Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆம்புலன்ஸ் விவகாரம்...தமிழக நிலவரம் எப்படி?

வசர காலத்தில் ஏழைகளுக்கு உதவ வேண்டிய இலவச ஆம்புலன்ஸ் வாகனங்கள் பணம் தராத மக்களுக்குப் பயணிப்பதில்லை என்கிற புகார் நீண்டகாலமாக இருந்துவருகிறது. இதனால் பல உயிர்கள் பலியாகி இருப்பதற்கு கீழ்க்கண்ட சம்பவங்களை உதாரணமாக சொல்லலாம்.

சைக்கிளிலில் அழைத்துச் செல்லப்பட்ட பெண்கள்!


ஒடிசா மாநிலத்தில் மஜ்கி என்பவர், இறந்துபோன தனது மனைவியைப் போர்வையால் சுருட்டித் தோளில் வைத்துக்கொண்டு நடந்தே சென்றார். அதே மாநிலத்தில் ரயிலில் அடிபட்டு இறந்த சாலாமணி பாரிக் என்ற மூதாட்டியை பிரேத பரிசோதனைக்காகக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வராததால், கிராம சுகாதார ஊழியர்களே தோளில் சுமந்து சென்றனர். அதேபோல், இங்குள்ள உள்ள ராயகாடா மாவட்டம் பலக்கமனா கிராமத்தைச் சேர்ந்த சுனிதா என்ற பெண்ணுக்குப் பிரசவ வலி ஏற்பட, ஆம்புலன்ஸைத் தொடர்புகொண்டு உள்ளனர்.

குறித்த நேரத்தில் ஆம்புலன்ஸ் வராமல் போகவே, தனது மனைவியை சைக்கிளில் அழைத்துச் சென்றிருக்கிறார். மத்தியப் பிரதேசம் உலாட் கிராமத்தைச் சேர்ந்த பர்வதா பாயை, மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர். அது வராமல் போகவே, அவரை மோட்டார் சைக்கிளில் உட்காரவைத்து அழைத்துச் சென்றிருக்கிறார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் பாதி வழியிலேயே இறந்துவிட்டார்.

அதே மாநிலத்தில், சட்டார்புர் மாவட்டம் ஷாபுரா கிராமத்தைச் சேர்ந்த பார்வதிக்கு பிரசவ வலி ஏற்பட, ஆம்புலன்ஸ் உதவியை நாடியுள்ளனர். அது வராததால், பார்வதியை சைக்கிளில் உட்காரவைத்து அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்துள்ளார் அவரது தந்தை. உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த சுனில்குமார், தனது மகன் அன்ஷை அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல ஸ்டெரச்சர் கேட்டுள்ளார். தர மறுத்ததால், வேறு வழியின்றித் தன் மகனை தோளில் தூக்கிப்போட்டுக் கொண்டு சென்றார். போகும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தான் அன்ஷ்.

மேற்கண்ட சம்பவங்கள் அனைத்தும் கடந்த ஒரு வாரத்தில் நடந்தவை. இதேபோல், இன்னும் பல நிகழ்வுகள் இந்தியாவின் மூலைமுடுக்குகளில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இதுகுறித்து ஓடிசா நீதிபதி ஒருவர், ‘‘சாலை தொடர்பான பிரச்னைகள், தூரம், தகவல்தொடர்பு இடர்பாடுகள் போன்றவற்றால் மட்டுமே இவை நிகழ்கின்றன’’ என்று கூறியிருக்கிறார்.

‘‘நோயாளிகளின் வலியைப் புரிந்துகொள்ள வேண்டும்!’’

இதுதொடர்பாக தமிழக 108 ஆம்புலன்ஸ் பிரிவின் விழிப்பு உணர்வுத் துறை மேலாளர் பிரபுதாஸிடம் பேசினோம். ‘‘அவசரகாலத்தில் ஆம்புலன்ஸ் இல்லாமல் ஒருவர் இறப்பது என்பது, நாமெல்லாம் அவமானப்படக்கூடிய விஷயம். மேற்கண்ட அனைத்துச் சம்பவங்களும் அதிர்ச்சியளிக்கக்கூடிய, மனதால் தாங்கிக்கொள்ள முடியாதவை. சாலை சரி இல்லை, தகவல்தொடர்பு இடையூறு என்று சொல்வதெல்லாம் ஒரு காரணம் கிடையாது. உண்மையில், நோயாளிகளின் வலி நமக்குப் புரிந்தாலே போதும். ஆம்புலன்ஸ் எந்தச் சாலையும் பார்க்காது... எந்த நேரத்தையும் பார்க்காது. ஆம்புலன்ஸ் என்பது மக்களின் உயிரைக் காக்கும் வாகனம். அது அவர்களுக்காக எந்நேரமும் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்’’ என்றவரிடம்,

‘‘இதுபோன்ற சம்பவங்கள் நடக்காவண்ணம் தடுக்க எந்த மாதிரியான நடவடிக்கைகள் தமிழகத்தில் எடுக்கப்படுகின்றன’’ என்று கேள்வி எழுப்பினோம்.

‘‘இதுபோன்று தமிழகத்தில் 100 சதவீதம் நடக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், தற்போது தமிழ்நாட்டில் 787 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயங்கிகொண்டிருக்கின்றன. இதில், பச்சிளம் குழந்தைகளுக்காக 67 ஆம்புலன்ஸ் வாகனங்களும், மலை ஏற்றங்களுக்குத் தகுந்த, சாலையே இல்லாத பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்காக 78 சிறியரக வாகனங்களும் உள்ளன. இதுதவிர, சென்னை மெரீனா பீச் மணலில் செல்லக்கூடிய ஒரு ஆம்புலன்ஸ் வாகனமும் இருக்கிறது. மேலும் சாலை குறுகலான இடங்களுக்கும், வாகன நெரிசலில் விரைவாக செல்வதற்கும் இருசக்கர அவசரச் சிகிச்சை வாகனங்களும் உள்ளன.

அதுமட்டுமல்லாமல் இந்த மாத இறுதியில் 77 புது வாகனங்கள் வர இருக்கின்றன. இவைகள் எந்த நேரமும் இரவு, பகல் பாராமல் மக்களுக்காக இயங்கிக்கொண்டே இருக்கும். இதன்மூலம் 45,00,000 நோயாளிகள் பயனடைந்துள்ளனர். இதில், 28 சதவிகிதம் பேர் கர்ப்பிணிப் பெண்கள். 14,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆம்புலன்ஸ் வாகனங்களில் பிறந்திருக்கின்றன. அந்த அளவுக்கு ஒரு நோயாளிக்கு, கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையான அவசரகால மருத்துகள் மற்றும் முக்கிய உபகரணங்கள், அனைத்தும் வாகனங்களிலும் இருக்கின்றன’’ என்றார் பிரபுதாஸ்.

ஆம்புலன்ஸ் ஆமை வேகத்தில் இருக்கக் கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

- ஜெ.அன்பரசன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement