Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மதுரை மண்வாசனை! இளைஞரின் ஜல்லிக்கட்டு பயணம்...

ல்லிக்கட்டு நடத்த வேண்டும் என மாடுபிடி வீரர்களும், தமிழக அரசியல்வாதிகளும் மல்லுக்கட்டிக்கொண்டிருக்க, விலங்கின ஆர்வலர்கள் ஜல்லிக்கட்டுக்கு எதிரணியில் நிற்கின்றனர். இந்த சூழலில் மதுரையைச் சேர்ந்தவரும், இப்போது மும்பையில் பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞருமான அஸ்வின் குமார் ராமசுப்பு, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக  தன்னந்தனியாக லடாக்கின் உயர்ந்த மலையான ஸ்டோக் கங்கிரி-யில் 20,187 அடி உயரத்தில் பயணம் மேற்கொண்டார். பயணத்தின் போது ஜல்லிக்கட்டு குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி அசத்தியுள்ளார். அவருடன் ஒரு சந்திப்பு...
 
“உங்களுக்கு ஜல்லிக்கட்டு மேல் எப்படி ஆர்வம் ஏற்பட்டது என்று சொல்லுங்கள்?”

“ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, பள்ளிக்கல்வியை முடித்த பிறகு சென்னையில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றேன். ஒரு ஆண்டு சென்னையில் பணிபுரிந்து விட்டு  மும்பையில் உள்ள ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். பிறந்தது, வளர்ந்தது, படித்தது என எல்லாமே நகர் புறமாக இருந்தாலும் நான் பாட்டி தாத்தாவின் அரவணைப்பில் கிராமத்து மண்வாசத்துடன் வளர்ந்தவன். எனவே எனக்கு கிராமம் சார்ந்த விளையாட்டுகள் மீது எப்போதுமே ஈர்ப்பு உண்டு.  சிறுவயதில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை கண்டு கழித்திருக்கின்றேன். எனவே, ஜல்லிக்கட்டு  மீதான தடை பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.”
 
“ஜல்லிக்கட்டு குறித்து விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று எப்படி  திட்டமிட்டீர்கள்?”
 
“இந்தியாவின் கடைக்கோடியில் நடக்கும் ஒரு பிரச்னையை அதன் மற்றொரு கடைக்கோடியில் கொண்டு சொல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதற்காகவே மும்பையில் இருந்து லடாக் வரை பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். முதல் கட்டமாக‌ ஜல்லிக்கட்டு குறித்த பதாகைகளை தயார் செய்தேன்.  டெல்லி சென்று அங்கிருந்து ஸ்ரீநகருக்கு விமானம் மூலம் சென்றேன்.   நான் சென்ற சமயத்தில்தான் அதாவது ஆகஸ்ட் 12-ம் தேதி  வன்முறையான சூழல் இருந்ததால் அனைத்து இடங்களிலும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு இருந்தனர். தகவல் தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. நான் நினைத்ததை விட அங்கு இருந்த சூழ்நிலை 300 சதவிகிதம் மோசமானதாக இருந்தது. தால் ஏரியில் படகோட்டும் ஒருவரின் உதவியால் அன்று நள்ளிரவு ஒரு ஜீப்பில் ஸ்ரீநகரிலிருந்து கார்கில் சென்றேன். பிறகு அங்கிருந்து லே-விற்கு சென்றேன்.”

“ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக எங்கு விழிப்புணர்வு செய்தீர்கள்?”

லே-வில் இருந்து 39 கீ.மீ தூரத்தில் இருக்கும் கார்டுங்களா பாஸ் என்னும் இடம்தான் உலகிலேயே அதிக உயரத்தில் (17,500 அடி)  வாகனங்கள் செல்லும்  சாலை ஆகும். நான் அங்கு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பதாகைகளை ஏந்திச் சென்றேன். நான் நினைத்ததை விட‌ அதிக என்ணிக்கையிலானவர்கள் இது குறித்துக் கேட்டனர். குறிப்பாக வெளிநாட்டவர்கள் ஜல்லிக்கட்டை, ஸ்பெயினில் நடக்கும் காளை சண்டையோடு ஒப்பிட்டனர், எனவே அதற்கேற்றவாறு விளக்கமாகச் சொன்னேன்.  மேலும் அங்கிருந்த ராணுவ  வீரர்களும் நான் சொல்வதை  ஆர்வத்தோடு கேட்டனர்.”

“ஸ்டோக் கங்கிரி பயணம் எவ்வளவு சவாலானதாக இருந்தது?”

 “மூன்றாயிரம் மீட்டருக்கு அதிகமான உயரம் உள்ள மலையில், மலையேற்றம் செய்ய வேண்டுமானால் இந்திய மலையேற்ற கழகத்திடம் அனுமதி பெற வேண்டும். எனக்கு போதுமான மலையேற்ற அனுபவம் இருந்ததால் அதற்கான ஒப்புதலை எளிதாக பெற முடிந்தது. பேஸ் கேம்ப் வந்த உடன்,  இரவே எனக்கு காய்ச்சல் ஏற்பட்டது. முதலுதவி மருந்துகளை உட் கொண்டபோதும், காலையில்  காய்ச்சல்  குறையவில்லை.  மறுநாள் காலை ஆழ்ந்து யோசிக்க ஆரம்பித்தேன், இனி தொடரலாமா வேண்டாமா என்று. சில மணி நேர யோசனைக்கு பிறகு பயணத்தைத் தொடர்ந்தேன்.  காலை 5.30 மணியளவில் சூரிய உதயத்தின்போது மலையின் உச்சிக்கு அருகே நின்று பார்த்தபோது பாகிஸ்தானின் K2 என்னும் மலைச்சிகரமும், இந்தியாவின் நிலப்பரப்பும் தெரிந்தது. என்னையறியாமல் உணர்ச்சிப்பூர்வமாக  ஜன கன மன பாடலை பாடினேன். மீதி இருக்கும் 50 மீட்டரை கடப்பது அப்போதைய சூழ்நிலையில் எனக்கு தேவை இல்லை என்று தோன்றியதால் கீழிறங்க தொடங்கினேன். திட்டமிட்ட நேரத்தை விட அதிகமாக ஆனாலும் பாதுகாப்பாக கீழிறங்கிவிட்டேன்.  லே வழியாக மணாலி வந்து அங்கிருந்து டெல்லி வந்தடைந்தேன்.”

“உங்கள் பயணத்தின் மூலம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக செய்த செயலை எப்படி பார்க்கிறீர்கள்?”

“ஜல்லிக்கட்டு விவகாரத்தை பொறுத்தவரை அது படிக்காதவர்கள் மட்டுமே செய்யும், ஆதரிக்கும் ஒரு விஷயமாகவே  பார்க்கப்படுகிறது. படித்த, சமூகத்தில் நல்ல நிலையில் உள்ள பலரும் குறிப்பாக இளைஞர்களும் இதன் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் அறிந்து ஆதரித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்று இதன் மூலம் சொல்ல விரும்பினேன். நான் நினைத்தை செயல்படுத்தி இருக்கின்றேன். இந்தியாவில் உள்ள பல மலைகளுக்கும் மற்றும் நம்மை சுற்றியுள்ள நாடுகளிலுள்ள மலைகளுக்கும் செல்ல வேண்டும். எவெரெஸ்ட்டை விட சவாலானது என்று நான் நினைக்கும் அந்த  சிகரத்தை அடைவதே என் குறிக்கோள்.”

- - ஜெ.சாய்ராம்
மாணவர் பத்திரிகையாளர்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement