'ஏற்றிவிட்ட ஏணிப்படிகளை என்றைக்கும் மறக்க வேண்டாம்....!' #HappyTeachersDay | We never forget Teachers - Happy teacher's day

வெளியிடப்பட்ட நேரம்: 11:12 (05/09/2016)

கடைசி தொடர்பு:12:16 (05/09/2016)

'ஏற்றிவிட்ட ஏணிப்படிகளை என்றைக்கும் மறக்க வேண்டாம்....!' #HappyTeachersDay

'டீச்சர்...மிஸ்....அய்யா...மேம்’...இந்த வார்த்தைகளை வாழ்வில் கடந்து வந்திருக்காதவர்கள் இங்கே யாருமே இருக்க முடியாது. ஊரே பிள்ளையாரின் பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், அந்த பிள்ளையார் சுழியையே போடக் கற்றுத் தந்த மகத்தான ஆசிரியர்களுக்கும் இன்றுதான் ஒட்டுமொத்தமாக பிறந்தநாள்.

ஆம்...! இன்று செப்டம்பர் 5... ஆசிரியராய் இருந்து, குடியரசுத் தலைவராய் உயர்ந்த  சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினம். நம் வாழ்வை மாற்றிய கல்வியாளர்களைக் கொண்டாடும் ‘ஆசிரியர் தினம்’.

முதன்முதலில் தமிழின் தொடக்கமான ‘அ’ போடச் சொல்லித் தந்த அப்பா, அம்மாதான் நம்முடைய முதல் ஆசிரியர்கள். பழக்கமே இல்லாத முதல் நாள் பள்ளிக்கூடத்தில், அழும் குழந்தையை அரவணைப்போடு, இனிப்புக் கொடுத்து கல்வி போதிக்க அழைத்துச் செல்லும் ஆசிரியர்கள் இரண்டாவது பெற்றோர். 

கனிவும், கண்டிப்பும், அரவணைப்பும், புதிது புதிதாகக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களின் உற்சாகமும்தான், இன்று அப்துல்கலாம், ரகுராம் ராஜன், மயில்சாமி அண்ணாத்துரை என்று எத்தனையோ அறிஞர்களை நம்மிடையே உருவாக்கித் தந்திருக்கிறது. கைப்பிடித்து எப்படி நடக்க வேண்டும் என்பது தொடங்கி, கையெழுத்து இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதுவரை நம்மை செதுக்கியவர்கள் ஆசிரியர்கள்.


இங்கே பத்தில் எட்டு பேருக்காவது அடிக்கடி ஆசிரியர் வீட்டுச் சாப்பாடு கிடைத்திருக்கும். இன்றும் முகத்தில் கண்டிப்பையும், உள்ளத்தில் அன்பையும் வைத்துக் கொண்டு, கையில் பிரம்புடன் மாணவர்களை விரட்டி, விரட்டிப் படிக்க வைக்கும் நல்லாசிரியர்கள் நம்மிடையே இருக்கிறார்கள்.

22 வருடங்களாக ஆசிரியர் பணி செய்து, தனக்கென்று எதுவும் சேர்த்து வைத்துக் கொள்ளாமல் வறுமையில் வாடும் ஆசிரியருக்கு, தன்னுடைய மாணவன் இன்று கம்பீரமான, கெளரவமான பதவியில் இருக்கின்றான் என்கிற ஒரு தகவல் போதும்....அத்தனை பசியிலும் அவர் முகத்தில் பெருமிதத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்த!நம்முடைய உள்ளார்ந்த அறிவாற்றலைக் கண்டறிந்து ’இதுதான் உனக்கு சரியான பாதை’ என்று வழிகாட்டிய ஆசிரியர்கள்தான் இன்று நம்மில் எத்தனையோ பேர் அவரவருக்கு விருப்பமான துறைகளில், தகுதியான வேலையில் அமரக் காரணம்.

தமிழையும், கணிதத்தையும், அறிவியலையும் ஆணிவேரில் இருந்து ஆசிரியர்கள் கற்றுத் தந்திருக்காவிட்டால், இங்கு விஞ்ஞானிகளும், கணிதவியலாளர்களும், மென்பொருள் வல்லுனர்களும், பத்திரிக்கையாளர்களும், எழுத்தாளர்களும் இல்லாமலேயே போயிருப்பார்கள்.

எத்தனை மாணவர்கள் இருந்தாலும், அத்தனைப் பேரையும் தான் பெற்ற பிள்ளைகளாய் நினைத்து அறிவூட்டி வளர்த்த எல்லா ஆசிரியர்களுமே கொண்டாடப்பட வேண்டிய ‘நல்லாசிரியர்கள்’தான். உங்கள் வாழ்க்கையில் கண்டிப்பாக ஏதோ ஒரு ஆசிரியர் உந்துதலாய், உத்வேகமாய் இருந்திருப்பார்கள். இந்த ஆசிரியர் தினத்தில் அவர்களை எப்பாடு பட்டாவது தேடிக் கண்டறிந்து, ஒரு வாழ்த்தினைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அதுதான் அவர்களுக்கு மிகப்பெரிய வாழ்நாள் பரிசாய் இருக்கும். ஏற்றிவிட்ட ஏணிப் படிகளுக்கு காணிக்கை செலுத்தும் நாள் இன்று!

 

- பா. விஜயலட்சுமி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்