Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'கல்விக் கொள்கை 2016':மத்திய அரசுக்கு எதிராகக் கரம் கோர்க்கும் அரசியல் இயக்கங்கள்...!

      

சென்னை: மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கை 2016 வரைவுக்கான சில உள்ளீடுகள் என்ற ஆவணத்தை வெளியிட்டுள்ளது. அந்த ஆவணத்தில் உள்ள முன்மொழிவுகள் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக இருக்கின்றன. எனவே இதைத் திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி சென்னையில் வரும் 29ம் தேதி மாநிலம் தழுவிய மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று(சனிக்கிழமை) பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டுவரவுள்ள புதிய தேசிய கல்விக்கொள்கை பற்றிய கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், பொதுப்பள்ளிக்கான மாநில பொது மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு,திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி,திராவிடர் கழகம் கலி.பூங்குன்றன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை சுப.வீரபாண்டியன் மற்றும் விசிக,இந்தியக் கம்யூனிஸ்ட்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகளின் ஆகியோர் பங்கேற்றனர்.

ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, "மத்திய அரசு ஒழிக்கப்பட்ட குலக்கல்வி முறையை மீண்டும் கொண்டுவர முயல்கிறது. இதற்காக ஆவணம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் முன்மொழியப்பட்ட கொள்கை முன்மொழிவுகள்,இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நோக்கத்திற்கு எதிராகவுள்ளது.இந்திய நாடாளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஐ.நா. தீர்மானத்திற்கு எதிராகவும் உள்ளது. எல்லோருக்கும் சமத்துவமான கல்வி கிடைக்காது என்று கூறும் ஒரு கொள்கை முடிவை ஏற்றுக்கொள்ளமுடியாது.குழந்தைகள் பள்ளிக்கே வராமல் திறந்த வெளியில் கல்வி கற்றுக் கொள்ளலாம் என்பது போன்ற ஆபத்தான முடிவுகள் அதில் உள்ளன.

குறிப்பாக இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான கல்வி உதவித் தொகை என்பதை மறுக்கின்ற வகையிலும்,பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள நிலைக்கு ஏற்றவாறுதான் கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்று கருத்துக்கள் உள்ளது சமூக நீதிக்கு எதிரானது. ஆங்கிலத்தை மட்டுமே உயர்கல்விக்கான மொழியாகவும், சம்ஸ்கிருதம் மட்டுமே இந்தியாவின் அடையாள மொழியாகவும், சொல்வதை ஏற்றுக் கொள்ள இயலாது. அனைத்து மொழிகளுக்கும் சமமான வாய்ப்பு, முன்னுரிமை வழங்கப்படவேண்டும்.கல்வியில் மாநில அரசின் உரிமையைப் பறிக்கக் கூடாது.கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராக ஒரு கொளகை முடிவு மத்திய அரசு கொண்டுவரக் கூடாது.

எனவே தான், இந்தப் புதிய கல்விக்கொள்கையைத் திரும்ப பெற வலியுறுத்துகிறோம். இதற்கு மாற்றாக, அரசு தன் பொறுப்பிலும் செலவிலும்,அருகாமையில்  பள்ளிகளை அமைத்து தாய்மொழி கல்வியோடு பன்மொழி கற்கும் வாய்ப்பைப் பொதுப்பள்ளி மூலமாக கொடுக்கவேண்டும்.இது ஆரம்பகால கல்வி முதல் மேல்நிலை கல்வி வரை இருக்கவேண்டும்.உயர்கல்வி என்பது அரசின் நிதியில் அரசு கல்வி நிறுவனம் மூலமாக இருக்கவேண்டும்.

இப்படிப்பட்ட மாற்றுக் கொள்கையோடு புதிய கல்விக் கொள்கை உருவாக வேண்டும். அதை உருவாக்குவதற்காக குழு அமைக்கவேண்டும். அந்தக் குழுவில்,பட்டியல் இனத்தவர், பிற்படுத்தப் பட்டோர்,சிறுபான்மையினர்,பெண்கள்,திருநங்கைகள்,மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட கல்வியாளர்கள் இடம்பெறவேண்டும். இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து வரும் 29ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் சென்னையில் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம்.அத்தோடு, அடுத்த நாடளுமன்ற கூட்டத்தொடரின் முதல்வாரத்தில், டெல்லியில் இந்திய அளவில் கருத்தரங்கமும் ஆர்ப்பாட்டமும் நடத்தவுள்ளோம்." என்று கூறினார்.

இந்திய அளவிலான எதிர்ப்பு மத்திய அரசு கொண்டுவரவுள்ள புதிய கல்விக்கொள்கை திட்டத்திற்கு எழுந்துள்ளது. அதில் தமிழகம் தழுவிய அளவில் அனைத்து அரசியல் கட்சிகளும் தமது ஒருங்கிணைந்த எதிர்ப்பைக் காட்ட மத்திய அரசுக்கு எதிராகத் திரண்டுள்ளன. இதில் ஆளும் கட்சியான அதிமுகவின் ஆதரவையும் கேட்டுள்ளதாக பிரின்ஸ் தெரிவித்தார். அண்மையில் நடந்த சட்டமன்றத்தில் கூட தமிழக அரசு தெளிவாகக் கூறியிருக்கிறது 'மத்திய அரசு கொண்டுவரவுள்ள கல்விக் கொள்கையை ஒப்புக்கொள்ள மாட்டோம் 'என்று. இது நல்ல தொடக்கம். மேலும் அவர்களிடமும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவைக் கோருவோம்.இட ஒதுக்கீடு போராட்டத்திற்கு தமிழகம் எப்படி தலைமை தாங்கியதோ,அதைப்போல கல்வி உரிமையை மீட்டு எடுக்கவும் இப்போது தமிழகத்தின் அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளன. அடுத்த கட்டமாக, தென் மாநில மற்றும் வட இந்திய மாநிலங்களின் முதல்வர்களைச் சந்தித்து புதிய கல்விக் கொள்கைக்குறித்து எடுத்துக் கூறி, போராட அழைப்பு விடுக்கவுள்ளோம் எனவும் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறினார்.

-சி.தேவராஜன்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement