Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வங்கிக் கடனால் தற்கொலை செய்த லெனின்... மரணத்துக்கு மூலகாரணம்?

கல்விக் கடன் வாங்கி, படித்து பொறியாளர் ஆகும் கனவுடன் இருந்த லெனின்... கடன் கொடுத்த வங்கியும், கடன் வசூல் செய்து தர ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனமும் அளித்த தாளாத மனஉளைச்சலால், கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துக்கொண்டார். பலர், இதனை ஒருநாள் செய்தியாகக் கடந்து சென்றுவிட்டபோதிலும் பல உயிர்ப்புள்ள அமைப்புகள், வங்கிக்கும், அந்த நிறுவனத்துக்கும் இடையிலான ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி போராடி வருகின்றன. அந்த வகையில், மதுரையில் SFI சார்பாக மிதிவண்டி பேரணி நடத்தப்பட்டது. இதற்குத் தலைமை தாங்கிய SFI-யின் தேசிய தலைவர் V.P.சானுவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘லெனின் மரணத்துக்கு மூலகாரணம்?’’

‘‘அவரது மரணம் மட்டும் அல்ல... இன்று பல மாணவர்கள் அத்தியாவசியமான உயர்கல்விக்குக் கஷ்டப்படுவதற்குக் காரணம், 2000-ம் ஆண்டு ‘பிர்லா மற்றும் அம்பானியால்’ கொண்டு வரப்பட்ட அறிக்கை. அது பரிந்துரைப்பதின் சுருக்கம் என்னவென்றால், ‘இந்தியாவுக்குத் தேவை அறிவுசார் பாடத்திட்டமே. ஆதலால் அரசு, கல்வித் துறையில் தனியாரைத் தடையின்றிச் செயலாற்ற அனுமதிக்க வேண்டும். அரசு, கல்வித் துறையில் செலவழிப்பதை இந்த வழிமுறை குறைக்கும். அதனால், அரசு பாதுகாப்புத் துறை மற்றும் நலிவடைந்த துறையில் கவனம் செலுத்தலாம்’ என்று கூறுகிறது. இந்த அறிக்கையையே அரசும் கடைப்பிடிக்கிறது. இதில், காங்கிரஸ், பி.ஜே.பி என்ற பேதம் இல்லை. இது மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பங்களிப்பில்லாமல் அம்பானி மற்றும் பிர்லா போன்றோரால் உருவாக்கப்பட்டது. இது, அமலுக்கு வந்தபின்புதான் புதிய தலைமுறை படிப்புகளாக விளங்கப்படும் பாடத்திட்டங்கள் வந்தன. உதாரணமாக marine engineering, aeronautical engineering. இவற்றைக் கற்பிக்க பல தனியார் கல்வி நிறுவனங்களும் வந்தன. இதுபோன்ற படிப்புகளைப் பெரும்பாலும் சுயநிதி பாடத்திட்டத்தில் மட்டுமே படிக்க முடியும். இது திட்டமிட்டு நடக்கும் சதி. சமூகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள் ஏதோ ஒரு நம்பிக்கையில் கல்விக் கடன் வாங்கி பயில முயற்சிக்கும் மாணவர்களை இந்தப் பணவிழுங்கி கூட்டம் தற்கொலை வரைக்கும் தள்ளும். இதனை அரசும் கைக்கட்டி வேடிக்கை பார்க்கும். ஆஸ்திரேலிய நிலக்கரி திட்டங்களை மேற்கொள்ள அதானி நிறுவனத்துக்கு, 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை 3 சதவிகிதத்துக்கு வட்டியாகக் கொடுக்கும் இந்திய வங்கி, கல்விக் கடனுக்காக 10 சதவிகிதம் முதல் 11.10 சதவிகிதம் வரை வட்டி வசூலிக்கிறது.’’

‘‘தாழ்த்தப்பட்ட இளைஞர்கள்தான் இந்த மாதிரியான பாதிப்புக்கு உள்ளாகிறார்களா?’’

‘‘இங்கே பணம்தான் எதையும் தீர்மானிக்கும் காரணியாக உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் அனைவரும் இதுபோன்ற கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர். ஆனால் பணத்தை வசூல் செய்ய ஆட்கள் வரும்போது, குறிப்பிட்ட மாணவர் தாழ்த்தப்பட்டவர் என்று தெரிந்தால், அவரை நடத்தும்விதம் இன்னும் மோசமாகிறது.’’

‘‘ரோகித் வெமூலா - லெனின் ஒப்பிட முடியுமா?’’

‘‘இருவரும் அதிகாரவர்க்கத்தின் கோர சித்ரவதையால் தன்னையே மாய்த்துக்கொண்டவர்கள். இந்தப் புதிய கல்விக் கொள்கையே இருவர் மரணத்துக்கும் காரணம். ஊக்கத்தொகையை நிறுத்தியது ரோகித்தின் மனஉளைச்சலுக்குப் பெரும் காரணம். லெனினின் மரணத்துக்குக் காரணம் பணம்.’’

 

‘‘சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை எதிர்த்து சமீபகாலமாக குரலகள் வலுப்பெற்று வருகின்றன... அதன் அடிப்படையிலான ஒதுக்கீடு, சதியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஒரு முக்கியக் காரணி என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. அதுபற்றி?’’

‘‘சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு அரசாங்க அமைப்புகளில் மட்டுமே உள்ளது. இந்த இடஒதுக்கீடு இல்லாத தனியார் துறைகளில் சாதிய வன்முறைகள் நடைபெறவில்லை என்று நாம் கூற முடியுமா? இடஒதுக்கீடு அளித்தும் 70 வருடங்களுக்கு மேலாக ஆகியும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இன்னும் அவர்களுக்கான இடத்தைப் போராடித்தான் அடைய வேண்டியுள்ளது. இது வெட்டவெளிச்சமான உண்மை. இந்தநிலையில் இடஒதுக்கீட்டை நிறுத்தினால் அவர்களின் நிலை என்ன? ஏற்றத்தாழ்வுகளை களைய இடஒதுக்கீடு அவசியமான ஒன்று.’’

‘‘கண்ணையா குமாரை பற்றி?’’

‘‘இப்போது அவர், ஒரு சிறந்த தலைவர். கம்யூனிசக் கொள்கைகளை அவர் பேசி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கான பாதையில் அவர் சரியாக பயணித்துக்கொண்டிருக்கிறார்.’’

‘‘ஒரு களப் பணியாளராக, பெரும் மாணவக் கூட்டத்தின் தலைவராக, மாணவர்கள் மேல் திணிக்கப்படும் இந்த வன்முறைகளுக்கு எது நிரந்தரத் தீர்வாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?’’

‘‘சோசலிசம்.’’

க.விக்னேஷ்வரன்
மாணவர் பத்திரிகையாளர்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close