Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஃபேஸ்புக்கால் பாதிக்கப்பட்டோர் சங்கம்..! களம் இறங்கிய காங்கிரஸ் தலைவி


முகம் கூட தெரியாத பலருக்கு முகநூல் மூலம் பல உதவிகள் கிடைத்துள்ளதை யாரும் மறுக்க இயலாது. அதே முகநூல் இளைய சமுதாயத்தின் முகவரியை மறைமுகமாக அழித்து வருகிறது என்றால் அதுவும் உண்மையே.

இந்தியாவில் முகநூல் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகம். அதிலும் தமிழகத்தில் முகநூலிலேயே பலர் இரவு, பகல் என பாராமல் மூழ்கியிருக்கின்றனர். முகநூலில் அறிமுகம் இல்லாதவர்களின் நட்பு அழைப்புகள் தினமும் நமக்கு வந்து குவியும். அவர்கள் யார்? என்ற விவரம் கூட தெரியாமல் நண்பர்கள் வட்டாரத்தில் நாமும் இணைத்து வருகிறோம். என்னுடைய முகநூலில் இத்தனை பேர் நண்பர்களாக இருக்கிறார்கள் என்ற பெருமைக்காக இதனை பலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். முகநூலால் அறிமுகமாகி பலர் இன்று வாழ்க்கையை தொலைத்து வருகிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவலை நம்மிடம் பகிர்ந்தார் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் ஹசீனா சையத்.

"முகநூல் அறிமுகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 'நாம் பப்ளிக் வேல்ஃபர் அமைப்பு' என்ற பெயரில் ஒரு குரூப்பை நடத்தி வருகிறோம். இந்த அமைப்புக்கு சமூக வலைத்தளங்களால் பாதிக்கப்பட்டவர்கள் புகார்களை தெரிவித்து வருகின்றனர். அதில் சமீபத்தில் வந்த புகார் இது. தென்மாவட்டத்தை சேர்ந்தவர் அரசு (பெயர் மாற்றம்). இன்ஜினீயரிங் முடித்து விட்டு சென்னையில் உள்ள பிரபலமான சாப்ட்வேர் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் பணியாற்றி வந்தார். அவர் அதே பகுதியில் உள்ள ஆண்கள் விடுதியில் தங்கியிருந்தார். அப்போது விடுதியின் அருகே உள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்த வடமாநில இன்ஜினீயரிங் கல்லூரி மாணவியுடன் அரசுக்கு பழக்கம் ஏற்பட்டது. முகநூல், வாட்ஸ்அப் மூலம் இருவரும் நட்பை வளர்த்தனர். பிறகு நேரிலும் சந்தித்து பல இடங்களுக்கு சென்றனர். மாணவிக்காக வாங்கும் சம்பளத்தை கணக்கு பார்க்காமல் செலவழித்துள்ளார் அரசு. அப்போது மாணவியுடன் நெருக்கமாக இருந்ததை அவருக்கே தெரியாமல் புகைப்படமும் எடுத்துள்ளார். இதில் மாணவி சிகரெட், மது அருந்துவதை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். ஜாலி என்ற பெயரில் எடுத்த அந்த புகைப்படம், வீடியோக்கள் இப்போது மாணவியின் வாழ்க்கையில் புயலை வீசி விட்டது.

ஒருகட்டத்தில் மாணவியிடம் அரசு தன்னுடைய காதலை வெளிப்படுத்திய போது, 'நான் உங்களை ப்ரண்ட்ஸாகவே நினைத்து தான் பழகினேன்' என்று சொல்ல... அரசுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அடுத்து அரசு செய்த வேலை மாணவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள், வீடியோ என அனைத்தையும் மாணவியின் பெற்றோருக்கு இ-மெயிலில் அரசு அனுப்பினார். அதைப் பார்த்து பதறியடித்து சென்னை வந்த மாணவியின் பெற்றோர், அரசுவிடம் பேசி பார்த்தனர். ஆனால், அரசு பிடிவாதமாகவே இருந்துள்ளார். 

மாணவியோ நெருப்பில் விழுந்த புழுவாய் வேதனையில் துடித்தார். இந்த சமயத்தில் எங்களை மாணவியின் பெற்றோர் அணுகினர். உடனடியாக நாங்கள், அரசுவிடம் பேசினோம். முதலில் எதற்கும் சம்மதிக்காத அவர், மாணவியின் புகைப்படங்கள், வீடியோ எல்லாவற்றையும் எங்களிடம் காண்பித்தார். அதைப் பார்த்த போது இருவர் மீதும் தவறு இருந்தது தெரிந்தது. ஆனால் மாணவிக்கு அரசு மீது காதல் இல்லை என்பதாலும், அவரது கல்வி பாதிக்கப்பட கூடாது என்ற நோக்கத்திலும் நடவடிக்கையை எடுத்தோம். அரசு வேலை பார்க்கும் நிறுவனத்தின் அதிகாரிகளை சந்தித்து விவரத்தை சொன்னோம். வேலையை விட்டு நீக்கிவிடுவோம் என்று அவர்கள் சொன்ன பிறகே மாணவி சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் எங்களிடம் கொடுத்ததோடு மீண்டும் தொந்தரவு செய்ய மாட்டேன் என்று உறுதியளித்தார். இதுபோல பல சம்பவங்கள் இருக்கின்றன. எனவே பெண்கள், மாணவிகள், முகநூலை நல்ல செயலுக்குப் பயன்படுத்துங்கள். அறிமுகம் இல்லாதவர்களின் நட்பை தவிர்த்து விடுங்கள். அவ்வாறு முன்எச்சரிக்கையுடன் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் செயல்பட்டால் தேவையில்லாத பிரச்னைகளை தவிர்க்கலாம். முகநூலால் பாதிக்கப்பட்டவர்கள் Hazeena syed என்ற முகநூல் ஐ.டிக்கு தகவல் தெரிவிக்கலாம்" என்றார். 

இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, "16 வயதிலிருந்து 25 வயது வரையுள்ள பருவம் மிகவும் முக்கியமானது. இந்த பருவ வயதில் உள்ளவர்கள் தான் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இதை தடுக்க பெற்றோர்களின் பங்கு முக்கியமானது. கண்டிப்பு என்ற பெயரில் அவர்களை திருத்த முயல்வதை விட நண்பனாக மாறி நல்லது, கெட்டதை சொல்லி கொடுக்க வேண்டும். இந்தியாவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சத்தை தாண்டும். ஆனால் எங்களிடம் புகார் கொடுக்க யாரும் முன்வருவதில்லை. அவ்வாறு கொடுக்கப்படும் புகார்களுக்கு ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். மேலும், சமூக வலைத்தளங்களின் சர்வேர் அனைத்தும் வெளிநாடுகளில் இருப்பதால் அவர்கள் உதவி இல்லாமல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடிவதில்லை" என்றார். 
  

எஸ்.மகேஷ்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement