக்‌ஷன், ட்ராமா எல்லாம் நடந்து முடிவாக முக்கியப் பதவியை கைப்பற்றுகிறார். 'எனக்கு ரெஸ்ட்டே கிடையாதுடா' எனத் திருமணம்கூட செய்யாமல் அடுத்த கூட்டத்தை நோக்கி முன்னேறுகிறார். 'கடைசியா ஹிட் கொடுத்து ஒரு மாமாங்கம் ஆச்சு. கொஞ்சம் நடிக்கவும் செய்யலாமே' எனக் குரல்கள் துரத்துகின்றன.

Based on a reel life story.

புரட்சிப் பூ:

மற்ற மிடில் க்ளாஸ் இல்லத்தரசிகளைப் போல் இல்லாமல் அரசியலைத் தன் பாதையாகத் தேர்ந்தெடுக்கிறார் ஹீரோயின். தன் கட்சித் தலைவருக்காகப் பாசத்தில் லிட்டர்கணக்கில் கண்ணீர் வடிப்பது, வணக்க யோகாசனம் செய்வது என 'திறமைகளை' வளர்த்துக்கொண்டு முன்னேறுகிறார். 'நீங்க இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லை' என அவரை டெல்லிக்கு அனுப்பி வைக்கிறார்கள். அங்கே போய் தவறுகளைப் பின் தலையில் அடித்துத் தட்டிக் கேட்கிறார். இந்தப் புரட்சியின் வீரியம் தாங்காமல் சொந்தக் கட்சியே அவரை வெளியேற்ற, வெகுண்டெழுந்து கொடி பிடிக்கிறார். ஊர் ஊராகப் போய் கூட்டம் சேர்க்கிறார். அடுத்தடுத்த திருப்பங்கள்தான் கதை.

Based on a reel life story.

காத்திருந்து காத்திருந்து:

தந்தைக்கும் மகனுக்குமான பாசப்போராட்டம்தான் கதை. தனக்குக் கிடைத்த கெளரவம் தன் மகனுக்கும் கிடைக்க வேண்டும் என ஆசைப்படுகிறார் தந்தை. மகனை அதற்காக தயார்படுத்துகிறார். பல ஆண்டுகால உழைப்பிற்குப் பிறகு பழம் நழுவி பாலில் விழும் என எதிர்பார்க்கிறார் மகன். அது ஒவ்வொரு தடவையும் பக்கத்து வீட்டுக்காரரின் டம்ளரிலேயே விழ, கடுப்பாகிறார். இதற்கிடையே சகோதர சண்டை வேறு. இதை எல்லாம் சமாளித்து வெற்றி பெறுகிறாரா இல்லையா என்பதுதான் கதை.

Based on a reel life story.

நடைகள் ஓய்வதில்லை:

முந்தைய படத்திற்கான பேரலல் திரைக்கதை இது. தந்தை - மகன் பாசத்தால் பாதிக்கப்பட்ட இந்தத் திரைக்கதை நாயகன் பழி வாங்கக் காத்திருக்கிறார். அதற்கேற்றார் போல ஒரு வாய்ப்பு அமைய, நண்பர்களை சேர்த்துக்கொண்டு களத்தில் குதிக்கிறார். முந்தைய பட நாயகன் என்னென்ன ட்ரிக்ஸ் மேற்கொண்டாலும் அதை எல்லாம் எப்படியாவது தடுக்கிறார். மீடியா வெளிச்சம் தன் மேல் மட்டுமே பட வேண்டும் என்பதற்காகப் பல வித்தைகள் செய்கிறார். அவரின் முயற்சி ஒரு கட்டத்தில் வெற்றியும் பெற்றுவிடுகிறது. சுபம்

Based on a reel life story.

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு:

ஒரு தலைவரைப் பற்றிய கதை இது. முன்னாள் முதல்வராக இருந்து வெற்றிகரமாக இந்நாள் முதல்வராகிறார். பெரும் ஆர்ப்பாட்டத்தோடு பதவியேற்பவர் அதன்பின் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. நடுவிலேயே ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆளாகிப் பதவி விலகுகிறார். பின் மீண்டும் முதல்வர். இந்த ரோலர்கோஸ்டர் விளையாட்டின் முடிவில் தேர்தல் வருகிறது. விரதம் இருந்து கோயிலுக்குச் செல்லும் பக்தன் போல 'தவ வாழ்க்கை' வாழ்ந்து தேர்தலைச் சந்திக்கிறார். அதில் வெற்றியும் பெறுகிறார். 'திரும்ப நானே வந்துட்டேன்னு சொல்லு' என உலகிற்கு அறிவிக்கிறார்.

Based on a reel life story.

ஐ யம் பேக்:

இதுவும் ஒரு கம் பேக் ஸ்டோரிதான். தமிழ்நாடே கொண்டாடும் ஹீரோ அவர். ஆனால் சமீபத்திய படங்கள் எல்லாம் தோல்வியைத் தழுவ, வினியோகஸ்தர்கள் அவரை முற்றுகையிடுகிறார்கள். அந்தப் பிரச்னையை சமாளிக்க புதுப் படத்தில் நடிக்கிறார். படம் பற்றி உலகமே பரபரப்பாகப் பேசுகிறது. படத்தின் டிக்கெட் ஏழைகளுக்கு எட்டாக்கனியாகும் அளவிற்கு பயங்கர பிசினஸ். ரிலீஸான படம் பல விவாதங்களைக் கிளப்ப, அடுத்த படமும் அதே இயக்குநர்கூடதான் என அறிவிக்கிறார் அந்த ஸ்டார். இந்த முறை பிசினஸ் மூலம் கொள்ளை லாபம் அடிக்கும் வாய்ப்பு அவர் மருமகனுக்கே கிடைக்கிறது.

Based on a reel life story.

காசு பணம் துட்டு மணி:

கிட்டத்தட்ட 'சிவாஜி' படக்கதைதான். அமெரிக்காவில் கைநிறைய சம்பாதிக்கும் ஹீரோ தாய்நாட்டிற்குத் திரும்பி வருகிறார். இங்கு அவருக்கு முக்கியமான பதவி வழங்கப்படுகிறது.  'சிவாஜி' படத்தில் ரஜினி நடந்து வர வர பின்னால் ஹைடெக்காக ஊர் மாறுவது போல இதிலும் நடக்கிறது. எல்லோரும் பாராட்டுகிறார்கள். உடனே ஆள்பவர்களுக்கு மூக்கு வியர்க்கிறது. 'நல்ல பேரு வாங்குறதே தப்பு, அதுலயும் நம்மளை விட்டுட்டு இன்னொரு ஆளு வாங்குறதா?' என அவரை வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார்கள். அதே 'நீ அமெரிக்காவுக்கே போய்டு சிவாஜி' மொமென்ட்தான். 'போங்கய்யா நீங்களும் உங்க பாலிடிக்ஸும்' என வெறுத்து ஒதுங்குகிறார் ஹீரோ. 'உண்மை ஒருநாள் வெல்லும்' டைப் பாடல் ஒலிக்க, எண்ட் கார்ட்.

Based on a reel life story.

ஏட்டிக்குப் போட்டி:

ஸ்போர்ட்ஸ் ஜானர் கதை இது. கிரிக்கெட்டில் தமிழக வீரர்கள் மட்டுமல்ல தமிழக நிர்வாகிகளும் ஒதுக்கப்படுவதைப் பார்த்து நாக்குப்பூச்சி துடிக்க புரட்சி செய்கிறார் ஹீரோ. தேசியப் பதவி, சர்வதேச பதவி போன்ற இடங்களை பல லெவல் பாலிடிக்ஸ் மூலம் அடைகிறார். அந்நேரம் பார்த்து ஊழல் குற்றச்சாட்டில் வசமாக சிக்க, தொடங்கிய இடத்துக்கே வந்துவிடுகிறார். சமூக வலைதளங்களில் இவரை மீம் மெட்டீரியல் ஆக்கி அழகு பார்க்கிறார்கள். 'என்னா பண்றேனு பாரு' என கலர்ஃபுல் லீக் ஒன்றை ஆரம்பித்து கெத்து காட்ட முயற்சிக்கிறார். ரிசல்ட் என்ன என்பதுதான் கதை.

Based on a reel life story.

பிரசாதம் தீஸ்கோண்டி:

க்ரவுட் பண்டிங் மாதிரி க்ரவுட் ஆக்டிங் சினிமா இது. இந்தக் கதையில், கோடிக்கணக்கான ஹீரோக்கள். 'ஒரு நாள் நம்மளோட எல்லாப் பிரச்னையும் தீர்ந்துடும்' என நம்பிக் காலம் தள்ளுபவர்கள். ஆனால் அதற்கான தருணம் வரும்போது கரெக்டாக தப்பான முடிவை எடுப்பார்கள். பின் பழையபடி 'குத்துது, முட்டுது' எனப் புலம்பித் தள்ளுவார்கள். எவ்வளவு முக்கினாலும் 'பிரசாதம் தீஸ்கோண்டி' என்ற லெவலில்தான் இவர்களை வைத்திருக்கிறது வாழ்க்கை. 

Based on a reel life story.

-நித்திஷ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Related Tags

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement